கமல் 21, சிவா 19, தனுஷ் 17, சிம்பு 15

கமல் 21, சிவா 19, தனுஷ் 17, சிம்பு 15

கட்டுரை 23-Jan-2015 11:36 AM IST Chandru கருத்துக்கள்

‘இது என்ன நம்பர் கணக்கு?’ என குழம்ப வேண்டாம் ரசிகர்களே... டீஸர்களுக்கு யு டியூப்பில் எவ்வளவு பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் சுருக்கமாக இப்படி குறிப்பிட்டிருக்கிறோம். இந்த வருட ஆரம்பத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பிலிருக்கும் பல படங்களின் டீஸர்/டிரைலர்கள் வெளியாகி வருகின்றன. அவற்றைப் பற்றிய ஒரு பார்வைதான் இது....

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தின் டிரைலர் கடந்த 7ஆம் தேதி வெளியானது. இந்த டிரைலரில் இடம்பெற்ற ‘சலவைக்காரனுக்கு பொண்டாட்டி மேல ஆசை... பொண்டாட்டிக்கு கழுதை மேல ஆசை’ என்ற வசனம் சலவைத் தொழிலாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்த, தற்போது அது குறித்த வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இது ஒருபுறமிருக்க இந்த ‘அனேகன்’ டிரைலர் வெளியாகி 15 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த டிரைலரை கண்டுகளித்துள்ளனர். தனுஷின் முந்தைய படமான ‘வேலையில்லா பட்டதாரி’ பட டிரைலரை ஒப்பிட்டால் இது சற்று குறைவுதான்.

கமலின் ‘உத்தம வில்லன்’ டிரைலர் பொங்கலுக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில விஷமிகள் டிரைலர் காட்சிகளை திருட்டுத்தனமாக யு டியூப்பில் பதிவேற்றம் செய்ய, சுதாரித்த கமல் டீம் ‘உத்தம வில்லன்’ டிரைலரை 12ஆம் தேதியே வெளியிட்டது. அதிலும் ஒரு சிறு குழப்பமாக கமலின் ‘உலகநாயகன் டியூப்’ என்ற சேனலிலும், சோனி மியூசிக்கின் சேனலிலும் தனித்தனியாக இந்த டிரைலர் பதிவேற்றம் செய்யப்பட பார்வையாளர்கள் எண்ணிக்கை பிரிந்தது. உலகநாயகன் டியூப்பில் 21.5 லட்சம் பார்வையாளர்களும், சோனி மியூசிக்கில் 2.7 லட்சம் பார்வையாளர்களும் இந்த டிரைலரை கண்டுகளித்துள்ளனர். மொத்தமாகப் பார்த்தால், 10 நாட்களில் கிட்டத்தட்ட 25 லட்சம் பார்வையாளர்களை நெருங்கியிருக்கிறது ‘உத்தம வில்லன்’ டிரைலர்.

சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ டிரைலருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சியும், அவருக்குப் பெருகி வரும் ரசிகர்களும், இரண்டாவது தனுஷ் தயாரிப்பில் வெளியாகும் படம் என்பது. மூன்றாவது இந்த டிரைலரில் இடம்பெற்ற அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வசனம். இவையெல்லாம் சேர்த்து இந்த டிரைலர் வெளியான 13 நாட்களிலேயே 19 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து அசத்தியிருக்கிறது. இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தனுஷின் ‘அனேகன்’ டிரைலரைவிட ‘காக்கி சட்டை’ டிரைலருக்கு எண்ணிக்கை அதிகம் என்பதுதான்.

‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன்’ என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் நடிகர் சிம்பு. பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் சிம்பு இணைந்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீஸருக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. பொங்கலன்று வெளியான இந்த டீஸர், ஒரு வாரத்திலேயே 15 லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. இத்தனைக்கும் இந்த டீஸர் வெளியிடப்பட்டிருக்கும் ‘பசங்க புரொடக்ஷன்’ யு டியூப் சேனலில் சப்ஸ்கிரைபர் எனப் பார்த்தால் மொத்தமே 3700 பேர்தான். 3 வருடங்களாக படமே வரவில்லை என்றாலும், சிம்புவிற்கு இருக்கும் வரவேற்பு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;