கே.பி. ஒருபோதும் நம்மிடமிருந்து போகமாட்டார்!

கே.பி. ஒருபோதும் நம்மிடமிருந்து போகமாட்டார்!

கட்டுரை 24-Dec-2014 1:52 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் பிதாமகன் என்றும் இயக்குனர் சிகரம் என்றும் அழைக்கப்பட்டு வந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் இன்று நம்முடன் இல்லை! தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்த இந்த மாமேதை 1930-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9-ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் தான் பிறந்தார். இவர் தனது பள்ளிப் பருவத்திலேயே நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்கி வந்தார். கல்லூரி படிப்பு முத்த பின் முத்துப்பேட்டையிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் சென்னைக்கு வந்து அரசாங்க அலுவலகத்தில் அக்கவுன்டன்டாகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன் நாடகங்களையும் நடத்தி வந்த பாலச்சந்தரை ‘தெய்வத்தாய்’ படத்திற்கு வசனம் எழுத வைத்து அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.

அன்றிலிருந்து துவங்கியது தான் பாலச்சந்தரின் சினிமா பயணம். கே.பாலச்சந்தர் இயக்கிய முதல் படம் ‘நீர்க்குமிழி’. இப்படத்தில் நாகேஷை ஹீரோவாக நடிக்க வைத்தார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று கிட்டத்தட்ட எண்பது படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல், பல படங்களில் கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக, தயாரிப்பாளராக, நடிகராக மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் இயக்குனராக, தயாரிப்பாளராக இவரது கலை பயணம் தொடர்ந்தது.



இன்று தமிழ் சினிமாவின் பெரும் தூண்களாக விளங்கி வரும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்களை சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமையும் கே.பிக்கு உண்டு. இவர் தயாரித்த ‘ரோஜா’ படத்தின் மூலம் தான் இன்று உலகம் முழுக்க போற்றும் இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார்.

‘எதிர்நீச்சல்’, ‘அரங்கேற்றம்’, ‘அபூர்வராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘புன்னகை மன்னன்’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்து பைரவி’ உட்பட பல படங்கள் இவரது இயக்கத்தில் வித்தியாசமான கருத்துக்களை தாங்கி வந்த முக்கிய படங்களாகும். இவர் இயக்கத்தில் 1970-ல் வெளியான ‘அரங்கேற்றம்’ படம் அதன் கருத்துக்காக பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. சினிமாவில் ஆண், பெண் உறவை உளவியல் ரீதியாக அணுகியவர்களில் கே.பி. முக்கியமானவர். அதை குற்றமாக எடுத்துக் கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தும் மக்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது கருத்துக்களை சினிமா மூலம் துணிச்சலாக வெளிப்படுத்தினார் கே.பி. அவருடைய படங்களில் பெண் பாத்திரங்கள் சுயமரியாதையோடும், தைரியத்துடனும் வாழவேண்டும் என்ற அடிப்படையில் அந்த பாத்திரங்களை அமைத்திருப்பார். இதுவே அவருடைய பல படங்கள் மற்ற படைப்புகளிலிருந்து மாறுபட்ட வகையில் இருந்ததற்கு காரணமாக அமைந்தது.

தனது சிறந்த படைப்புக்கள் மூலம் இந்திய அளவில் பெரும் புகழ் பெற்று விளங்கிய கே.பி.க்கு இந்திய அரசின் உயரிய விருதான ‘தாதா பால்கே சாஹேப் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அத்துடன் 9 தேசிய விருதுகள், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது என ஏகப்பட்ட விருதுகள் கே.பி.யை தேடி வந்துள்ளது. தனது திரையுலக பயணத்தில் பல படங்களில் நடிக்கவும் செய்துள்ள கே.பி.அவர்கள் கடைசியாக நடித்த படம் ‘உத்தம வில்லன்’. தனது சிஷ்யர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ள இப்படம் தான் தனது கடைசி படம் என்று அவர் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். தனது இயக்கத்தில் பல படங்களில் இணைந்து நடித்த கமல்ஹாசனையும், ரஜினிகாந்தையும் மீண்டும் ஒரு படத்தில் இணைத்து, ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது கே.பி.யின் ஆசையாக இருந்து வந்தது. ஆனால் அவரது அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டது. இது எல்லோருக்கும் வருத்தம் தரும் விஷயம் தான்.



கே.பி.யின் இழப்பு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கும்போது, ‘‘அவர் எனக்கு குரு மட்டுமல்ல, நல்ல வழிகாட்டியும் கூட! அவர் எனக்கு அப்பா மாதிரி! அவரும் என்னை ஒரு மகனாக தான் பார்த்தாரே தவிர, ஒரு நடிகராக எப்போதும் என்னை பார்த்ததிலை. அவரை இழந்தது என்னை நானே இழந்ததாக நினைக்கிறேன். இன்னொரு கே.பி.சாரை இந்த திரையுலகில் நம்மால் பார்க்க முடியாது. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.



நடிகர் சிவக்குமார் கே.பி. குறித்து கண்கலங்கி பேசும்போது, ‘‘இயக்குனராக, இமயமாக வாழ்ந்த ஒரு மாமனிதர் அவர்! 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகமேடை, சினிமாவில் கே.பி.சார் சாதித்ததை இனி வேறு எவராலும் சாதிக்க முடியாது. ரஜினி, கமல், படாபட் ஜெயலட்சுமி, சுஜாதா, சரிதா, ஸ்ரீப்ரியா, பிரகாஷ்ராஜ், விவேக் என கிட்டத்தட்ட 65 பேருக்கு சினிமாவில் லைஃப் கொடுத்தவர் கே.பி.அவர்கள். அவர் இயக்குனராக, வசனகர்த்தாவாக, நடிகராக கிட்டத்தட்ட 106 படங்களில் பங்கேற்றிருக்கிறார். அதில் அவர் தனக்கு மிகவும் பிடித்த படங்களை குறிப்பிடும்போது 5 படங்களை தான் குறிப்பிடுவார். அப்படி அவருக்கு பிடித்த அந்த 5 படங்களில் நான் நடித்த 3 படங்கள் இருக்கு. அது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கு. கமல், ரஜினிக்கு முன்னாடி அவருடைய ஹீரோ நாகேஷ் தான்! எல்லோரும் யார்கிட்டயாவது உதவி இயக்குனராக இருந்து தான் படங்களை இயக்க வருவார். ஆனால் கே.பி.அவர்கள் நேரடியாக இயக்குனரானவர்.

பிராமண சமூகத்தில் பிறந்தவர் கே.பி.அவர்கள்! அவரே, பிராமண பெண்மணி ஒருவர் விபச்சாரம் செய்கிறார் என்று ‘அரங்கேற்றம்’ படத்தை எடுத்தார். இந்த படத்தை எடுத்ததற்காக தமிழகத்தின் அத்தனை பிராமண சமூகத்தினரின் எதிர்ப்புகளுக்கும் ஆளானார் கே.பி.அவர்கள். அந்தப் படம் எடுத்த சமயத்தில் அவர் சத்தியம் பண்ணினார். இனி நான் உயிரே போனாலும் சிகரெட் குடிக்க மாட்டேன், பிசியான நடிகர்களை வைத்து படம் எடுக்க மாட்டேன். படத்தில் ஏதாவது ஒரு நல்ல செய்தியை சொல்ல வேண்டும் என்று! பல்லாயிரம் ஆண்டு காலமாக ஆணாதிக்கம் இருந்து வரும் இந்த உலகத்தில் இனி பெண்களை போற்றும் படங்களை தான் எடுப்பேன் என்றும் பல சத்தியங்கள் செய்த கே.பி.அவர்கள் பெண்களை போற்றும்படி எடுத்த படங்கள் தான் ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அவர்கள்’, ‘அவள் ஒரு தொடர் கதை’, ‘மனதில் உறுதி வேண்டும்’ போன்றவை! அப்படிப்பட்ட படங்களை எடுத்த கே.பி.யை போன்று இனி யாரும் இந்த உலகில் வரப்போவதில்லை. அவர் இயக்கிய படங்களில் 50 படங்களை இனி யாராலும் எடுக்க முடியாது. அது சம்பந்தமாக நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். அது என்னவென்றால் கமலும், ரஜினியும், இந்த சினிமா உலகமும் சேர்ந்து அவர் இயக்கிய படங்களில் தரமான அந்த 50 படங்களை எப்படியாவது ஆவணப் படங்களாக பாதுகாக்க வேண்டும் என்பது தான்! என்றைக்குமே கே.பி. அவர்கள் நம்மிடமிருந்து போகமாட்டார். அவர் தனது படங்கள் மூலம் இந்த உலகில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;