5 புதிய படங்களை வீட்டுக்கு கொண்டு வருகிறார் சேரன்!

5 புதிய படங்களை வீட்டுக்கு கொண்டு வருகிறார் சேரன்!

செய்திகள் 31-Dec-2014 11:02 AM IST VRC கருத்துக்கள்

திரைப்படம் வெளியாகும் அன்றே அந்தப் படத்தின் ஒரிஜினல் டி.வி.டி.க்களை வீடுகளுக்கு நேரடியாக விற்பணை செய்யும் இயக்குனர் சேரனின் புதிய முயற்சி ‘C2H’ (சினிமா டூ ஹோம்). இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த சில மாதங்களாக தீவிரமாக செயல்பட்டு வந்த சேரன், அதனை பொங்கலை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறார். இந்த முயற்சியின் முதல் திரைப்படமாக சேரன் இயக்கி தயாரித்துள்ள ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைபடம் ‘C2H’-ன் முதல் வெளியீடாக வரவிருக்கிறது. அதே தினம் இப்படத்தை தமிழகம் முழுக்க 75 தியேட்டர்களில் வெளியிடவும் இருக்கிறார் சேரன்.

தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக டி.வி.டி.க்களை விநியோகம் செய்ய, டி.வி.டி. பஜார் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார் சேரன். இந்த அமைப்பு மூலம் தமிழகம் முழுக்க மக்களிடத்தில் சர்வே நடத்தி தமிழகத்தில் 154 விநியோகஸ்தர்கள், 5000 டீலர்களையும் நியமித்துள்ளார் சேரன். இந்த அமைப்பு மூலம் மக்களிடத்தில் சர்வே நடித்தியதில் 64 சதவிகிதம் மக்கள் ‘C2H’-விற்கு ஆதரவு தெரிவித்து, டி.வி.டி.க்களை வாங்க உறுதி அளித்துள்ளார்களாம்.

வாரத்திற்கு ஒரு படத்தின் ஒரிஜினல் டி.வி.டி.யை வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்யும் இந்தத் திட்டத்தில் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை தொடர்ந்து பார்த்தி பாஸ்கர் இயக்கத்தில், ஜெய், பூர்ணா நடித்துள்ள ‘அர்ஜுனன் காதலி’, சசிதரன் இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், பூர்ணா ஜோடியாக நடித்துள்ள ‘வாராயோ வெண்ணிலாவே’, பாலன் இயக்கத்தில், புதுமுகங்கள் நடித்துள்ள ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ மற்றும் ரோகினி இயக்கத்தில் பசுபதி, சேரன் நடித்துள்ள ‘அப்பாவின் மீசை’ ஆகிய படங்கள் வரவிருக்கிறது.

‘C2H’- முறையில் வீடுகளுக்கு நேரடியாக திரைப்படங்களின் டி.வி.டி.க்களை வழங்கவிருப்பதால் அப்படங்கள் குடும்பத்துடன் இருந்து பார்க்கக் கூடிய படங்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படங்களை தேர்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளார் சேரன். இந்த குழுவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், இரண்டு பத்திரிகையாளர்கள், இரண்டு வழக்கறிஞர்கள் என பலர் இடம் பெற்றிருக்கிறார்களாம்.

அத்துடன் ‘C2H’-ல் பணிபுரிபவர்கள் வீடு விடாக சென்று டி.வி.டி.க்களை வழங்கும்போது வாடிக்கையாளர்களிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சி முகாமையும் சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை, சேலம், விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறாராம் சேரன்.

‘C2H’ தமிழகத்தில் வெளியிடப்படும் படங்களை தமிழர்கள் வசிக்கும் இதர மாநிலங்களில் செட்-டாப் பாக்ஸ் மூலம் வெளியிடவும் ஏற்பாடுகளை செய்து வருகிறாராம் சேரன். ஒவ்வொரு படமும் 25 லட்சம் டி.வி.டி.க்களுக்கு குறையாமல் தயாரிக்க திட்டமிட்டுள்ள சேரன், ஒரு டி.வி.டி.க்கு நிர்ணயித்துள்ள விலை வெறும் 50 ரூபாய் தான்! பெரிய நடிகர்கள், நடிகைகள் நடித்த படம் என்றால் அந்த படத்தின் விலைக்கு ஏற்ப ஒரு டி.வி.டி.க்கு 75 ரூபாய், 100 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம். இப்படி வெளியிடப்படும் டி.வி.டி.க்கள் அனைத்தும் எல்லா வகையிலும் தரத்தில் எந்த குறைபாடும் இல்லாமல் இருக்கும் என்பதற்கு உறுதி அளிக்கிறார் சேரன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;