‘அனேகன்’ - டிரைலர் விமர்சனம்

‘அனேகன்’ - டிரைலர் விமர்சனம்

கட்டுரை 8-Jan-2015 10:59 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘அனேகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் இயக்குனர் கே.வி.ஆனந்த் கதை பற்றி பெரிதாக எதையுமே வெளிப்படுத்தவில்லை. தனுஷின் வித்தியாசமான நான்கு கெட்அப்களை மட்டுமே அதில் காட்டியிருந்தார். ஆனால், இப்போது வெளிவந்திருக்கும் ‘அனேகன்’ டிரைலர் இப்படம் எதைப் பற்றி பேசப்போகிறது என்பதை ஓரளவுக்கு கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

நாயகி அமைரா தஸ்தரை மையமாக வைத்துதான் ‘அனேகன்’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் என்பது டிரைலரில் தெளிவாகப் புரிகிறது. இப்படத்தின் கதை நான்கு காலகட்டங்களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டிருக்கலாம், அல்லது கதாநாயகியின் கற்பனையில் நான்கு வித்தியாசமான சூழ்நிலைகள் தோன்றுவதுபோல் கதை அமைக்கப்பட்டிருக்கலாம். அமைராவுக்கும், தனுஷுக்கும் இடையே இருக்கும் பூர்வ ஜென்ம காதலை மையமாக வைத்தும் இயக்குனர் கே.வி.ஆனந்த் திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம். இப்படி பல ‘லாம்’களை போட வைத்திருக்கிறது இந்த அனேகன் டிரைலர்.

‘‘காதல்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு! சேர்ந்திருந்தா காதலோட வேல்யூ புரியாது, பிரிஞ்சிருந்தா புரியும்!’’ ‘‘இந்த பாழாப்போன காதலுக்கு இதான் தலையெழுத்து!’’ என முதல்முறையாக கே.வி.ஆனந்தின் படத்தில் காதல் வசனங்கள் கவனிக்க வைத்திருக்கின்றன. ‘நண்டு’ ஜெகன் உதிர்க்கும் ‘‘தோடா... சலவக்காரனுக்கு பொண்டாட்டி மேல ஆச... பொண்டாட்டிக்கு கழுதை மேல ஆச’’ என்ற வசனம் காமெடியா? இரட்டை அர்த்தமா? என்பதை அவர்தான் விளக்க வேண்டும். ‘அனேகனி’ன் இன்னொரு ஆச்சரியம் கார்த்திக். எனர்ஜிடிக்கான அந்தகால கார்த்திக்கை மீண்டும் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் கே.வி.ஆனந்த். அவரின் கேரக்டர் இப்படத்தில் என்ன செய்யப்போகிறது என்பது இப்போதுவரை சஸ்பென்ஸ்! ஆனால், நிச்சயம் சுவாரஸ்யமாகப் படைப்பட்டிருக்கும் என்பது டிரைலரிலேயே தெரிகிறது.

தனுஷைப் பொறுத்தவரை தன் ஒவ்வொரு படத்திலும் புதிய புதிய கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ‘ஷமிதாப்’ கிளாசிக் என்றால், இந்த ‘அனேகன்’ அவருக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது. ரொமான்ஸ், ஆக்ஷன் என இரண்டு ஏரியாவிலும் புகுந்து விளையாட தோதான களத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறார் கே.வி.ஆன்ந்த்.

வழக்கம்போல் ஹாரிஸின் பின்னணி இசை, கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு, அழகான படப்பிடிப்புதளங்கள் என எல்லாமே இந்த ‘அனேகன்’ படத்திலும் இருக்கும் என்பதற்கு கட்டியம் கூறுகிறது இந்த டிரைலர்.

இந்த டிரைலரைப் பொறுத்தவரை ரசிகர்களின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றன. ‘‘கதை என்னன்னே யூகிக்க முடியல... படத்தைப் பார்க்க ரொம்ப ஆவலா இருக்கோம்!’’ என ஒரு சிலரும் ‘‘ஒண்ணுமே புரியலே... ஆனா என்னமோ இந்தப் படத்துல இருக்கு’’ எனவும், ‘‘இப்படம் ‘எ ப்யூட்டிஃபுல் மைன்ட்’, ‘கிளவ்ட் அட்லஸ்’ படங்களின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்’’ என சில ஹாலிவுட் ப்ரியர்களும், ‘‘செம த்ரில்லிங்கா இருக்கு... படத்தை கண்டிப்பா பார்க்கணும்’’, ‘‘ஷமிதாப் அளவுக்கு இல்ல... ஓ.கே.!’’ எனவும் பல கருத்துக்களை பலதரப்பு ரசிகர்களும் முன்வைத்திருக்கின்றனர்.

எது எப்படியோ படத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஒவ்வொரு ரசிகனுக்கும் இந்த ‘அனேகன்’ டிரைலர் ஏற்படுத்தியிருப்பது உண்மை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;