டார்லிங் - விமர்சனம்

அதிகம் பயமுறுத்தவில்லை... ஆனால் சிரிக்க வைத்திருக்கிறது இந்த டார்லிங்!

விமர்சனம் 16-Jan-2015 11:41 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஸ்டுடியோ கிரீன், கீதா ஆர்ட்ஸ்
இயக்கம் : சாம் ஆண்டன்
நடிப்பு : ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, கருணாஸ், பால சரவணன், ராஜேந்திரன்
இசை : ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த்

விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். ‘டார்லிங்’... மிரட்டலா? கலகலப்பா?

கதைக்களம்

வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் இருக்கும் ஜி.வி.பிரகாஷின் மனதை மாற்றுவதற்காக அவரின் நண்பன் பால சரவணனும், நிக்கி கல்ராணியும் திட்டம் தீட்டுகிறார்கள். ஜி.வி.யுடன் இணைந்து அவர்களும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சொல்லி, ஆள் நடமாட்டமில்லாத கடற்கரை பங்களா ஒன்றிற்கு மூவரும் செல்கிறார்கள். போகும் வழியில் கருணாஸும் அவர்களுடன் கைகோர்க்கிறார். இந்த நால்வரும் அந்த பங்களாவிற்கு சென்றதும், பல அமானுஷ்யங்கள் நடக்கின்றன. ஜி.வி.யின் தற்கொலை முடிவுக்கு என்ன காரணம்? பங்களாவில் ஏன் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன? ஜி.வி.யின் தற்கொலை தடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதே இந்த ‘டார்லிங்’.

படம் பற்றிய அலசல்

தெலுங்கில் ஹிட்டடித்த ‘பிரேம கதா சித்திரம்’ படத்தின் ரீமேக்கான இப்படமும் வழக்கமான ஒரு ஹாரர் படம்தான். அதோடு சமீபகாலமாக பேய்ப்படம் என்றாலே அதில் காமெடியும் இருக்க வேண்டும் என்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் இந்த ‘டார்லிங்’கும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக பேய்ப்படங்களில் பாடல்கள் ரொம்பவும் சுமாராக இருக்கும். ஆனால் இந்த ‘டார்லிங்’கின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் என்பதால், பாடல்கள் கேட்பதற்கு சுகமாக இருக்கின்றன. ஆனால், முதல் பாதியிலேயே 4 பாடல்கள் வந்துபோவதால் கொஞ்சம் அலுப்புத்தட்டுகிறது.

முதல்பாதியைவிட இரண்டாம்பாதி சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் பயணிக்கிறது. குறிப்பாக இரண்டு காட்சிகள் மட்டுமே வந்துபோகும் ‘கோஸ்ட் கோபால் வர்மா’ ராஜேந்திரனுக்கு தியேட்டரில் மிகப்பெரிய க்ளாப்ஸ். பேய் சம்பந்தப்பட்ட திகில் காட்சிகளில் ‘அரண்மனை’, ‘யாமிருக்க பயமே’ படங்களின் ஞாபகம் வந்து போவதையும் தவிர்க்க முடியவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

முதல் படம் என்ற அளவில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஜஸ்ட் பாஸ் எடுத்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் கவனிக்க வைப்பார் என நம்புவோம்! மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் நிக்கி கல்ராணி... நிஜமாகவே அழகான ராட்சஸிதான். எக்ஸ்பிரஷன்ஸ், பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என எல்லா ஏரியாக்களிலும் ‘ஸ்கோர்’ செய்திருக்கிறார். பால சரவணனுக்கும், கருணாஸுக்கும் படம் முழுக்க வரும்படியான கேரக்டர். முடிந்தளவுக்கு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். லேசாக தலைகாட்டிச் சென்றாலும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ரசிகர்களின் மனதில் ‘வெயிட்’டாக இடம் பிடித்திருக்கிறார். ஸ்ருஷ்டி டாங்கே, கலையரசன் ஆகியோர் ‘கேமியோ’ செய்திருக்கிறார்கள்.

பலம்

1. சுவாரஸ்யமான, கலகலப்பான இரண்டாம்பாதி.
2. பாலசரவணன், கருணாஸ், ராஜேந்திரன் ஆகியோரின் காமெடிகள்
3. 2 மணி நேரத்தில் படத்தை ‘ஷார்ப்’பாக கொடுத்திருப்பது

பலவீனம்

1. கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் முதல்பாதி
2. ஒரு சில ‘நெளிய’ வைக்கும் வசனங்களும், காட்சிகளும்
3. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், பாடல்கள் அதிகம் வருவது படத்தின் ஓட்டத்திற்கு வேகத்தடையாக அமைந்திருப்பது.

மொத்தத்தில்....

புதிய கதையோ, புதிய காட்சிளோ எதுவும் இந்த ‘டார்லிங்’கில் இல்லை. ஆனால், இரண்டு மணி நேரம் பொழுதுபோக்குவதற்கு உத்திரவாதம் தருகிறது பால சரவணன், கருணாஸ், ராஜேந்திரனின் காமெடிக் கூட்டணி!

ஒரு வரி பஞ்ச் : அதிகம் பயமுறுத்தவில்லை... ஆனால் சிரிக்க வைத்திருக்கிறது இந்த டார்லிங்!

ரேட்டிங் : 4.5/10

Darling Movie Tamil Review

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முப்பரிமாணம் - டீசர்


;