இடம் பொருள் ஏவல் - இசை விமர்சனம்

இடம் பொருள் ஏவல் - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 18-Dec-2014 1:04 PM IST Chandru கருத்துக்கள்

‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பில் சீனுராமசாமி இயக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஜோடி இளமைக்கூட்டணியுடன் உருவாகியிருக்கும் இப்படம் முழுக்க முழுக்க மலை சம்பந்தப்பட்ட கதையாம். நம் கலாசாரத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு வரிகளை தந்திருப்பவர் வைரமுத்து. முதல்முறையாக யுவன் & வைரமுத்து கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ ஆல்பம் எப்படி இருக்கிறது?

ஈரக்காத்தே நீ வீசு...
பாடியவர்கள் : செந்தில்தாஸ், அனிதா


மலை மீது வீசும் ஈரக்காற்றின் இயற்கை ஒலியுடன் தொடங்குகிறது இந்த அற்புதமான மெலடி டூயட். அனுராதா ஸ்ரீராமின் குரலை ஞாபகப்படுத்தும் அனிதாவின் குரலில் இனிமை! பின்னணியில் ஒலிக்கும் ‘தம் தம்’ என்ற டிரம் பீட், கஞ்சிராவின் ‘ஜல் ஜல்’ ஓசை, ஆங்காங்கே குயிலின் ரீங்காரம், பாடலின் இடையே பழங்குடியினப் பெண்ணின் ஹம்மிங் என ஒரு அக்மார்க் ‘மலைவாழ்’ மக்களின் இசையை நம் காதுகளில் தவழவிட்டிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. ‘ஆட்டுத்தோலு என் போர்வையாகலாம்... வெள்ளாடு போர்வையாகுமா?’ என வரிகளில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ படைத்திருக்கிறார் வைரமுத்து.

குறுந்தொகை...
பாடியவர்கள் : வி.வி.பிரசன்னா, சோனியா


புல்லாங்குழலும், ‘தப்’பும் கலந்த வித்தியாசமான பின்னணி இசையுடன் தொடங்கும் இந்தப் பாடலில் குறுந்தொகை, பெருந்தொகை, இன்பத்துப்பால், இளையவேந்தே, பொருட்பால், ஓலை போன்ற வரிகளைப் பயன்படுத்தி பண்டைய இலக்கிய காலத்திற்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார் வைரமுத்து. இதுவும் நாயகன், நாயகிக்கான கிராமத்து காதல் டூயட்தான். வரிகள் தெளிவாகக் கேட்கும்படி பின்னணி இசை தனித்து, மெல்லியதாக ஒலிக்கிறது. கிராமிய இசையுடன் தொடங்கிய பாடலில், பிரசன்னாவின் சரணம் தொடங்கியதும் லேசாக டெக்னோ ‘பீட்’களை ஒலிக்கவிட்டிருக்கிறார் யுவன். கேட்க, கேட்க பிடிக்கும் ரகம்!

எந்த வழி...
பாடியவர் : வைக்கம் விஜயலட்சுமி


சோகப்பாடல்... அதுவும் ‘வைக்கம்’ விஜயலட்சுமியின் குரலில் உருவாகியிருக்கிறதென்றால்... எப்படியிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை! காது வழியே புகுந்து மனதில் இறங்கி உணர்வுகளில் கலக்கிறது வைரமுத்துவின் வரிகளும், விஜயலட்சுமியின் குரலும். காட்சிகளோடு பார்க்கும்போது கண்களில் நீரை வரவழைக்கும்!

கொண்டாட்டமே...
பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி


‘முன்னேறி வா... என் தோழா முள்ளேறி வா...’ என இப்பாடலின் வரிகள் முழுவதும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கின்றன. வழக்கமாக இதுபோன்ற எழுச்சிப் பாடல்களுக்கு பின்னணி இசை அதிரடியாகவும், ‘ஃபாஸ்ட் பீட்’ ரகமாகவும் இருக்கும். ஆனால், மெல்லிய மிருதங்க ஓசையுடன் இந்தப் பாடலை ஒரு மெலடியாக யுவன் கொடுத்திருப்பது வித்தியாசம். ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரல் தெள்ளத் தெளிவாக ஒலித்திருக்கிறது.

அத்துவான காட்டுக்கு...
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா


யுவனின் வாய்ஸில் உருவாகியிக்கும் மென்சோக மெலடி. பியானோவும், கீபோர்டும் அளவான இசையை பாடல் முழுவதும் ஒலிக்கவிட்டிருக்கிறது. ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தின் டைட்டிலையும் இப்பாடலில் பயன்படுத்தியிருப்பதால் படத்தின் முக்கிய சூழலில் ஒலிக்கும் பாடலாக இது இடம்பெறலாம். ஏற்கெனவே கேட்டதுபோன்ற உணர்வை இப்பாடல் கொடுத்தாலும் ரசிக்க முடிகிறது.

வையம்பட்டி...
பாடியவர்கள் : அந்தோணி தாசன், ப்ரியதர்ஷினி


மலைவாழ் மக்களின் திருவிழா ஒன்றில் பாடப்படும் உற்சாகமான பாடலாக இது இருக்கலாம். பாடல் முழுவதும் ‘டிரம்’மையும், ‘தப்’பையும் அதிரவிட்டிருக்கிறார் யுவன். ‘மலைக்கு போயி மொட்ட போடு... மலைக்கே மொட்ட போட வேணாம்... மலையும், மரமும் நம்ம சாமி’ என பாடல் முழுக்க ஒவ்வொரு வரிகளிலும் இயற்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் வைரமுத்து. அந்தோணி தாசன், ப்ரியதர்ஷினியின் குரல்கள் இந்த கொண்டாட்டப் பாடலுக்கு ஏக பொருத்தம்.

‘கழுகு’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு மண்வாசனை கமழும் ஆல்பத்தைக் கொடுத்திருக்கிறார் யுவன். அவரின் இசைக்கு முழு உணர்வு தந்திருக்கிறது வைரமுத்துவின் பேனா. இயக்குனர் சீனுராமசாமியின் முந்தைய படங்களின் பாடல்கள் போல் இந்த ‘இடம் பொருள் ஏவலி’ன் பாடல்களும் முழுக்க முழுக்க கதைப் பின்னணியோடு உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

மொத்தத்தில்... தரமான ஆல்பத்தைத் தந்திருக்கிறார் யுவன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;