உத்தம வில்லன் - டிரைலர் விமர்சனம்

உத்தம வில்லன் - டிரைலர் விமர்சனம்

கட்டுரை 13-Jan-2015 3:25 PM IST Chandru கருத்துக்கள்

உலகநாயகனை வெண்திரையில் கண்டுகளித்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டன! தற்போது ஒரே நேரத்தில் கமலின் 3 படங்கள் இறுதிக்கட்டத்திலிருந்தாலும், ‘உத்தம வில்லன்’ டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருப்பதால் இப்படம் முதலில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகி இருக்கின்றன.

‘‘என் உதிரத்தின் விதை... என் உயிர் உதிர்த்த சதை... வேறொருவனை பகவன் என பொறுத்திடுவேனா..?’’ என கமலின் கம்பீர வசனத்துடன் துவங்குகிறது 1.34 நிமிட டிரைலர். முதல்முறை பார்த்தவுடன், இப்படத்தின் மூலம் கமல் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவ்வளவு எளிதில் யாராலும் கணித்துவிட முடியாது. குறைந்தது நான்கைந்து தடவை பார்த்தபிறகுதான் ஒரு முடிவுக்கே வர முடியும். அப்படியும் இந்த டிரைலரில் கொட்டிக் கிடக்கும் ஆச்சரியங்களை முழுமையாக உணர்ந்துகொள்ள முடியாது.

‘உத்தம வில்லன்’ படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை யூகிக்கத் தொடங்கினால் இரண்டுவிதமான திரைக்கதைகள் நம் மனக்கண்ணில் விரியும். ஒன்று... கமலின் இரண்டு ஜென்மங்கள் பற்றிய திரைக்கதையாக இது இருக்கலாம். அதில் ஒரு கமல் மன்னர் காலத்தைய கூத்துக் கலைஞராகவும், இன்னொருவர் அவரின் மறுபிறவியாக வரும் நடிகராகவும் இருக்கலாம். இரண்டாவது... நடிகர் கமல், தான் வைத்திருக்கும் கூத்துக்கலைஞர் ஒருவரின் கதையை படமாக எடுப்பதற்கு முயற்சிப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இதெல்லாம் வெறும் யூகங்களே... நிச்சயம் ‘உத்தம வில்லனி’ல் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட புதிய விஷயங்கள் கொட்டிக் கிடக்கலாம்.

கமலின் பலவித கெட்அப்களைப் பற்றியும், அவரின் நடிப்பைப் பற்றியும் இனி சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஏற்கெனவே பலமுறை தன் திறமையை நிரூபித்த ஜாம்பவனாயிற்றே. நடிகர் கமலின் மனைவியாக ஊர்வசி, கமலின் தோழியாக (அல்லது காதலியாக) ஆன்ட்ரியா, கூத்துக்கலைஞராக வரும் கமலின் மேல் ஆசைகொள்ளும் நாயகியாக பூஜாகுமார், இவர்களோடு ஜெயராம், நாசர், பார்வதி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர்கள் பாலசந்தர், விஸ்வநாத் உட்பட பலரும் இந்த டிரைலரில் தலைகாட்டியிருக்கிறார்கள்.

ஜிப்ரானின் இசையில் உருவான பாடல்கள் எதுவும் டிரைலரில் இடம்பெறவில்லையென்றாலும், பின்னணி இசை மூலம் பெரிதாக கவனம் ஈர்த்திருக்கிறார். ஒளிப்பதிவு, கலை இயக்கம், நடனம் உள்ளிட்ட விஷயங்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப்போவது உறுதி!

மொத்தத்தில்... ‘உத்தம வில்லன்’ எனும் சஸ்பென்ஸ் த்ரில்லரைப் பார்க்கும் ஆவலை பன்மடங்காக்கியிருக்கிறது இந்த டிரைலர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;