மிஷ்கினின் ‘பிசாசு’ - திரை முன்னோட்டம்

மிஷ்கினின் ‘பிசாசு’ - திரை முன்னோட்டம்

முன்னோட்டம் 16-Dec-2014 11:21 AM IST Chandru கருத்துக்கள்

தனக்கென தனியாக பாணி ஒன்றை வகுத்து, அதன் மூலம் தொடர்ச்சியாக வித்தியாசமான படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் தொடங்கிய இவரின் திரைப்பயணத்தில், அவரின் 7வது படைப்பாக வெளிவரவிருக்கிறது ‘பிசாசு’. முதல் முறையாக இப்படத்தின் மூலம் ‘ஹாரர்’ படத்தை இயக்கியிருக்கிறார் மிஷ்கின்.

இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ தயாரித்திருக்கும் இப்படத்தில், அவர் இயக்கிவரும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் நாகா ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர், லண்டனில் ஃபிலிம் டெக்னாலஜி படித்து முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ‘பிசாசா’க நடித்திருப்பவர் புதுமுகம் பிரயாஹா. இவர்களோடு ராதா ரவி, மலையாள நடிகை கனி கஸ்ருதி (பர்மா படத்தில் நடித்தவர்), ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

‘யுத்தம் செய்’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ‘கே’வை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மிஷ்கின், இந்த ‘பிசாசு’வில் அரோல் கொரலி என்பவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். மொத்தம் இப்படத்தில் 2 பாடல்கள்தான். ஆனால், பின்னணி இசை படத்தில் பெரிதாக பேசப்படும் என்கிறார்கள்.

மிஷ்கின் படங்களில் கேமரா கோணங்கள் எப்போதும் தனித்துவம் பெற்றவையாக இருக்கும். ‘வைட் ஆங்கிள் ஷாட்’, ‘டாப் ஆங்கிள்’, ‘கால்களை மட்டுமே காட்டி காட்சிகளை நகர்த்துவது’ போன்றவை மிஷ்கின் படங்களின் ஸ்பெஷாலிட்டி. ‘பிசாசு’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஒளிப்பதிவாளர் ரவி ராய். படம் தொடங்கியதிலிருந்து படம் முடியும்வரை அரோல் கொரலியம், ரவி ராயும் தன் அலுவலத்திலேயே முழுநேரமும் தங்கியிருந்து வேலை பார்த்ததாக மிஷ்கின் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்காக ஹாங்காங்கிலிருந்து புரூஸ் லீ படங்களில் பணியாற்றிய டோனி எனும் ஸ்டன்ட் இயக்குனரை வரவழைத்து படமாக்கியிருக்கிறார்கள். மேற்கண்ட அந்த காட்சியில் பிசாசாக நடித்திருக்கும் நாயகி பிரயாகாவை 60 உயரத்தில் அந்தரத்தில் தொங்கிவிட்டு சுற்றி சுற்றி படமாக்கியிருக்கிறார்களாம். இந்தக் காட்சிக்கு தியேட்டரில் பலத்த கைதட்டல்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது ‘பிசாசு’ படக்குழு.

‘பிசாசு’ படம் வழக்கமான பேய்ப் படங்களைப் போல் இருக்காதாம். அன்பும், காதலும் நிறைந்த ஒரு நல்ல பேயின் கதையைத்தான் இப்படத்தில் காட்டியிருக்கிறாராம் மிஷ்கின். இன்னும் சொல்லப்போனால் ‘இப்படத்தில் வரும் பிசாசு போல் நமக்கும் ஒரு காதலி கிடைக்காதா’ என ஒவ்வொரு ரசிகனும் ஏங்கும் வகையில் இப்படம் இருக்குமாம். சமீபத்தில் வெளிவந்த ‘பிசாசு’ படத்தின் டீஸரும், ‘போகும் பாதை’ பாடல் வீடியோவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

‘திகில்’ படம் என்பதால், பெற்றோர்களுடன் அமர்ந்து மட்டுமே குழந்தைகள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சென்சார் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

கடந்த வாரம் ரஜினியின் ‘லிங்கா’ படம் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து இந்த வாரம் ‘பிசாசு’ வெளியாகவிருக்கிறது. இதனால் படத்திற்கு குறிப்பிட்ட அளவு தியேட்டர்கள் மட்டுமே கிடைக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘லிங்கா’ படத்தின் மீதான விமர்சனங்கள் இருவேறாக வந்து கொண்டிருப்பதால், ‘பிசாசு’ படத்திற்கு எதிர்பார்த்ததற்கும் அதிகமாக திரையரங்குகள் ஒதுக்கப்படலாமாம்.

சமீபகாலமாக பேய்ப் படங்கள் சரமாரியாக வெளிவந்து கொண்டிருந்தாலும், பாலாவுக்காகவும், மிஷ்கினுக்காகவும் ‘பிசாசு’ படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது தமிழ் சினிமா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;