‘லிங்கா’ சர்ச்சைகளுக்கு கே.எஸ்.ரவிகுமார் பதில்!

‘லிங்கா’ சர்ச்சைகளுக்கு கே.எஸ்.ரவிகுமார் பதில்!

செய்திகள் 20-Dec-2014 11:59 AM IST VRC கருத்துக்கள்

‘‘ஒரு சிலர் மட்டும் தான் ‘லிங்கா’வை நெகட்டீவாக விமர்சிக்கிறாங்க. எங்களுக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி ‘லிங்கா’வை 95 சதவிகிதம் பேரும் ரசிக்கிறாங்க. பெரும்பாலான தியேட்டர்களில் ‘லிங்கா’ இன்னமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகதான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு படத்தை பற்றி இது மாதிரியான விமர்சனங்கள் வருவது இது ஒன்றும் புதுசு இல்லை. அந்த காலத்திலிருந்தே இருந்து வரும் விஷயம் தான் இது. பாலச்சந்தர் சார் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படம் உட்பட ஏராளமான படங்கள் இது மாதிரி விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கு! அதில் ஒன்றும் தப்பு கிடையாது. விமர்சனம் என்பது நம்மை திருத்திக் கொள்வதற்கான ஒரு விஷயம் தான்’’ என்று ‘லிங்கா’ படம் சம்பந்தப்பட்டு வந்துள்ள விமர்சனங்களுக்கும், எதிர் மறையான கருத்துக்களுக்கும் பதில் அளித்து பேசுகிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்! தொடர்ந்தவர்,

‘‘லிங்கா’ கதை எனக்கும், ரஜினி சாருக்கும் ரொம்பவும் பிடித்து, ரசித்து செய்த படம். நான்கு வருடங்கள் கழித்து ரஜினி சார் நடிக்கிற படங்கிறதால ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதறகாக தான் இப்படத்தில் அவருக்கு இரண்டு கேரக்டர்களை வைத்தோம். லிங்கேஸ்வரன் கேரக்டர் முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிக் குக்கோட இன்ஸ்பிரேஷன் தான். அதை மட்டும் படமாக்குவது என்றால் படத்தில் வயதான ரஜினி கேரக்டர் மட்டும் தான் இருக்கும். அது ரஜினி சாரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும் என்பதால் தான் கதையில் இளம் வயது ரஜினி கேரக்டரை உருவாக்கினேன். அந்த இரண்டு கேரக்டர்களையும் ரசிகர்கள் ரசிக்கிறாங்க. நிறைய பேர் படத்தின் நிளம் அதிகம்னு சொன்னார்கள். சில கதைகளை சொல்லும்போது அதை விளக்கமாக சொல்ல வேண்டி வரும். அது மாதிரி தான் லிங்கேஸ்வரன் சம்பந்தப்பட்ட போர்ஷனை எடுத்திருக்கோம். இருந்தாலும் இப்போது படத்திலிருந்து புலவர் சம்பந்தப்பட்ட காட்சி உட்பட 9 நிமிட காட்சிகளை குறைத்துள்ளோம். அது மாதிரி கிளைமேக்ஸ் பலூன் ஃபைட் பத்தியும் நிறைய பேர் விமர்சிக்கிறதா கேள்விப்பட்டேன். நான் ஒன்னு கேட்கிறேன்! ‘ஸ்பைடர்மேன்’ என்ன தெய்வ பிறவியா? ‘பேட்மேனு’ம் தெய்வ பிறவியா? அந்த படங்களில் வருவதை எல்லாம் கை தட்டி ரசிக்கிறாங்க! ஆனா தமிழ் படங்களில் இது மாதிரியான காட்சிகளை வைத்தால் மட்டும் அது பற்றி பேசிக்கிறாங்க! அது என்ன நியாயம்? எந்த மாதிரியான கிளைமேக்ஸை ஃபைட்டை வைத்தால் நல்லா இருக்கும்னு யோசித்துக் கொண்டிருந்தபோது என்னோட அசிஸ்டென்ட் ஒருத்தர் சொன்ன கான்சப்ட் தான் அந்த பலூன் ஃபைட்! இது மாதிரியான காட்சிகள் வேறு படங்களில் வந்திருக்கலாம்! இன்ஸ்பிரேஷன் என்பது தவிர்க்க முடியாதது. நான் கேள்விப்பட்ட வரைக்கும் அந்த கிளைமேக்ஸ் காட்சியை தியேட்டரில் குழைந்தைகளும், பெண்க்ளும், ரஜினி சாரின் ரசிகர்களும் கை தட்டி ரசிக்கிறாங்கன்னு தான் கேள்விப்பட்டேன். என்னை பொறுத்தவரைக்கும், ரஜினி சாரை பொறுத்த வரைக்கும் ‘லிங்கா’ ஒரு கிளாசிக்கல் மூவி தான்!

‘லிங்கா’வை விலைக்கு வாங்கிய சில விநியோகஸ்தர்கள் பலத்த நஷ்டத்திற்கு ஆளாகியிருப்பதாக பேசிக்கிறாங்களே?

சில விஷயங்களை நானும் கேள்விப்பட்டேன். ஆனா அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதுக்கெல்லாம் புரொட்யூசர், அல்லது படத்தை வித்தவங்கதான் பதில் சொல்ல வேண்டும். இருந்தாலும் நான் சில விஷயங்களை கேள்விப்பட்டு விசாரித்ததில் ஒரு விநியோகஸ்தர் சொன்னாராம், 8 கோடிக்கு படத்தை வாங்கினேன். ஆனால் 4 நாட்களில் 4 கோடி ரூபாய் மட்டும்தான் வசூலாகியுள்ளதுன்னு! நான் ஒன்னு கேட்கிறேன். அந்த நான்கு நாட்களோட அந்த படம் முடிந்து விட்டதா? இனி அந்த பட்த்தை ஓட்ட மாட்டாங்களா? நான்கு நாட்களிலேயே 4 கோடி ரூபாய் வந்துள்ளது என்றால் போட்ட பணத்தில் பாதி வந்துவிட்டது அல்லவா? அது பெரிய விஷயம் இல்லையா? இன்னும் எத்தனை நாட்கள் அந்த படத்தை ஓட்டி கலெக்‌ஷன் பார்க்கலாம். நான்கு நாட்களிலேயே 8 கோடி சம்பாதிக்கணும்னு அந்த படத்தை வாங்கியிருந்தால் அது யாரோட தப்பு? படம் வெளியாகி 50 நாட்கள் இல்லை, ஒரு 100 நாட்கள் கழித்து நஷ்டம் என்று பேசியிருந்தால் கூட அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். என்னடா இப்படி பேசிக்கிறாங்களேனு நானும் சிட்டியிலுள்ள சில டிஸ்ட்ரிபியூட்டர்கள்கிட்ட விசாரித்ததில் நிறைய பேர் என்ன சொன்னாங்கனா, வெள்ளி, சனி, ஞாயிறு எல்லா தியேட்டர்களும் ஃபுல் சார். வீக் டேஸ்ல கூட்டம் கொஞ்சம் கம்மிதான் இருக்கு. அதுக்கு ஸ்கூல், காலேஜ், பரீட்சை சீசன்னு நிறைய காரணங்கள் இருக்கு சார்’’ என்றார்கள். நிலைமை இப்படியிருக்கும்போது படத்தை பற்றி ஏன் இப்படி பேசணும். இன்னொன்றும் கேள்விப்பட்டேன். நிறைய் விநியோகஸ்தர்கள் படத்தை கைமாறி, கைமாறி வித்திருக்காங்கன்னு! அப்படியிருக்கும்போது படத்தோட விலை ஏறிகிட்டுதானே இருக்கும். அப்படி அதிக விலை கொடுத்து வாங்கிகிட்டு நஷ்டம் ஏற்பட்டிருச்சுன்னு சொல்கிறவங்களுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யார்கிட்டயிருந்து படத்தை வாங்கினாங்களோ அவங்ககிட்ட போய் பேச வேண்டியது தான்! ரஜினி சாரை பொறுத்தவரை அவர் சம்பளத்துக்கு தான் நடிச்சிருக்கார். இது அவரோட சொந்த படம் இல்லை. அப்படியிருக்கும்போது இதில் அவரை இழுப்பதெல்லாம் சரி கிடையாது.

ரஜினியுடன் இணைந்து நீங்க பண்ணின முந்தைய படங்களை கம்பேர் பண்ணும்போது இந்த படத்துல வில்லன் கேரக்டர் அவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கவில்லை! அதுவும் படத்திற்கு ஒரு மைனஸ் என்று பேசிக்கிறாங்களே?

கதைக்கு என்ன தேவையோ அதை தான் செய்ய முடியும். ‘படையப்பா’ படத்துல நீலாம்பரி கேரக்டர் பேசப்பட்டது என்றால் அந்த கதை அந்த கேரக்டரை வைத்து தான். இது பென்னிகுக் இன்ஸ்பிரேஷன் கதைங்கிறதால இதுல வில்லனுக்கு வேலை அவ்வளவு தான். அதை தான் செய்ய முடியும். எல்லா படங்களையும் ஒரே மாதிரி எடுத்தால், என்ன ரவிக்குமா ஒரே மாதிரி படத்தை எடுக்கிறாங்கன்னும் பேசிப்பாங்க! எந்த ஒரு விஷயத்திலும் நல்லது பற்றி யாரும் பேசமாட்டாங்க! நாநூறு காட்சிகள் இருந்து அதில் ஒரு மூன்று நான்கு காட்சிகள் சரியா வரலைனா அது பற்றி மட்டும் தான் பேசுவாங்க! நல்ல விஷயங்கள் பத்தி பேசமாட்டாங்க! இது மனித இயல்பு! இதனை நான் குறையாக சொல்லவில்லை.

அடுத்து சுதீப்பை வைத்து இயக்கும் படம் எப்படிப்பட்ட்து?

அதுக்கு இன்னும் இறுதிவடிவம் வரவில்லை. இன்னும் நிறைய ஸ்கிரிப்ட் வேலைகள் இருக்கு. அந்த வேலைகள் முடிந்ததும் படப்பிடிப்பை துவங்குவேன். அந்தப் படம் குறித்து இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்’’ என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;