ஐஸ்வர்யா தனுஷுக்கு பாலா அட்வைஸ்!

ஐஸ்வர்யா தனுஷுக்கு பாலா அட்வைஸ்!

செய்திகள் 11-Dec-2014 10:13 AM IST VRC கருத்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதல்வி ஐஸ்வர்யா தனுஷ், இசைஞானி இளையராஜாவின் புதல்வர் யுவன் சங்கர் ராஜா, நவரசநாயகன் கார்த்திக்கின் புதல்வர் கௌதம் கார்த்திக், கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர் மதன் கார்க்கி, தொழிலதிபரும், வெற்றிப் பட தயாரிப்பாளருமான ’கல்பாத்தி’ எஸ்.அகோரத்தின் புதல்வி கல்பனா அகோரம் ஆகியோர் கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள படம் ‘வை ராஜா வை’. ‘3’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் தனது இரண்டாவது படமாக இயக்கியுள்ள இப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, இவர்களுடன் டாப்சி, விவேக், சதீஷ், டேனியல் பாலாஜி முதலானோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘கொக்கி குமார்’ என்ற ஒரு கெஸ்ட் ரோலில் தனுஷும் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (10-12-14) காலை சென்னை வில்லிவாக்கத்திலுள்ள ஏ.ஜி.எஸ். தியேட்டரில் நடந்தது.

வழக்கமான ஆடியோ விழாக்கள் மாதிரி இல்லாமல் இப்படத்தின் ஆடியோ விழா வித்தியாசமாக நடைபெற்றது. விழாவுக்கு முன்னதாக ரஜினிகாந்த், இளையராஜா, வைரமுத்து, கார்த்திக், கல்பாத்தி எஸ்.அகோராம் முதலானோர் பேசிய வீடியோ திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பனா அகோரம், படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ், இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முதலானோர் ஒவ்வொருவராக விழாவை தொகுத்து வழங்கியது வித்தியாசமாக இருந்தது. விழாவுக்கு வந்திருந்த இயக்குனர் பாலா ஐஸ்வர்யா தனுஷை வாழ்த்தி பேசும்போது,

‘‘இன்று காலையில் பேப்பரை படிக்கும்போது அதில் இடம் பெற்றிருந்த ரஜினி சாரின் பேட்டியில் ‘எனது வாழ்க்கையில் ‘லிங்கா’ முக்கியமான படம்’ என்று கூறியிருந்தார். அது மாதிரி அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு ‘வை ராஜா வை’ முக்கியமான படம். ஐஸ்வர்யா முதலில் இயக்கிய ‘3’ படத்திலிருந்தே நான் அவரை கவனித்து வருகிறேன். ஓரிரு நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா எனக்கு ஃபோன் செய்து, ‘‘பாலா அண்ணா, ‘வை ராஜா வை’ படத்தின் ஆடியோ விழாவுக்கு நீங்க கண்டிப்பாக வரணும்’’னார். இல்லம்மா, நான் வெளியூர்ல படப்பிடிப்பில் இருக்கேன். இங்கே கிட்டத்தட்ட 300 பேரை வச்சு ஷூட் போய்கிட்டிருக்கு… எப்படின்னு நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ளே, இல்ல பாலா அண்ணா நீங்க விழாவுக்கு கண்டிப்பா வரணும்… இப்படி நான் அவருக்கு பதில் சொல்லி முடிக்கிறதுக்குள்ளேயே தொடர்ந்து பத்து தடவையாவது அவர், ‘பாலா அண்ணா நீங்க கண்டிப்பா வரணும்’னு சொல்லியிருப்பார். அப்படி அவர் சொன்னதுக்காக தான் நான் என்னோட படப்பிடிப்பை எல்லாம் நிறுத்தி வைத்து இங்கு வந்திருக்கேன். ‘வை ராஜா வை’ படத்தோட பாடல்களையும், டிரைலரையும் பார்க்கும்போது ஐஸ்வர்யா சாதித்து விட்டார் என்பது உறுதியாகி விட்டது. ஐஸ்வர்யா உனக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புறேன்! நீ எந்த காரணத்தைக் கொண்டும் தனுஷிடம் டேட்ஸ் கேட்டு போகாதே, தனுஷ் உன்கிட்ட தான் டேட்ஸ் கேட்டு வரணும்! அது மாதிரி நீ பார்த்துக் கொள்’’ என்றார். பாலா இப்படி பேசியதும் அரங்கம் ரசிகர்களின் கைத்தட்டல்களால் அதிர்ந்தது.

அதன் பிறகு இயக்குனர்கள் எஸ்.ஜே.சூர்யா, கே.வி.ஆனந்த் ஆகியோரும் வாழ்த்திப் பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;