பிசாசு - விமர்சனம்

தெய்வப் பிசாசு!

விமர்சனம் 19-Dec-2014 3:53 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : பி ஸ்டுடியோஸ்
இயக்கம் : மிஷ்கின்
நடிப்பு : நாகா, பிரயாகா, ராதாரவி
இசை : அரோல் கொரேலி
ஒளிப்பதிவு : ரவி ராய்
எடிட்டிங் : கோபிநாத்

பாலாவும், மிஷ்கினும் இணைந்து ஒரு படம் கொடுத்தால் அது எப்படிப்பட்ட படமாக இருக்க வேண்டும்... அப்படி இருக்கிறதா இந்த ‘பிசாசு’?

கதைக்களம்

ஸ்கூட்டரில் வரும் பிரயாகாவை கார் ஒன்று இடித்துத்தள்ளிவிட்டு மறைந்துவிட, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் நாகா. ஆனால் மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே பிரயாகாவின் உயிர் பிரிந்துவிடுகிறது. சாகும் தருவாயில் நாகாவின் கைகளைப் பிடித்து... ‘அப்பா...’ என்ற வார்த்தைகளை உதிர்க்கிறார் பிரயாகா. அந்த இறப்பின் சோகத்திலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார் நாகா. அதோடு, அவரின் வீட்டுக்கே பிசாசாக வந்து நாகாவை அலறவிடுகிறார் பிரயாகா. அவர் ஏன் பிசாசாக வந்து நாகாவை சுற்றிச் சுற்றி வருகிறார். சாகும்போது நாகாவின் கைகளைப் பிடித்தது ஏன்? பிரயாகாவை காரில் வந்து மோதிச் சென்றது யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு இரண்டாம்பாதியில் விடையாக விரிகிறது இந்த ‘பிசாசு’.

படம் பற்றிய அலசல்

படத்தின் முதல் காட்சியிலேயே ரசிகர்களை கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார் மிஷ்கின். ஆனால் அடுத்த காட்சியிலேயே கதைக்கு பெரிதாக தேவைப்படாத அவரின் ‘டெம்ப்ளேட்’ விஷயங்களான சப்வே, அங்கே பிச்சையெடுக்கும் விழிம்புநிலை மனிதர்கள், சோகத்தை பிழியும் பாடல் என முதல் அரைமணி நேரம் மெதுவாக நகர்கிறது. பிறகு, பிசாசு உள்ளே நுழைந்ததும் ஆரம்பமாகும் பயமுறுத்தல் இடைவேளை வரை தொடர்கிறது.

ஆனால்... இரண்டாம்பாதியில் மிஷ்கின் இன்னும் பயமுறுத்தப் போகிறார் என்று நினைப்பில் வந்தமர்ந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே! காரணம், பிரயாகாவை இடித்துக் கொன்றது யார் என்ற புலன்விசாரணையில் இறங்கிவிடுகிறார் நாயகன். அதேபோல் க்ளைமேக்ஸில் ‘இதற்காகத்தான்’ நாயகனையே சுற்றி வருகிறது அந்தப் பிசாசு என்பது நமக்குத் தெரிந்ததும் ‘ப்ச்’ என்றாகிவிடுகிறது. அதோடு படத்தின் முக்கியமான ‘ட்விஸ்ட்’ ஒன்றிற்காக மிஷ்கின் சொல்லியிருக்கும் காரணத்தில் சுத்தமாக ‘லாஜிக்’கே இல்லை!

டெக்னிக்கலாக இந்த ‘பிசாசு’ உண்மையிலேயே மிரட்டியிருக்கிறது. அரோல் கொரேலியின் ‘போகும் பாதை...’ பாடல் மனதைப் பிசைகிறது. பின்னணி இசையிலும் அறிமுக இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி பெரிதாக கவனம் ஈர்த்திருக்கிறார். நிறைய இடங்களில் அந்தந்த காட்சிகளின் ஒரிஜினல் சப்தங்களையே பின்னணியில் பயன்படுத்தியிருப்பது கூடுதல் பலம். ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும், மிஷ்கினின் தலையீட்டால் நிறைய இடங்களில் தேவையில்லாத கோணங்களையெல்லாம் காட்டி ரசிகர்களை குழம்பியடித்திருக்கிறார்கள். எடிட்டிங், சவுன்ட் மிக்ஸிங் உள்ளிட்ட வேலைகளும் ‘பிசாசு’வில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

முகத்தை மூடும் முடி, அவ்வப்போது மட்டுமே தோன்றி மறையும் கண்களில் ஆயிரம் அர்த்தங்கள் என தன் முதல் படத்திலேயே பெரிதாக ‘ஸ்கோர்’ செய்திருக்கிறார் நாயகன் நாகா. பார்வையற்றவர்களுக்காக சண்டை போடும் போதும், பிசாசுவால் பயந்து அலறும்போதும் நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார். நாயகி பிரயாகாவுக்கு படத்தில் ஒரே ஒரு டயலாக் மட்டுமே. மத்தபடி படம் முழுக்க பிசாசாக வந்துபோயிருக்கிறார் அவ்வளவே. பாசமுள்ள அப்பாவாக ராதாரவி கண்கலங்க வைத்திருக்கிறார். நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

பலம்

1. ஒன்றிரண்டு ‘திடுக்’ காட்சிகளுடன் சுவாரஸ்யமாக பயணிக்கும் படத்தின் முதல் பாதி.
2. பின்னணி இசை, சவுன்ட் மிக்ஸிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்
3. நடிகர்களின் பங்களிப்பு

பலவீனம்

1. படத்தின் அடிப்படைக்கதையே பல கேள்விகளை எழுப்புவது
2. படத்தின் இரண்டாம் பாதியும், ஏற்றுக்கொள்ள முடியாத க்ளைமேக்ஸும்
3. லாஜிக் ஓட்டைகள்

மொத்தத்தில்...

டெக்னிக்கலாக இப்படம் நிச்சயம் பெரிதாக சாதித்திருக்கிறது. ஆனால், ‘ஹாரர்’ படத்துக்குரிய பெரிய தாக்கம் எதையும் ரசிகர்களிடத்தில் இந்த ‘பிசாசு’ ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்பு காமெடிப் பேய், பழிவாங்கும் பேய் என ஏற்கெனவே தமிழ் சினிமா ரசிகர்கள் பல படங்களைப் பார்த்திருக்கிறார்கள். கொஞ்சம் வித்தியாசமாக இதில் ‘மனிதாபிமானமுள்ள பிசாசை’க் காட்டியிருக்கிறார் மிஷ்கின்.

ஒரு வரி பஞ்ச் : தெய்வப் பிசாசு!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;