2014ல் லாபம் தந்த ‘டாப் 10’ ஹிட் படங்கள்!

2014ல் லாபம் தந்த ‘டாப் 10’ ஹிட் படங்கள்!

கட்டுரை 2-Jan-2015 5:07 PM IST Chandru கருத்துக்கள்

சினிமா என்பதும் ஒரு வியாபாரமே. அந்த வகையில், ஒரு படம் என்பது அதன் தயாரிப்பாளர், அதை வாங்கி விநியோகம் செய்யும் விநியோகஸ்தர், அதனை வெளியிடும் திரையரங்க உரிமையாளர், காசு கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகன் என அத்தனை பேரையும் திருப்திப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். அப்படிப்ப்பட படங்களையே உண்மையான ‘ஹிட்’ என்று சொல்லாம். 200க்கும் மேற்பட்ட படங்கள் கடந்த 2014ல் வெளியாகியிருந்தாலும் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லாபம் தந்த படங்கள் என்று பட்டியலிட்டால் 20 படங்கள்கூட தேறாது. அப்படிப்பட்ட படங்களிலிருந்து 2014ஆம் ஆண்டில் லாபம் தந்த ‘டாப் 10’ ஹிட் படங்களின் பட்டியலைத்தான் இங்கே கொடுத்திருக்கிறோம்.
(பட்ஜெட்டைவிட மிகஅதிக விலைக்கு விற்கப்பட்டு, ஆனால் எதிர்பார்க்கப்பட்ட தொகையை சம்பாதிக்காத ஒரு சில படங்களும் உண்டு. அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை).

10. பிசாசு
வருடக் கடைசியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ‘பிசாசு’ படம் எதிர்பார்த்ததைவிட ‘ஏ’ சென்டர்களில் அதிக கலெக்ஷன் செய்தது. பாலாவின் தயாரிப்பு, மிஷ்கினின் இயக்கம் என்பதோடு ‘பேய்ப்படம்’ என்றொரு காரணமும் இப்படத்தின் வசூலுக்கு முக்கிய காரணம். அதோடு மீடியாக்கள், சமூக வலைதளங்களில் இப்படம் குறித்து வெளிவந்த விமர்சனங்களும் பாசிட்டிவாக அமைய, தயாரித்தவர்களுக்கும், வெளியிட்டவர்களுக்கும் ஓரளவு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது எனலாம்.

9. முண்டாசுப்பட்டி
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் படங்கள் என்றாலே குறைந்த அளவுக்காவது லாபம் கிடைக்கும் என்றொரு நம்பிக்கையை இந்த ‘முண்டாசுப்பட்டி’ படமும் நிரூபித்தது. 80களில் நடக்கும் வித்தியாசமான கதைக்களம், நகைச்சுவையான காட்சிகள், ரசிக்க வைத்த பாடல்கள் என ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டுக்களைப் பெற்றது இப்படம். பி, சி சென்டர்களைவிட ஏ சென்டரில் கொஞ்சம் கூடுதல் லாபம் கொடுத்தது இப்படம்.

8. சதுரங்க வேட்டை
டிரைலர் மூலம் கவனம் பெற்ற இப்படம், ரிலீஸுக்குப் பின்னர் மீடியாக்களின் பாசிட்டிவ்வான விமர்சனங்களால் மேலும் அதிக வரவேற்பைப் பெற்றது. அதோடு படம் பார்த்த ரசிகர்களும் வெகுவாகப் பாராட்ட ‘சஸ்பென்ஸ் ஹிட்’ அடித்தது இப்படம். மனோபாலாவின் முதல் தயாரிப்பான இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கி சரியான முறையில் பப்ளிசிட்டி செய்தததும் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். ‘நட்டி’ நடராஜின் நடிப்பும், வசனங்களும் படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. இப்படத்திற்கும் பி,சி சென்டரைவிட ஏ சென்டரில் வசூல் அதிகம்.

7. நாய்கள் ஜாக்கிரதை
3 வருட காத்திருப்பிற்கு பலனாக நல்ல வெற்றியை ருசித்தார் சிபிராஜ். தனக்கேற்ற சரியான கதையை தேர்வு செய்தது, அதை அவரே தயாரித்தது, குழந்தைகளைக் கவரும் வகையில் நாய்க்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்தது என இப்படத்தின் வெற்றி நன்கு திட்டமிடப்பட்டு நிகழ்ந்திருக்கிறது. விமர்சனங்கள் இருவேறாக இருந்தபோதும், குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இந்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்திற்கு கைபிடித்து இழுத்து வந்தததால் படம் எதிர்பார்த்ததைவிட நல்ல வசூல் கொடுத்தது.

6. கோலி சோடா
‘சின்னப் பசங்களை வைத்து பெரிய வெற்றியை ருசித்த படம்’ என்று அனைவராலும் புகழப்பட்ட படம்தான் இந்த கோலி சோடா. இப்படத்தை எவ்வளவு சிக்கனமாக உருவாக்க முடியுமே அவ்வளவு சிக்கனமாக உருவாக்கினார் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய விஜய் மில்டன். ஒரு படத்தின் வெற்றிக்கு ஹீரோ மட்டுமே காரணமல்ல, சுவாரஸ்யமான திரைக்கதையும் எவ்வளவு முக்கியம் என்பதை இப்படத்தின் வெற்றி நிரூபித்தது. இப்படம் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் விநியோகமும், பப்ளிசிட்டியும்!

5. யாமிருக்க பயமே
இந்த வருடம் பேயை வைத்து கல்லா கட்டிய நிறுவனங்களில் ‘ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்’டும் ஒன்று. வழக்கமான பேய்ப்படங்களிலிருந்து வித்தியாசமாக எதையும் இப்படம் செய்துவிடவில்லை. ஆனால், இப்படத்தின் காமெடியும், அதில் நடித்தவர்களின் நடிப்பும் பெரிதாக ரசிகர்களைக் கவரவே படம் ‘திடீர்’ ஹிட் அடித்தது. ஹ்யூமர், கிளாமர், ஹாரர் இது மூன்றும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏ,பி,சி என மூன்று சென்டர்களிலுமே நல்ல லாபம் கொடுத்தது இப்படம்.

4. அரண்மனை
சுந்தர்.சி படம் என்றால் பி,சி சென்டர்களில் போட்ட பணத்தை எளிதாக எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையை இப்படமும் காப்பாற்றியது. ஆனால் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக வசூலைக் குவித்து நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்தது இப்படம். சின்ன சின்ன ஊர்களில் மட்டுமின்றி சென்னை போன்ற பெருநகரங்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹியூமருக்கு சந்தானம் கூட்டணி, கிளாமருக்கு லக்ஷ்மி ராய், ஆன்ட்ரியா, ஹாரருக்கு ஹன்சிகா என ‘பேய் டிரென்டை’ சரியாகக் கையாண்ட சுந்தர்.சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. தியேட்டர்களில் குடும்பம் குடும்பமாக வந்து இந்த வருடம் பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

3. மஞ்சப்பை
இப்படம் மிகப்பெரிய வெற்றி சொன்னால், ஃபேஸ்புக், ட்விட்டரில் விமர்சனங்களைப் படிக்கும் சிட்டி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை! ஒரு படத்தின் வெற்றிக்கு ‘ஏ’ சென்டர் ஆடியன்ஸின் வரவேற்பைவிட, பி,சி சென்டர் ஆடியன்ஸின் வரவேற்பு எவ்வளவு முக்கியம் என்பதற்கு இப்படத்தின் வெற்றியே சான்று. சுமாரான பட்ஜெட், சாதாரண ரசிகனையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட எளிமையான திரைக்கதை, தேவையான அளவு பப்ளிசிட்டி என சரியான முறையில் களமிறக்கப்பட்ட இப்படத்திற்கு யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு லாபம் கிடைத்தது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் இந்த வருட 3வது வெற்றிப்படம் இந்த ‘மஞ்சப்பை’.

2. கத்தி
சூப்பர்ஹிட் தந்த ‘துப்பாக்கி’ கூட்டணியின் படமென்றால் அப்படத்திற்கு எதிர்பார்ப்பு எப்படியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த வருடத்தின் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்த படம் நிச்சயம் இதுதான். அதோடு படம் வெளிவருவதற்கு முன்பு எழுந்த எதிர்ப்பினால், மீடியாக்களில் இப்படத்தின் செய்திகள் அதிகம் இடம்பெற்று தமிழகமெங்கும் இப்படம் கவனம் பெற்றதும் ஒரு காரணம் எனச் சொல்லலாம். விஜய்யின் மாஸ், ஏ.ஆர்.முருகதாஸின் பரபரப்பான திரைக்கதை, அனிருத்தின் இசை என படம் பெரிய வசூலைக் குவிக்க இவையும் காரணம். ‘துப்பாக்கி’ அளவிற்கு இப்படம் லாபம் சம்பாதித்துக் கொடுக்கவில்லை என்றாலும் நிச்சயம் நல்ல வசூல் செய்த படம் என்பதை மறுப்பதற்கில்லை.

1. வேலையில்லா பட்டதாரி
‘இதுதான் உண்மையான ஹிட்’ என தாராளமாகச் சொல்லும் அளவுக்கு அமைந்தது இந்த விஐபியின் வெற்றி. தனுஷின் அட்டகாசமான நடிப்பு, சுவாரஸ்யமான காட்சியமைப்புகள், இன்ஜினியரிங் மாணவர்களிடம் இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு, அனிருத்தின் சூப்பரான பாடல்கள், விவேக்கின் காமெடி என ஒரு மாஸ் படத்தின் வெற்றிக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் இப்படத்தில் சரிவிகித்தில் கொடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக இப்படத்தின் பாடல்களுக்கு முதலில் கிடைத்ததைவிட, படம் ரிலீஸிற்குப் பின்பு பெரிய அளவு வரவேற்பு கிடைத்தது. வேல்ராஜின் இயக்கமும், வசனமும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது. ‘ரிப்பீட் ஆடியன்ஸை’ சம்பாதித்த இந்த வருடத்தின் ஒரே படம் என இதைத்தான் சொல்ல வேண்டும். தயாரித்தவர்கள், விநியோகம் செய்தவர்கள், திரையிட்டவர்கள், படம் பார்த்தவர்கள் என அனைவரையும் திருப்திப்படுத்திய படம் என்பதால் எளிதாக இப்படம் இந்த வருடத்தின் முதல் இடத்தைப் பிடித்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்


;