‘என்னை அறிந்தால்’ - இசை விமர்சனம்

‘என்னை அறிந்தால்’ - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 1-Jan-2015 7:10 PM IST Top 10 கருத்துக்கள்

கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணியில் ஒரு ஆல்பம். அதுவும் முதல்முறையாக ‘தல’ அஜித்துடன்.... அப்படியென்றால் ஆல்பத்திற்கான எதிர்பார்ப்பு எப்படியிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ‘என்னை அறிந்தால்’ ஆல்பம் எப்படியிருக்கிறது?

ஏன் என்னை...
பாடியவர்கள் : சுனிதா சாரதி, கரீஷ்மா ரவிச்சந்திரன்
பாடலாசிரியர் : தாமரை


எலக்ட்ரிக் கிடாருடன், டிரம்மின் அதிர்வெடியும் சேர்ந்துகொள்ள ‘இன்டர்நேஷனல்’ டச்சோடு இப்பாடலை உருவாக்கியிருக்கிறார் ஹாரிஸ். வெஸ்டர்ன் பாடலுக்கேற்ற உணர்வைக் கொடுத்திருக்கின்றன சுனிதா, கரீஷ்மாவின் ‘ஆண்மை’ ததும்பும் குரல்கள். பாடலின் இடையே வரும் சாக்ஸபோன் இசை பாடலின் கூடுதல் பலம். அக்மார்க் கௌதம்-ஹாரிஸ் கூட்டணிப் பாடல்!

மழை வரப்போகுதே...
பாடியவர்கள் : கார்த்திக், எம்ஸீ ஜெஸ்
பாடலாசிரியர் : தாமரை


கேட்டவுடன் ‘பட்’டென பிடித்துப்போகும் ரகம். 10 வருடங்களுக்கு முந்தைய ஹாரிஸின் பாடலை மீண்டும் கேட்டதுபோல் துள்ளலாக இருக்கிறது. கார்த்திக்கின் எனர்ஜியான குரலும், தாமரையின் புத்தும்புது வரிகளும் இந்த ‘ஜாஸ்’ ரக ஃபாஸ்ட் மெலடியை மேலும் அழகாக்கியிருக்கிறது. பாடலின் நடுவே வரும் எம்ஸீ ஜெஸின் வாய்ஸ் ஹாரிஸ் டச்!

உனக்கென்ன வேணும் சொல்லு...
பாடியவர்கள் : பென்னி தயாள், மஹதி
பாடலாசிரியர் : தாமரை


‘இதைத்தான் எதிர்பார்த்தோம்!’ என சொல்ல வைத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அற்புதமான மெலடி. ரொம்பவும் மென்மையான பின்னணி இசையோடு பென்னி தயாளின் குரலை கேட்பது சுகமோ சுகம்! கூடவே மஹதியின் மயக்கும் ஹம்மிங்கும் சேர்ந்து கொண்டால் சொல்லவும் வேண்டுமா...? தாலாட்டியிருக்கிறார்கள். ‘‘ஒரு வெள்ளிக் கொலுசு போல இந்தப் பூமி சிணுங்கும் கீழ... அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல...’’ என்ற வரிகளின் கோரஸோடு இப்பாடல் முடியும்போது, நம் கை தன்னிச்சையாக ‘ரீப்ளே’ பட்டனுக்குச் செல்கிறது. ஆல்பத்தின் டாப் பாடல் இதுதான் என தாராளமாகச் சொல்லலாம்.

என்னை அறிந்தால்...
பாடியவர்கள் : தேவன் ஏகாம்பரம், மார்க் தாமஸ், அபிஷேக்
பாடலாசிரியர் : தாமரை


‘என்னை அறிந்தால்...’ தீம் மியூசிக்கில் உருவாகியிருக்கும் மாஸ் பாடல். அனேகமாக ‘டைட்டில்’ பாடலாகவோ, என்ட் கார்டு பாடலாகவோ இருக்கலாம். ‘வேட்டையாடு விளையாடு’வில் ராகவனின் கேரக்டரைப்பற்றி சொல்லும் பாடலான ‘கற்க கற்க...’ பாடல் பாணியில் இதை சத்யதேவ் கேரக்டருக்காக உருவாக்கியிருக்கிறார்கள். பாடல் முழுக்க டெக்னோ பீட் இசை அதிரடிக்கிறது. ‘எடை போல கல்லும் இல்லை... எதிர்பார்க்கும் சொல்லும் இல்லை... இவன் யாரே என்றே சொல்ல உயிரோடு யாரும் இல்லை’ என வரிகளில் தல ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறார் தாமரை.

அதாரு... அதாரு...
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், கானா பாலா
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்


ஏற்கெனவே சிங்கிள் டிராக்காக வந்து எஃப்.எம்.களில் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் பாடல். பாடல் வந்தபோது இருந்ததைவிட இப்போது அதிகம் பரிச்சயமாகியிருப்பதால், பாடலின் கோரஸ் தொடங்கியதுமே உதடுகள் ‘ஆட்டோமேடிக்’காக அந்த டியூனை விசிலடிக்கத் தொடங்குகின்றன. இந்தப்பாடல் திரையில் ஒலிக்கும்போது கண்டிப்பாக யாரும் பாடலைப் பார்க்க முடியாது. திரைக்கு முன்பாக குத்தாட்டம் போடும் ‘தல’ ரசிகர்களைத்தான் பார்த்தாக வேண்டும்.

மாயா பஜார்...
பாடியவர்கள் : ஆலாப் ராஜு, ப்ரியா சுப்ரமணியன், வேல்முருகன், கிருஷ்ணா ஐயர்
பாடலாசிரியர் : தாமரை


‘அட... ஹாரிஸின் ஆல்பத்தில் இப்படியும் ஒரு பாடலா..?’ என ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் மனிதர். நிச்சயம் இது ஹாரிஸ், கௌதமின் புது முயற்சிதான். சரணம், பல்லவி என தனித்தனியாகப் பிரிக்காமல் வெஸ்டர்ன், அந்தக்கால கிளாசிக்கல், மாயாபஜாரின் தீம் டியூனுடன் கூடிய ஒரு லோக்கல் குத்து என கலந்துகட்டி அடித்திருக்கிறார்கள். அனேகமாக த்ரிஷாவின் மேடை நிகழ்ச்சி ஒன்றிற்காக இடம்பெறும் பாடலாக திரையில் தோன்றலாம். நிச்சயம் கண்களுக்கும், காதுகளுக்கும் வித்தியாச விருந்து காத்திருக்கிறது இப்பாடலில்.

இதயத்தை ஏதோ ஒன்று...
பாடியவர்கள் : சின்மயி
பாடலாசிரியர் : தாமரை


மெலிதான, ரசனையான பியானோ இசையுடன் தொடங்குகிறது இந்த மெலடி. ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடலின் ‘ஃபிமேள் வெர்ஷனா’ன இதை சின்மயின் குரலில் கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். கண்களை மூடி அமைதியாக பாடலைக் கேட்டால் உடம்பு அனிச்சையாக புல்லரிக்கிறது. காதல் தாலாட்டு!

மொத்தத்தில்... கௌதம்-ஹாரிஸ் கூட்டணி தங்களின் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு சூப்பரான ஆல்பத்தோடு மீண்டும் திரும்பியிருக்கிறார்கள். தல ரசிகர்கள் மட்டுமின்றி இசைக்காதலர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியிருக்கிறது இந்த ‘என்னை அறிந்தால்’ ஆல்பம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;