த தியரி ஆஃப் எவ்ரிதிங் - ஹாலிவுட் பட விமர்சனம்

த தியரி ஆஃப் எவ்ரிதிங் - ஹாலிவுட் பட விமர்சனம்

செய்திகள் 20-Jan-2015 11:06 AM IST Top 10 கருத்துக்கள்

சினிமா உலகம் எத்தனையோ நிஜ காதல்களை படமாக்கியிருக்கிறது. இதுவும் ஒரு உண்மையில் நடந்த காதல் கதைதான். அதிலும் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் காதல் கதை.

இயற்பியல் உலகில் பல புதிய விஷங்களை கண்டுபிடித்து அறிவித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் (Stephen Hawking) வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் ஹாலிவுட் படம்தான் ‘த தியரி ஆஃப் எவ்ரிதிங்’ (The Theory of Everything). ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி இயற்பியல் ஆராய்ச்சி படிக்கும் ஒரு அறிவாளி மாணவர். பார்ட்டி ஒன்றில் ஆங்கில இலக்கிய ஆய்வு மாணவியான ஜேனைச் (Jane) சந்திக்கிறார் ஹாக்கிங். கண்டதும் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.

காதலும், ஆராய்ச்சிப் படிப்பும் என ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் ஸ்டீபனின் வாழ்வில் ஒரு கருப்பு நாள் குறுக்கிடுகிறது. 21 வயது வாலிபனான ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு ‘எமையோட்ரோபிக் லேட்ரல் ஸ்கிலாரசிஸ்’ (amyotrophic lateral sclerosis) எனும் நரம்பு பாதிப்பு நோய் ஒன்று வருகிறது. அதோடு வாழ்வின் இறுதி நாட்களையும் அவர் எண்ணிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தருகிறார்கள்.

வாழ்வது கொஞ்சமாக இருந்தாலும், அது ஸ்டீபனுடன்தான் என்பதில் உறுதியாக இருக்கும் ஜேன், அவரை திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்டீபனின் முக்கிய உடல் பாகங்கள் அனைத்தும் செயலிழந்து போகின்றன. இருந்தாலும் மனம் தளராத ஜேன், ஸ்டீபனின் விலை மதிக்க முடியாத அறிவைக் கொண்டு பல புதிய விஷயங்களை இயற்பியல் உலகில் நிகழ்த்துவதற்கு உறுதுணையாக நிற்கிறாள். இருவருக்கும் அழகான 3 குழந்தைகளும் பிறக்கின்றன. தன் மகனுக்கு இசைப் பயிற்சி மேற்கொள்வதற்காக மியூசிக் டீச்சர் ஒருவரை நியமிக்கிறாள் ஜேன். ஜேனுக்கும் அவருக்கும் இடையே மெல்லிய காதலும், அன்பும் மலர்கிறது. தன்னை கவனிக்க வேண்டியிருப்பதால், ஜேனின் இலட்சியமான ஆங்கில இலக்கிய ஆய்வை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறாள் என்பதை உணரும் ஸ்டீபன் உணர்ச்சிபூர்வமான முடிவு ஒன்றை எடுக்கிறார். அது வெண்திரையில்...

நிஜ வாழ்க்கை சம்பவத்திலிருந்து ஒரு சில கற்பனை விஷயங்களையும் சேர்த்து அழகாகப் பின்னப்பட்டிருக்கிறது இந்த நெகிழ வைக்கும் காதல் காவியம். ஜேம்ஸ் மார்ஸ் (James Marsh) இயக்கியிருக்கும் இப்படத்தில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்காக எட்டி ரெட்மேனும் (Eddie Redmayne), அவரின் காதலி ஜேன் ஹாக்கிங்காக ஃபெலிசிட்டி ஜோன்ஸும் (Felicity Jones) நடித்திருக்கிறார்கள். ஒரு நடிகரின் அர்ப்பணிப்பு எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு இப்படத்தின் நாயகன் எட்டி ஒரு சிறந்த உதாரணம். ஒவ்வொரு காட்சியிலும் படிப்படியாக உடல் செயலிழந்து வருவதை தனது அற்புதமான நடிப்பின்மூலம் நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார் எட்டி. அதனால்தான் ஆஸகர், கோல்டன் குளோப் என பல விருதுகளுக்கும் அவரது பெயர் சிறந்த நடிகருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை புத்தகமாகப் படிப்பதைவிட, படக் காட்சிகளாக பார்க்கும்போது கூடுதல் கவனம் பெறுகிறது. ‘த தியரி ஆஃப் எவ்ரிதங்’ திரைப்படத்தை கண்டிப்பாக பாருங்கள். டோன்ட் மிஸ் இட்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;