2014ன் ‘டாப் 10’ சிறந்த படங்கள்!

2014ன் ‘டாப் 10’ சிறந்த படங்கள்!

கட்டுரை 31-Dec-2014 5:27 PM IST Top 10 கருத்துக்கள்

பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்பதைத் தாண்டி விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும், திரையுலக பிரபலங்களிடமும் பரவலான பாராட்டுக்களைப் பெற்ற படங்கள் என்பது தனிப்பட்டியல். அந்த பட்டியலிலிருந்து சிறந்த 10 படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம். ரிலீஸ் தேதி அடிப்படையில் அவற்றை இங்கே கீழே வரிசைப்படுத்தியிருக்கிறோம்.

1. கோலிசோடா (ஜனவரி 24)

மாஸ் படம் கொடுப்பதற்கு முன்னணி ஹீரோ தேவையில்லை.... நல்ல கதையும், பரபரப்பான திரைக்கதையும் இருந்தால் போதும். சின்னப் பசங்களை வைத்து கூட மாஸ் படம் கொடுக்கலாம் என்பதற்கு உதாரணம் இந்த ‘கோலி சோடா’. விஜய் மில்டன் இயக்கிய இப்படத்தில் ‘பசங்க’ படத்தில் நடித்த 4 சிறுவர்கள் ஹீரோவாக நடித்திருந்தார்கள். ‘ரஃப் நோட்’ நிறுவனம் தயாரித்த இப்படத்தை வாங்கிய ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் சரியான முறையில் பப்ளிசிட்டி செய்து பெரிய வசூல் சம்பாதித்தது. அதோடு ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரிடமும் பாராட்டுக்களை அள்ளிக்குவித்தது இந்த ‘கோலி சோடா’.

2. பண்ணையாரும் பத்மினியும் (ஃபிப்ரவரி 7)

குறும்படமாக ஜெயித்து, பின்னர் வெள்ளித்திரைக்கு மாற்றப்பட்ட இப்படம் வசூல்ரீதியாக பெரிதாக சாதிக்கவில்லையென்றாலும் பரவலான பாராட்டுக்களைப் பெற்றது. ‘மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்த இப்படத்தை குறும்படத்தை இயக்கிய அருண் குமாரே இயக்கியிருந்தார். பத்மினி கார் ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, பண்ணையாராக நடித்திருந்தார் ஜெயப்பிரகாஷ். காருக்கும் ஹீரோவுக்குமான நேசம், பண்ணையாருக்கும் அவரது மனைவிக்குமான பாசம், மனதை மயக்கும் பாடல்கள் ஆகியவை இப்படத்தின் ப்ளஸ்.

3. தெகிடி (ஃபிப்ரவரி 27)

புதியவர்களை தேடிக் கண்டுபிடித்து களமிறக்குவதில் பெயர்பெற்ற ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்த இப்படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் இயக்கியிருந்தார். இன்ஷூரன்ஸ் பாலிஸிகளில் நடக்கும் ‘தில்லு முல்லு’ வேலைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த த்ரில்லர் படத்தில் அஷோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர். பரபரப்பான திரைக்கதை, யூகிக்க முடியாத ட்விஸ்ட்டுகள், சூப்பரான பாடல்கள் என 2014ல் பலருக்கும் பிடித்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது இந்த ‘தெகிடி’.

4. குக்கூ (மார்ச் 20)

பார்வையற்றவர்களின் உலகத்தை படம் பிடித்துக் காட்டிய இந்த ‘குக்கூ’வில் இடம்பெற்ற தமிழ், சுதந்திரக்கொடியின் காதல் உணர்வுகள் இன்னமும் ரசிகர்கள் நெஞ்சில் நீக்கமற இடம்பிடித்திருக்கிறது. ‘வட்டியும் முதலும்’ எழுத்தாளர் ராஜு முருகன் இயக்குராக அறிமுகமான இப்படத்தை ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டியோஸ்’, ‘தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. தினேஷ், மாளவிகா ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவான மனதை மயக்கும் பாடல்கள் இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

5. முண்டாசுப்பட்டி (ஜூன் 13)

80களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தின் கலகலப்பான திரைக்கதையால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அறிமுக இயக்குனர் ராம் இயக்கிய இப்படத்தை ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சி.வி.குமார் தயாரித்தார். சீன் ரோல்டன் இசையமைப்பில் உருவான பாடல்களும் படத்திற்கு பக்கபலமாக அமைய, ரசிகர்களின் ஃபேவரிட் பட்டியலில் எளிதாக இடம்பிடித்தது இந்த ‘முண்டாசுப்பட்டி’.

6. சதுரங்க வேட்டை (ஜூலை 18)

வசனங்களாலேயே ஒரு படத்திற்கு உயிர் கொடுக்க முடியும் என நிரூபித்த படம். ‘ஒரு பொய் சொன்னா அதுல உண்மையும் கலந்திருக்கணும்’, ‘இது ரொம்ப ரேர் பீஸ்’, ‘மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்’, ‘ராஜாவோட வேலை... வேலை செய்றதில்லை... வேலை வாங்குறது’ என படம்முழுக்க கைதட்டல்கள் வாங்கிய வசனங்கள் ஏராளம். தமிழ்நாட்டில் நடக்கும் ரியல் லைஃப் பித்தலாட்டங்களை மையமாக வைத்து உருவாகிய இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்க, நடிகர் மனோபாலா தயாரித்தார். ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிட்டு திருப்திகரமான வசூலையும் சம்பாதித்தது. ஒளிப்பதிவாளர் ‘நட்டி’ நட்ராஜ் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

7. ஜிகர்தண்டா (ஆகஸ்ட் 1)

‘பீட்சா’ மூலம் ரசிகர்களை பீதிக்குள்ளாக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ‘ஜிகர்தண்டா’ மூலம் ஜில்லிட வைத்தார். ஒரு படைப்பாளி ரவுடியாகவும், பிரபல ரவுடி நடிகராகவும் மாறும் இப்படத்தின் மாறுபட்ட கதைக்களம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. சித்தார்த், லக்ஷ்மி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை ‘குரூப் கம்பெனி’ நிறுவனம் தயாரித்தது. பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, கலை இயக்கம் என இப்படம் டெக்னிக்கலாக பெரிய அளவில் பேசப்பட்டது.

8. கதை திரைக்கதை வசனம் இயக்கம் (ஆகஸ்ட் 15)

தான் களமிறங்கிய இரண்டாவது இன்னிங்ஸில் பார்த்திபன் செஞ்சுரி அடித்த படம். இன்றைய இளம் இயக்குனர்களுக்கு மத்தியிலும் தன்னால் அவர்களைப்போலவே வித்தியாசமாக சிந்தித்து வெற்றிபெற முடியும் என பார்த்திபன் இப்படத்தின் மூலம் நிரூபித்தார். வழக்கமான பார்த்திபன் டச் காட்சிகளுடன், ஒரு திரைப்படத்தின் கதையை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தினார்கள். ரசிகர்கள், விமர்சகர்கள், பிரபலங்கள் என பலரிடமும் இப்படம் பாராட்டுக்களை வாங்கிக் குவித்தது.

9. மெட்ராஸ் (செப்டம்பர் 26)

‘அட்டகத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் ‘மாஸ்’ ஹீரோவான கார்த்தி கதையின் நாயகனாக நடித்து அசத்தியிருந்தார். வடசென்னை அரசியல், மனதை மயக்கும் காதல், உயிரையும் கொடுக்கும் நட்பு என ரசிகர்களின் மனதில் பெரிய மதில் சுவராக இடம் பிடித்தது இந்த ‘மெட்ராஸ்’. ஒரு படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு இப்படத்தை பலரும் உதாரணம் காட்டினார்கள். சந்தோஷ் நாராயணின் சூப்பர்ஹிட் பாடல்கள், அட்டகாசமான பின்னணி இசை, ஜி.முரளியின் அற்புதமான ஒளிப்பதிவு, யதார்த்தமான செட் என சரியான கலவையோடு இப்படத்தை உருவாக்கியிருந்தது ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம்.

10. காவியத்தலைவன் (நவம்பர் 27)

‘வெயில்’, ‘அங்காடித்தெரு’, ‘அரவான்’ என வித்தியாசமான படங்களாக கொடுத்து வந்த வசந்தபாலனின் அடுத்த படைப்பு ‘காவியத்தலைவன்’. இப்படத்தின் நாயகர்கள் சித்தார்த், ப்ரித்திவிராஜ். ஆனால் உண்மையான கதாநாயகனாக ஜொலித்தவர் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானே! நாடக நடிகர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த ஃபீரியட் ஃபிலிமிற்கு அவரின் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் பலமாக அமைந்திருந்தன. வசூல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தபோதும் பாராட்டுக்களையும், நல்ல விமர்சனங்களையும் பெறத் தவறவில்லை ‘காவியத்தலைவன்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;