நண்பேன்டா - இசை விமர்சனம்

நண்பேன்டா - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 23-Dec-2014 10:34 AM IST Chandru கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ படங்களைத் தொடர்ந்து ‘நண்பேன்டா’ மூலம் உதயநிதி & ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி ‘ஹாட்ரிக்’ அடித்திருக்கிறார்கள். பாடல்கள் எப்படி?

‘எனை மறுபடி மறுபடி...’
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், மேகா
பாடலாசிரியர் : கார்க்கி

இது போன்ற பாடலை ஹாரிஸின் ஆல்பங்களில் ஏற்கெனவே பலமுறை கேட்டிருக்கிறோமே என்ற உணர்வு தோன்றினாலும், கேட்பதற்கு போரடிக்கவில்லை. முழுப்பாடலிலும் ‘எக்கோ’வை ஒலிக்கவிட்டிருக்கிறார் ஹாரிஸ். வழக்கம்போல் பாடலின் இடையிடையே அழகான பெண் குரல் ஒன்று ‘ஹம்மிங்’ செய்துவிட்டு மறைந்தோடுகிறது. கார்க்கியின் வரிகள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.

‘ஊரெல்லாம் உன்னைக் கண்டு...’
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
பாடலாசிரியர் : வைரமுத்து

இந்த கர்நாடிக் மெலடி ரகத்தை நயன்தாராவிற்காகவே உருவாக்கியிருப்பார்கள் போல... ‘ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா... உன்னோடு காதல் சொல்லி நயந்(ன்)தாரா... அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா... கண்ணீரும் காதல் கண்டு கலைந்தாரா...’ என வரிகளில் ‘ரா ரா...’வை இழைத்திருக்கிறார் வைரமுத்து. இசை பெரிதாகக் கவரவில்லை என்றாலும், உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீயின் சங்கீதக் குரல்களுக்காகவே பாடலை திரும்பத் திரும்ப கேட்கலாம்.

‘நீ சன்னோ... நியூ மூனோ...’
பாடியவர்கள் : ரிச்சர்டு, ஆன்ட்ரியா, மிலி நாயர்
பாடலாசிரியர் : பா.விஜய்

உதயநிதி, நயன்தாராவின் கலக்கல் நடனங்களோடு ‘சிங்கிள் டிராக் டீஸரா’க வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள பாடல். ஹாரிஸின் கிடார் இசையும், டெக்னோ பீட்களும் காதுகளில் அதிர்கிறது. ஆன்ட்ரியா வழக்கம்போல் ‘ஜாலி’யாகப் பாட, ரிச்சர்டு மட்டும் ஏதோ கஷ்டப்பட்டு பாடுவதுபோல் பாடியிருக்கிறார். பா.விஜய்யின் வரிகளில் புதுமை விளையாடியிருக்கிறது. காட்சிகளோடு பார்க்கும்போது இன்னும் அதிக உற்சாகத்தைத் தரும். டிராவலிங் கேட்டகரி!

‘நீராம்பல் பூவே....’
பாடியவர்கள் : அர்ஜுன் மேனன் (ராப்: எம்.சி.விக்கி)
பாடலாசிரியர் : தாமரை

அற்புதமான மெலடியின் இடையிடையே ‘ராப்’பையும் கலக்கவிட்டு இப்பாடலை வித்தியாசமாகக் கொடுத்திருக்கிறார் ஹாரிஸ். முழுக்க முழுக்க ‘டெக்னோ பீட்’ டியூன்களால் இப்பாடலை நிரப்பியிருக்கிறார். ஹெட்ஃபோனில் கேட்கும்போது சின்ன சின்ன ஒலிகள்கூட தனித்து கேட்கும்படி அற்புதமாக ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது. ‘நீரில்லா மீன்கள் தூண்டிலாய் மாறி என்னைக் கொல்லாதோ...’ என காதலனின் ஏக்கத்தை பாடல் வரிகளில் தவழவிட்டிருக்கிறார் கவிஞர் தாமரை.

‘டப்பாங்குத்து...’
பாடியவர்கள் : கானா பாலா, உஜ்ஜெய்னி ராய்
பாடலாசிரியர் : விஜய சாகர்

சமீபகாலமாக பெரும்பாலான ஆல்பங்களில் ஏதாவது ஒரு பாடலாவது பாடிவிடும் ‘கானா’ பாலா இந்த ஆல்பத்தில் பாடியிருக்கும் பாடல்தான் இந்த ‘டப்பாங்குத்து...’. அதோடு சென்னைப் பாஷையில் உருவாகும் ‘குத்துப்பாடல்’தான் கோலிவுட்டின் தற்போதைய டிரென்ட். இந்தப் பாடலில் அதிகமாக சென்னை பாஷை இடம்பெறவில்லை என்றாலும், கேட்பதற்கு அதேபாணியில் உருவாக்கப்பட்ட பாடல் போன்றுதான் இருக்கிறது. ‘கெட்டி’ மேளம், நாதஸ்வரம், எலெக்ட்ரானிக் கிடார், டிரம் செட் என பலவிதமான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி வித்தியாசமாக இப்பாடலை உருவாக்கியிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இப்பாடலுக்கு குழந்தைகளிடம் பெரிய வரவேற்புக் கிடைக்கும். விஜய சாகரின் வரிகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. ஹிட் ரகம்!

‘தானே தானே செந்தேனே...’
பாடியவர்கள் : ஹரிச்சரண், பிரவீன் சாய்வி
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்

காதல் பிரிவின் வலியை விளக்கும் ‘சூப்பர் மெலடி’ இந்த ‘தானே தானே செந்தேனே’. பியானோ இசையும், கீபோர்டு பீட்களும் பாடல்களில் அதிரடிக்கிறது. உயிர் உருக்கும் உணர்வோடு இப்பாடலைப் பாடியிருக்கிறார் ஹரிச்சரண். ஆங்காங்கே சில வார்த்தைகளை மட்டும் ‘எகோ’வில் ஒலிக்கவிட்டிருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது. பிரவீன் சாய்வியின் மெலிதான ‘ஹம்மிங்...’ பாடலுக்கு ப்ளஸ். ‘காதல் பாடல்கள்’ என்றால் கவிஞர் முத்துக்குமாரின் பேனாவிற்கு தனி உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ‘காதலனின் வலி’யை வார்த்தைகளாய் மாற்றி காதல் ஹைக்கூ படைத்திருக்கிறார். ‘நண்பேன்டா’ ஆல்பத்தின் ஃபேவரிட் பாடலாக இடம்பிடிக்கும்!

ஹாரிஸின் ஒவ்வொரு ஆல்பங்களையும் முதல்முறையாக கேட்கும்போது ‘ஏற்கெனவே கேட்டிருக்கிறோமே...’ என்ற உணர்வு வருவது வாடிக்கைதான். ஆனால் அதையும் மீறி பழைய ஆல்பங்களை மறக்கடித்து அவரின் புது ஆல்பம் நம் மனதுக்குள் ரீங்காரமிடத் தொடங்கிவிடும். அதுதான் ஹாரிஸின் சக்சஸ் ஃபார்முலா. மொத்தம் 6 பாடல்கள் இடம் பெற்றிருக்கும் இந்த ‘நண்பேன்டா’ ஆல்பமும் அதே ஃபார்முலாவில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில்... இந்த ‘நண்பேன்டா’வின் பாடல்கள்... திகட்டும் தித்திப்பு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;