வை ராஜா வை - டிரைலர் விமர்சனம்

வை ராஜா வை - டிரைலர் விமர்சனம்

கட்டுரை 11-Dec-2014 11:54 AM IST Chandru கருத்துக்கள்

ஐஸ்வர்யா தனுஷின் முதல் படமான ‘3’க்கு விமர்சனரீதியாக இருவேறு கருத்துக்கள் இருந்தாலும், அப்போதைய ‘யூத்’களின் ஃபேவரைட் பட்டியலில் இடம்பிடித்திருந்தது. தற்போது மீண்டும் ஒரு இளமை பொங்கும் கூட்டணியுடன் ‘வை ராஜா வை’ படத்தோடு வந்திருக்கிறார் ஐஸ்வர்யா. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நாயகன் நாயகியாக நடிக்க, டேனியல் பாலாஜியும், டாப்ஸியும் வில்லத்தனமான பாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள். அதோடு விவேக்கும், சதீஷும் காமெடிக்காக களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். 2 நிமிடங்கள் 50 வினாடிகள் ஓடும் இந்த டிரைலரில் படத்தின் கதை இதுதான் என்பதை லேசாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். ‘ஒரே ஒரு தப்பு நம்ப வாழ்க்கையையே திருப்பிப்போடும்’ என்ற ஒரு வரிக்கதையே ‘வை ராஜா வை’யாக இந்த டிரைலரில் விரிகிறது.

எல்லோரையும் போல சாதாரணமான பையனமாக இருக்கும் கௌதம் கார்த்திக்கிற்கு அசாதாரணமான விஷயம் ஒன்று இருக்கிறது என்கிறார்கள். ஆனால் அது என்ன என்பதைச் சொல்லவில்லை. டிரைலரை முழுதாகப் பார்த்து முடிக்கும்போது அந்த அசாதாரணமான விஷயம் ‘கேம்’களில் ‘ட்ரிக்’காக எதையோ செய்து வெற்றிபெறும் வல்லமை படைத்தவராக கௌதம் இருப்பார் என்று தோன்றுகிறது.

இப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு சுவாரஸ்யமாக பேர் வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. கௌதம் கார்த்திக்கிற்கு கார்த்திக், ப்ரியா ஆனந்திற்கு ப்ரியா, சதீஷிற்கு சதீஷ் என அவரவர் சொந்தப் பெயர்களிலேயே வர, விவேக்விற்கு வித்தியாசமாக ‘பாண்டா’ என்று பெயர் வைத்திருக்கிறார். விவேக்கின் ‘யூத்’ லுக்கையும், பாடி லாங்குவேஜையும் பார்க்கும்போது கண்டிப்பாக ‘விஐபி’போல் மனிதர் இதிலும் புகுந்து விளையாடியிருப்பார் என்றே தோன்றுகிறது.

யுவனின் இசையில் அவரே பாடியிருக்கும் ‘பச்சை வண்ணப் பூவே...’ பாடலும், ராஜாவின் வாய்ஸில் ஒலிக்கும் ‘மூவ் யுவர் பாடி’யும், ‘வை ராஜா வை’ பாடலும் கேட்டவுடன் உற்சாகம் தொற்றிக் கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. நிச்சயம் யுவனின் இசையில் உருவான இந்த ஆல்பத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.

‘‘டான்ஸ் ஆடுறவன்லாம் விஜய்யாக முடியாது..’’ ‘‘பைக் ஓட்றவன்லாம் அஜித்தாக முடியாது’’ போன்ற வசனங்கள் ‘கைதட்டல்’ வாங்குவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது.

முந்தைய இரண்டு படங்களைவிட கௌதம் கார்த்திக்கின் ‘துறுதுறு’ப்பு இன்னும் மெருகேறியிருக்கிறது. முதல் வெற்றியை சுவைக்க வேண்டுமென்ற ஆவல் அவரின் நடிப்பில் தெரிகிறது. வழக்கம்போல் ப்ரியா ஆனந்த் ‘கிளாமர் குயினா’க வந்துபோகிறார். டாப்ஸியின் கேரக்டரும், அவரின் டிரெஸ்ஸிங்கும் ‘வாவ்’ போட வைத்திருக்கிறது. டிரைலரின் இறுதியில் ‘மாரி’ தனுஷின் என்ட்ரி ஸ்வீட் சர்ப்ரைஸ்!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பட்ஜெட்டில் தாராளம் காட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை போன்றவற்றில் எனர்ஜி தெரித்திருக்கிறது. ’3’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் படத்தை தர முயன்றிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

மொத்தத்தில்... ‘வை ராஜா வை’யின் இந்த டிரைலர் தியேட்டருக்கு ‘வா ராஜா வா’ என ரசிகர்களை அழைத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;