2015ல் வெளிவரவிருக்கும் நயன்தாராவின் 7 படங்கள்!

2015ல் வெளிவரவிருக்கும் நயன்தாராவின் 7 படங்கள்!

கட்டுரை 6-Jan-2015 2:59 PM IST Chandru கருத்துக்கள்

இரண்டாவது இன்னிங்ஸில் ஜெயிப்பது என்பது சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை ‘குதிரை கொம்பு’தான். ஆனால் தனது முதல் இன்னிங்ஸைவிட 2வது இன்னிங்ஸில்தான் அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. 3 வருட இடைவெளிக்குப் பிறகு ‘ராஜா ராணி’ மூலம் 2013ல் தமிழில் மீண்டும் களமிறங்கிய நயன்தாரா அந்த வருடத்திலேயே ‘ஆரம்பம்’ படத்திலும் நடித்தார். இரண்டுமே சூப்பர்ஹிட். அதோடு ‘ராஜா ராணி’ படத்திற்கு 2013ல் விருதுகளையும் வாங்கிக் குவித்தார் நயன்.

அதன் பிறகு கடந்த 2014ல் வெளிவந்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் நயன்தாராவின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது. கூடவே ‘அனாமிகா’வின் தமிழ் ரீமேக்கான ‘நீ எங்கே என் அன்பே’ படமும் கடந்த வருடத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களைத் தவிர 2014ல் வேறு படங்கள் வெளியாகாவிட்டாலும், அவர் ஏற்கெனவே ‘கமிட்’டாகி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 7 படங்கள் இந்த 2015ல் வெளிவருவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய ஒரு சிறு முன்னோட்டம்...

1. மாயா
‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் இந்த வித்தியாசமான ஹாரர் படத்தில் நயன்தாராவிற்கு சவாலான கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ‘நெடுஞ்சாலை’ ஆரி முக்கிய வேடமொன்றை ஏற்றிருக்கும் இப்படத்தில் ‘வல்லினம்’ அம்ஜத், ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கு சத்யா, இசைக்கு ரான் யோஹான், எடிட்டிங்கிற்கு டி.எஸ்.சுரேஷ் என ‘யூத்’ கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி அல்லது மார்ச்சில் இப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

2. நண்பேன்டா
‘இது கதிர்வேலன் காதல்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியான உதயநிதி, நயன்தாரா, சந்தானம் இந்த ‘நண்பேன்டா’விலும் இணைந்திருக்கிறது. இயக்கம் ஜெகதீஷ், இசை ஹாரிஸ், ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம். பாடல்களுக்கும், டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது.

3. மாஸ்
ஆதவன் படத்திற்கு பிறகு சூர்யாவுடன் நயன்தாரா மீண்டும் இணையும் படம் ‘மாஸ்’. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தில் நயன்தாராவோடு ப்ரணிதாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். சென்னை, ஊட்டி, குலு மணாலி, பல்கேரியா என பல இடங்களில் படப்பிடிப்பு முடிந்திருக்கும் இப்படம் கோடைவிடுமுறையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் பொங்கலுக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4. தனி ஒருவன்
‘ஜெயம்’ ராஜாவின் இயக்கத்தில் தம்பி ‘ஜெயம்’ ரவி நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா முதல்முறையாக போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார். இவர்களோடு முக்கிய வேடங்களில் அரவிந்த்சாமியும், கணேஷ் வெங்கட்ராமும் நடிக்கிறார்கள். சென்னை, பெங்களூரு, ஹைதரபாத், ரிஷிகேஷ், முசௌரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்திருக்கும் ‘தனி ஒருவன்’ படத்தின் வேலைகள் 60 சதவிகிதத்திற்கும் மேல் முடிந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ‘ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் ’ நிறுவனம் தயாரிக்கும் இப்படமும் கோடை விடுமுறைக்கு வெளிவந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

5. இது நம்ம ஆளு
‘வல்லவன்’ படத்திற்குப் பிறகு சிம்புவுடன் மீண்டும் நயன்தாரா இணைந்து நடிக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சிம்பு தயாரிக்கும் இப்படத்தில் அவரின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆன்ட்ரியா, சூரி, சந்தானம் ஆகியோரும் நடித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் பொங்கலன்று வெளிவருகிறது. சிம்புவின் ‘வாலு’ படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படத்தைத் தொடர்ந்து சிறிது இடைவெளிக்குப் பிறகு ‘இது நம்ம ஆளு’ வெளியாகுமாம்.

6. நானும் ரௌடிதான்
தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ‘போடா போடி’ விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ‘காது கேளாதவர்’ கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இசை அனிருத், ஒளிப்பதிவு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ். பாதிக்கும்மேல் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படத்தை மே மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

7. பாஸ்கர் தி ராஸ்கல்
4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நயன்தாரா மலையாளத்தில் நடிக்கும் இப்படத்தின் ஹீரோ மம்முட்டி. சித்திக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியிருக்கிறது. இந்த ஆக்ஷன் த்ரில்லர் படமும் இந்த வருடத்தில் கண்டிப்பாக வெளியாகிவிடுமாம்.

சமீபகால தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஒருவருக்கு ஒரே வருடத்தில் இத்தனை படங்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்றிருக்கும் நயன்தாராவிற்காக நிச்சயம் இந்த வருட விருதுகள் பல இப்போதே காத்திருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;