‘ஐ’க்குப் பதிலாக களமிறங்கும் அனேகன், எனக்குள் ஒருவன்?

‘ஐ’க்குப் பதிலாக களமிறங்கும் அனேகன், எனக்குள் ஒருவன்?

செய்திகள் 9-Jan-2015 9:21 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் இதுபோன்ற நிகழ்வுகள் வாடிக்கையாகிவிட்டன. ஒரு படத்தின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு முன்பதிவையும் ஆரம்பிப்பார்கள்... ஆனால், ஏதாவது ஒரு ரூபத்தில் அப்படத்தின் ரிலீஸிற்கு கடைசி நேரத்தில் தடை வந்துவிடும். இதுதான் இப்போது ஷங்கரின் ‘ஐ’ படத்திற்கும் நிகழ்ந்திருக்கிறது. ‘ஐ’ படத்திற்கு நிதியுதவி செய்த ‘பிக்சார் மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை நிலுவையிலிருப்பதால் பட வெளியீட்டிற்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்கள். மனு மீதான விசாரணையின் முடிவில் ‘ஐ’ படத்தை ரிலீஸ் செய்வதற்கு மூன்று வார காலத்திற்கு இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு வரும் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், செலுத்த வேண்டிய அந்த பாக்கித் தொகையை முறைப்படி கட்டிவிட்டால் ‘ஐ’ படத்தின் மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கப்படும் என்றே சொல்கிறார்கள். இதுஒருபுறமிருக்க, ஒருவேளை ‘ஐ’ படம் ரிலீஸாவது தள்ளிப்போடப்படுவது உறுதி செய்யப்பட்டால், பொங்கல் வெளியீட்டிற்காக பல படங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சித்தார்த் நடித்திருக்கும் ‘எனக்குள் ஒருவன்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ‘ஐ’ படத்தின் சென்னை, செங்கல்பட்டு ஏரியாக்களின் விநியோக உரிமையைக் கைப்பற்றியிருக்கும் ‘ஏஜிஎஸ் நிறுவன’த்தின் கைவசமிருக்கும் ‘அனேகன்’ படத்தை அதே தேதியில் வெளியிடுவதற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள். தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு, சென்சார் வேலைகள் என அனைத்துமே முடிந்து தயாராகவிருப்பதால் பொங்கலுக்கு ‘ஐ’க்குப் பதிலாக ‘அனேகன்’ களமிறக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ படமும் ‘ஐ’ வராதபட்சத்தில் களமிறக்கப்படும் என்கிறார்கள். இரண்டொரு நாட்களில் இதற்கான இறுதி முடிவு தெரிந்துவிடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;