‘தடாலடி’ கேள்விகள்... மிஷ்கினின் ‘மிரட்டல்’ பதில்கள்!

‘தடாலடி’ கேள்விகள்... மிஷ்கினின் ‘மிரட்டல்’ பதில்கள்!

கட்டுரை 17-Dec-2014 10:07 AM IST Chandru கருத்துக்கள்

வரும் வெள்ளிக்கிழமை பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படம் ரிலீஸாகவிருக்கிறது. அதைமுன்னிட்டு ரசிகர்கள் தன்னுடன் கேட்க விரும்பும் கேள்விகளுக்கு ‘பிசாசு ட்விட்டர் கணக்கு’ மூலம் பதில் சொல்லும் ஏற்பாட்டை செய்திருந்தார்கள். பொதுவாக நிருபர்களின் கேள்விகளுக்கே எந்த தயக்கமும் இன்றி, வெளிப்பாடையாகவும், தைரியமாகவும் பதில் சொல்பவர் மிஷ்கின். இந்தமுறை ரசிகர்களின் கேள்வி என்பதால் கேள்விகள் எப்படி இருக்கும்..? அதற்கு மிஷ்கின் எப்படி பதிலளிப்பார் என பலருக்கும் ஆவல் ஏற்பட்டிருந்தது. எதிர்பார்த்ததைப்போலவே சில ஏடாகூடமான கேள்விகளையும் நமது ‘குசும்பு’ ரசிகர்கள் கேட்க, எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் பாணியில் பதிலடி கொடுத்தார் மிஷ்கின். ரசிகர்கள் கேட்ட சில சுவாரஸ்யமான கேள்விகளும், அதற்கான மிஷ்கினின் பதில்களும் இதோ...

‘மிஷ்கின்’ என்பதன் அர்த்தம் என்ன? இது உங்கள் ஒரிஜினல் பெயரா?

மிஷ்கின் என்ற அரபு மொழிப் பெயருக்கான அர்த்தம் ‘ஏழை மனிதன்’. இது என்னோட உண்மையான பெயர் இல்லை!

‘சண்முக ராஜா’ங்கிற பேரே நல்லாதானே இருக்கு. அப்புறம் ஏன் உங்கள் உண்மையான பெயரை நீங்கள் வைத்துக்கொள்ளவில்லை?

இந்த உலகத்தில் எதுவுமே உண்மையில்லை!

சினிமாவுக்குள் நுழைந்த தருணத்தை இன்னமும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா? உங்கள் குடும்பம் அப்போது என்ன சொன்னது?

என் இளமைக்காலத்திலேயே நான் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வந்துவிட்டேன்.

தமிழ் சினிமாவிலேயே ‘பெஞ்ச் மார்க்’ படம்னு எதை நினைக்கிறீங்க?

தேவர்மகன்

உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? அவருடன் சேர்ந்து எப்போது படம் செய்வீர்கள்?

விக்ரம். அவர் ஒரு தலைசிறந்த நடிகர். சிறந்த நடிகர்களில் ஒருவராக நான் அவரை மதிப்பிடுகிறேன். பார்ப்போம்... நாங்கள் இணைந்து பணியாற்றினாலும் பணியாற்றலாம்!

சமீபத்தில் உங்களை உலுக்கி எடுத்த இசைக்கோர்ப்பு?

‘இன்டர்ஸ்டெல்லர்’ படத்தின் பின்னணி இசை!

உங்கள் கனவுப் படம் எது?

என் படங்கள் எல்லாமே என் கனவிலிருந்து உருவானவைதான்

உங்கள் பாணியில் விஜய்யை வைத்து 90 நிமிடங்கள் ஓடும் ஒரு த்ரில்லர் படம் எடுப்பீர்களா? இதைப் பத்தி என்ன நினைக்கிறீர்கள்?

அதிகப்படியான கற்பனையில் உருவான கேள்வி இது!

தலைவர் மற்றும் உலகநாயகனின் கால்ஷீட் கிடைத்தால் என்ன மாதிரி படம் எடுப்பீர்கள்

அவர்களுடன் பணிபுரியும் யோசனை எதுவும் இல்லை!

சினிமாவில் சமூக வலைதளங்களின் தாக்கம் எப்படி இருக்கிறது?

மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சினிமா இன்டஸ்ட்ரி செழிக்க வைக்க வேண்டிய பொறுப்பும் சமூக வலைதளங்களுக்கு இருக்கிறது. எனவே அவர்களிடம் நான் வேண்டுவதெல்லாம்.... உண்மையாக இருங்கள் என்பது மட்டுமே!

உலகப் படங்களை பார்த்து காப்பியடிப்பது தப்பில்லை என்பதுபோல் சமீபத்தில் வாதிட்டீர்கள்? சிந்திப்பதற்கான சோம்பறித்தனம்தான் இப்படிச் சொல்ல காரணமா?

ஒரு நாளைக்கு வெறும் 3 மணி நேரம் மட்டுமே நான் தூங்குகிறேன். குறைந்தது 6 மணி நேரமாவது புத்தகங்கள் படிப்பேன். படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கும்போதுதான் என் உயிர் பிரிய வேண்டும் என ஆசைப்படுபவன். அப்படியிருக்கும்போது ‘சோம்பறித்தனம்’ என்று நீங்கள் சொல்வதை என்னால் புரிந்துகொள்ளவில்லை.

விஜய், அஜித், சூர்யா போன்ற மாஸ் ஹீரோக்களை வச்சு எப்போ படம் பண்ணப் போறீங்க?

தெரியலை... பார்க்கலாம்!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்த்தேன்... நீங்கள்?

எனக்கு விருது கிடைக்க வேண்டும் என எப்போதும் நான் விரும்பியதில்லை. எந்த விருது விழாக்களுக்கும் என் படத்தை அனுப்ப வேண்டும் என ஆசைப்பட்டதுமில்லை.

விஜய் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது?

காதலுக்கு மரியாதை!

நல்ல படம் எடுத்தும் துயர தனிமையில் இருக்கும்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்.?

எதையும் நினைப்பதில்லை... படிப்பேன்!

கமர்ஷியல் படங்களைத் தவிர்த்து வித்தியாசமான படங்களை ஏன் பெரிய நடிகர்கள் பரிசோதித்துப் பார்ப்பதில்லை?

ஏனென்றால், அவர்கள் ஒன்றும் விஞ்ஞானிகள் இல்லை!

ஜப்பான், கொரிய படங்களிலிருந்து காப்பி அடிப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?

(சிரித்தபடி...) உங்கள மாதிரி ஆள் என்னோடு வேலை செய்யும்போது...

‘சூப்பர்ஸ்டார்’ மற்றும் ‘உலகநாயகன்’ பற்றி ஒரு வார்த்தை?

ரஜினிகாந்த், கமல்ஹாசன்

நீங்கள் இயக்குவதாக இந்த கமல் படம் ஏன் கைவிடப்பட்டது?

அது கைவிடப்பட்டது நல்லதுதான்!

‘சினிமாங்குறது பெத்த பிள்ளை மாதிரி... அதை யாரும் குறை சொல்லக்கூடாது’ன்னு நீங்க பேசியிருக்கீங்க. மிஷ்கின் பிள்ளையை ஏன் தியேட்டர்ல ரிலீஸ் பண்றீங்க?

உங்க அறிவை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்கு!

‘இளையதளபதி’ விஜய்யைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கடுமையான உழைப்பாளி!

‘காப்பிதான் அடிக்கிறேன்’னு வெளிப்படையா பேசுறீங்களே... உங்க மார்க்கெட் போயிடாதா?
நான் என்ன ஹீரோயினா... மார்க்கெட் போறதுக்கு?

உங்கள் பட போஸ்டர்களில் ஏன் டெக்னீஷியன்கள் பெயர்களைப் போடுவதில்லை?
போஸ்டர்ங்கிறது என் படத்தோட ஒரு ஃபிரேம். அதுல என் பெயர் போடுறதையே அவமானமா நினைக்கிறேன். தயாரிப்பாளர் ஒப்புக்கிட்டார்னா என் பெயரையும் தூக்கிடுவேன்.

‘தல’ அஜித்தை இளமையாக நடிக்க வைத்து ‘கேங்ஸ்டர்’ படம் இயக்குவீர்களா?

(சிரித்தபடி...) அஜித்துடன் படம் செய்ய ஆசைப்படுகிறேன்... ஆனால் கமர்ஷியல் படம் இல்லை... முக்கியமான படமாக!

உங்கள் குடும்பத்தைப் பற்றி எதுவுமே சொல்வதில்லையே?

நான் திருமணம் செய்திருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பே பிரிந்துவிட்டேன். அவ்வப்போது என் மகள் என்னை வந்து பார்த்துச் செல்வார். நான் படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன்...

அஜித் சார் நடிச்ச படத்துல உங்களுக்கு பிடிச்ச படம் எது?

அவர் ஒரு சிறந்த நடிகர்... நல்ல கேரக்டர்களை அவர் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்!

கடவுள் மேல நம்பிக்கை இருக்கா சார்?

கடவுள் மாதிரி சில மனிதர்களைப் பார்த்திருக்கேன்!

சினிமாவ நீங்கதான் கண்டு புடிச்சதா பேசிக்கறாங்களே உண்மையா சார் ?

உண்மை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;