ஐ - டிரைலர் விமர்சனம்

ஐ - டிரைலர் விமர்சனம்

செய்திகள் 19-Dec-2014 9:36 AM IST Chandru கருத்துக்கள்

செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான ‘ஐ’ படத்தின் 40 வினாடி டீஸருக்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் பாராட்டுக்களை அள்ளிக் குவித்தனர். அதோடு தென்னிந்தியாவிலேயே ‘ஐ’ டீஸர் மட்டுமே 90 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைச் சென்றடைந்து சாதனை படைத்தது. நேற்று (டிசம்பர் 18) இரவு 10 மணிக்கு ‘ஐ’ படத்தின் 2 நிமிட டிரைலர் வெளியாகியுள்ளது. டீஸர் தந்த ஆச்சரியத்தை டிரைலரும் தந்திருக்கிறதா?

இந்த டிரைலரைப் பொறுத்தவரை புதிதாக எந்த விஷயத்தையும் ஷங்கர் வெளிக்காட்டவில்லை. டீஸரில் இடம்பெற்ற காட்சிகளே, கொஞ்சம் நீளமாக இதிலும் தொடர்ந்திருக்கிறது. ஆனால், பி.சிஸ்ரீராமின் ஒளிப்பதிவு உண்மையிலேயே கண்களை அகல விரிய வைத்துள்ளது. டிரைலரின் முதல் நாலைந்து ‘கட்’ மட்டுமே போதும்... இப்படம் எவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கும் என்பதைச் சொல்வதற்கு. குறிப்பாக சைனாவில் படமாக்கப்பட்ட காட்சிகளை தியேட்டரில் பார்க்கும்போது பெரிய அளவில் வியப்பை ஏற்படுத்தலாம். அனேகமாக பாடல்களுக்கு ஒரு ரசிகர்கூட தியேட்டரைவிட்டு எழுந்து செல்ல முடியாதபடி பி.சி.ஸ்ரீராமின் கேமரா ரசிகர்களைக் கட்டிப்போடும்.

அடுத்ததாக விக்ரம்... ‘என்ன நடிகன்பா... எவ்வளவு உழைப்பு..!’ என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் மனிதர். மாடலாக வரும்போது ‘ஹாலிவுட் மாடல்’ போல இருக்கிறார், ‘ஜிம்’ மாஸ்டராக வரும்போது முறுக்கேறிய உடம்புடன் நிஜ புஜ பலம் காட்டுகிறார், கோர முகம், சிங்க முகம் என ஒவ்வொரு காட்சியிலும் விக்ரமின் உழைப்பு உச்சபட்சம். இனி ஒரு நடிகர் இதுபோல் நடிப்பாரா? என்ற சந்தேகம் எழும் அளவுக்கு இருக்கிறது விக்ரமின் பங்களிப்பு!

ஆனால், விக்ரமின் இந்த கடுமையான உழைப்புக்கேற்ற அழுத்தமான கதையும், அதற்கான சூழலும் படத்தில் இருக்குமா என எண்ணும் அளவிற்குதான் இருக்கிறது இந்த டிரைலர் கட். சஸ்பென்ஸ் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் வேறு எந்த காட்சியையும் ஷங்கர் வெளிப்படுத்தவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால், ‘ஐ’ டீஸர் தந்த பிரமிப்பு இந்த டிரைலரில் கொஞ்சம் குறைந்திருப்பதை மறுக்க முடியாது. தவிர சந்தானம், சுரேஷ்கோபி, பவர்ஸ்டார், ராம்குமார் இவர்களுக்கெல்லாம் படத்தில் என்ன வேலை என்பதிலும் சஸ்பென்ஸ் தொடர்ந்திருக்கிறது.

டீஸரில் மிரட்டிய ரஹ்மானின் பிஜிஎம், டிரைலரில் கொஞ்சம் ஏமாற்றமே. நிச்சயம் படத்தில் ரஹ்மான் பட்டையைக் கிளப்புவார் என நம்புவோம்! எமி அழகான ராட்சஸியாக ஆங்காங்கே வந்து வசீகரித்திருக்கிறார். பெரிய வசனங்கள் எதுவும் இந்த டிரைலரிலும் இடம்பெறவில்லை.

மொத்தத்தில்... விஷுவலில் விருந்து படைத்திருந்தாலும்... பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை இந்த டிரைலர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;