கப்பல் - விமர்சனம்

‘கல கல’, ‘கிளு கிளு’ பயணம்!

விமர்சனம் 26-Dec-2014 4:39 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஐ ஸ்டுடியோஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : கார்த்திக் ஜி கிரிஷ்
நடிப்பு : வைபவ், சோனம் பாஜ்வா, ‘விடிவி’ கணேஷ், கருணாகரன்
இசை : நடராஜன் சங்கரன்
ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்
எடிட்டிங் : ஆண்டனி

தன் உதவியாளர் உருவாக்கிய ‘கப்பலை’ வாங்கி வெள்ளோட்டம் விட்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். கரை சேர்ந்ததா?

கதைக்களம்

வைபவும் அவரது நான்கு நண்பர்களும் சிறு வயதிலிருந்தே இணைபிரியாத நண்பர்கள். கல்யாணம் செய்து கொண்டால் எங்கே தங்கள் நட்பு பிரிந்துவிடுமோ என நினைத்து, 5 பேரில் யாருமே திருமணம் செய்துகொள்ளக்கூடாது என சத்தியம் செய்கிறார்கள். ஆனால் ‘மன்மதனா’க இருக்கும் வைபவால் பெண்களைப் பார்க்காமல், பழகாமல், காதலிக்காமல் இருக்க முடியவில்லை. அவர் எந்தப் பெண்ணுடன் நெருங்கினாலும், உள்ளே புகுந்து அதை மற்ற நான்கு நண்பர்களும் பிரித்துவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் வேலை தேடப்போவதாக தன் நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு காதலிப்பதற்காக சென்னைக்குப் போகிறார் வைபவ்.

சென்னையில் சோனம் பாஜ்வாவைப் பார்த்து, இம்ப்ரஸ் செய்து, காதலிக்கவும் செய்கிறார். போன நண்பன் என்ன ஆனான் என்பதைப் பார்க்க வைபவின் நண்பர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அதன் பிறகு நடக்கும் காமெடி களேபரங்களில் வைபவின் காதல் என்னவானது என்பதுதான் இந்த ‘கப்பல்’.

படம் பற்றிய அலசல்

‘‘படம் ஆரம்பமானதிலிருந்து இறுதிவரை நான் வயிறு குலுங்க சிரித்துக்கொண்டே இருந்தேன்!’’ என இப்படத்தை வாங்கி வெளியிட்டிருக்கும் இயக்குனர் ஷங்கர் குறிப்பிட்டிருந்தார். அது உண்மையாகியிருக்கிறது. மொத்த தியேட்டரும் ‘நான் ஸ்டாப்’பாக சிரித்தது இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் ‘கப்பலு’க்காகத்தான் இருக்கும். கதை, லாஜிக் பற்றியெல்லாம் எந்த கவலையும் படாமல், ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமே தன் கொள்கை என களத்தில் இறங்கி காமெடி கதகளி ஆடியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ்.

வைபவை அடிக்க வரும் ரவுடிகளை ‘கெட்ட வார்த்தை’யால் திட்டியே ஓட ஓட விரட்டுவது, காதலுக்காக ஐடியா கொடுக்கும் ‘விடிவி’ கணேஷை ஒவ்வொரு முறையும் பிரச்சனையில் சிக்கவைத்து அவரை சின்னபின்னமாக்குவது, சோனம் பாஜ்வாவை திருமணம் செய்து கொள்ளத் துடிக்கும் மாப்பிள்ளையை வைபவின் நண்பர்கள் சேர்ந்து பாடாய்ப்படுத்துவது என படத்தில் காட்சிக்கு காட்சி சிரிப்பு சரவெடிதான்.

முதல் பாதி மளமளவென கடந்தாலும், இரண்டாம்பாதியின் ஒருசில காட்சிகள் கொஞ்சம் போரடிக்கவே செய்கின்றன. அதில் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம். அதோடு பள்ளிக்குழந்தைகளையெல்லாம் வைபவ் விரட்டி விரட்டி காதலிப்பது போன்ற காட்சிகளையும், வசனங்களில் விரச நெடி அடித்திருப்பதையும் தவிர்த்திருக்கலாம்.

கலர்ஃபுல் ஒளிப்பதிவில் கவனிக்க வைக்கிறார் தினேஷ் கிருஷ்ணன். பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலம். பாடல்களைப் பொறுத்தவரை ‘காதல் கஸாட்டா’ இளமைத்துள்ளல். ராஜாவின் ‘ஊரு விட்டு ஊரு வந்து...’ பாடல் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ்.

நடிகர்களின் பங்களிப்பு

வைபவிற்கு ஹீரோவாக பேர் சொல்லிக்கொள்ளும்படி அமைந்திருக்கிறது இந்த ‘கப்பல்’. பெண்களிடம் ‘ஜொள்ளு’விடும் கேரக்டர் என்றால் வைபவிற்கு சொல்லவே வேண்டாம், அசத்தியிருக்கிறார். அதோடு காமெடியும் நன்றாகவே செய்திருக்கிறார். ‘மாடர்ன் குயினா’க வந்து ‘யூத்’களின் பல்ஸை எகிற வைத்திருக்கிறார் சோனம் பாஜ்வா. நடிப்பிலும் பாஸ் மார்க்கைத் தாண்டியிருக்கிறார். அடுத்தடுத்த வாய்ப்புகள் சோனம் பாஜ்வாவின் வீட்டுக்கதவை தட்டும். நீண்டநாள் கழித்து ‘விடிவி’ கணேஷின் காமெடி பெரிதாக எடுபட்டிருக்கிறது. அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் அதிர்வெடி! கருணாகரனும், அவரின் நண்பர்களும் க்ளைமேக்ஸில் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சம் ஓவராகயிருந்தாலும் சிரிப்புக்கு உத்தரவாதம்.

பலம்

1. காட்சிக்கு காட்சி காமெடித்திரி கொளுத்தியிருக்கும் காட்சியமைப்புகள்.
2. பாடல்களை வித்தியாசமாக பயன்படுத்தியிருப்பது
3. பின்னணி இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1. ஆங்காங்கே கொஞ்சம் தொய்வடையும் இரண்டாம் பாதியின் ஒரு சில காட்சிகளும், படத்தின் நீளமும்
2. இரட்டை அர்த்தம் தொணிக்கும் சில வசனங்களும், காட்சிகளும்

மொத்தத்தில்...

படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாகவிருப்பது, இரட்டை அர்த்த வசனங்கள், ‘நெளிய’ வைக்கும் ஒன்றிரண்டு காட்சிகள் ஆகியவற்றையும் கொஞ்சம் சரி செய்திருந்தால் குடும்பத்துடன் அமர்ந்து இந்த ‘கப்பலி’ல் தாராளமாக பயணித்திருக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : ‘கல கல’, ‘கிளு கிளு’ பயணம்!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - ட்ரைலர்


;