‘திருடன் போலீஸ்’ பாலசரவணன் பேட்டி

‘திருடன் போலீஸ்’ பாலசரவணன் பேட்டி

கட்டுரை 10-Dec-2014 12:21 PM IST Chandru கருத்துக்கள்

சந்தானம், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய் டிவியிலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் காமெடி நடிகர் பால சரவணன். ‘குட்டிப்புலி’ பப்பு, ‘பண்ணையாரும் பத்மினியும்’ பீடை என்று சொன்னால் சட்டென நினைவுக்கு வந்துவிடுவார். சமீபத்தில் தினேஷுடன் அவர் நடித்த ‘திருடன் போலீஸ்’ திரைப்படம் அவரை தமிழ் சினிமாவின் இன்னொரு ‘சோலோ காமெடியன்’ ஆக்கியிருக்கிறது. ஏட்டு ‘வணங்காமுடி’யுடன் ஒரு வழக்கமான பேட்டி....

‘‘மதுரைப் பக்கத்துல பரவைதான் நமக்கு சொந்த ஊரு. படிச்சது இன்ஜினியரிங். ஆனாலும் சினிமாவுல நடிகனாகணும்னு ரொம்ப ஆசை. ரமணன் சார் மூலமா விஜய் டிவியோட ‘கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்’ சீரியல்ல நடிக்க வாய்ப்புக் கிடைச்சது. அதுக்கப்புறம் ‘பண்ணையாரும் பத்மினியும்’ குறும்படத்துல நடிச்சேன். நம்ம நடிப்பு பிடிச்சுப்போயி ‘ஈகோ’ படத்துல நடிக்க வாய்ப்புக் கொடுத்தாங்க. இதுதான் என்னோட சினிமா என்ட்ரி.

 rajini
அதுக்கப்புறம் ‘குட்டிப்புலி’ மூலமா ‘பப்பு’னு என்னை பேர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு வளர்த்துவிட்டாரு முத்தையா அண்ணன். அப்புறம் நண்பன் அருண்குமாரோட ‘பண்ணையாரும் பத்மினியும்’ குறும்படத்தை படமாக்கினப்போ விஜய்சேதுபதி அண்ணனோட நடிக்க சான்ஸ் கிடைச்சது. அதுல நான் நடிச்ச கேரக்டர் பேருதான் ‘பீடை’... ஆனா அது எனக்கு அதிர்ஷ்டமான கேரக்டர். இதோ இன்னிக்கு ‘திருடன் போலீஸ்’ படம் மூலமா ‘வணங்காமுடி’யா உங்க முன்னாடி பேசிக்கிட்டிருக்கேன்...’’ என தன் அறிமுகத்தை மூச்சுவிடாமல் பேசிக் கொண்டிருந்த பால சரவணனை இடைமறித்து ஆசுவாசப்படுத்தினோம்...

‘‘நீங்க குறும்படத்துல அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்திருக்கீங்கன்னு கேள்விப்பட்டோம்... அப்படியா?’’

‘‘நீங்க கேள்விபட்டது நிஜம்தான்... ‘நாளைய இயக்குனர்’ போட்டிக்காக உருவான ஆறேழு குறும்படத்துல நான் அசோசியேட் டைரக்டரா ஒர்க் பண்ணிருக்கேன். நான் நடிக்க வந்ததுமே ஒரு படமாவது டைரக்ட் பண்ணனும்ங்கிற ஆசை எனக்கு வந்துருச்சு. ஆனா, அதுக்காக உடனே ‘‘பால சரவணன் படம் இயக்கக் கிளம்பிட்டார்’’னு எழுதிடாதீங்க... இப்போதான் நம்மள ஒரு காமெடியனா ஏத்துக்கிட்டிருக்காங்க... இதுல இன்னும் நெறைய தூரம் போகணும். ஒரு நல்ல காமெடியன்னு பேரு வாங்கினதுக்கப்புறம்தான் ‘இயக்குனர்’ங்கிறதைப் பத்தியெல்லாம் யோசிக்கணும். இப்போதைக்கு நாலைஞ்சு ஸ்கிரிப்ட் எழுதி வச்சிருக்கேன். முதல்ல ஒரு நல்ல ஃபேன்டஸி படம் பண்ணணும்ங்கிறது என்னோட ஆசை!’’ என்றவர்... தான் உலக சினிமாக்களை மிகவும் விரும்பிப் பார்ப்பதாகச் சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்தினார்.

 rajini
‘‘லவ் மேரேஜாமே நீங்க...?’’ எனக் கேட்டதும் உற்சாகம் தொற்றிக் கொண்டது பாலசரவணனிடம்...

‘‘ஆமாங்க... லவ் மேரேஜ்தான்... மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடிஞ்சதுங்க நம்ம கதை. ஒரு தடவ என்னோட தோழி சூர்யாவுக்கு போன் பண்ணினப்ப, அவங்களுக்குப் பதிலா அவங்களோட ஃப்ரண்ட் ஹேமா எடுத்தாங்க. நான் சூர்யாகிட்ட பேசணும்னு சொன்னேன். உடனே அவங்க... ‘என்கிட்ட சொல்லுங்க நான் அவங்கிட்ட சொல்லிக்கிறேன்’னு கலாய்ச்சாங்க. அப்படி இப்படின்னு ரெண்டு பேருக்கும் சண்டை ஆகி மாறி மாறி திட்டிட்டு போனை வச்சுட்டோம். அப்புறம் சூர்யா எங்க ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி வச்சாங்க.

அதுக்கப்புறம் நான் சூர்யாவுக்கு பேசணும்னாகூட ஹேமாவுக்குதான் போன் பண்ணுவேன். அந்தளவுக்கு எங்க நட்பு வளர்ந்துச்சு. எனக்குள்ள அது காதலாவும் மாறிடுச்சு. என்னோட காதலை அவங்க தட்டிக்கழிக்காத அளவுக்கு எப்படி சொல்லணும்னு யோசிச்சு ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினேன். ஃப்ரண்டோட வீட்டுக்கு அவங்கள வரச்சொல்லி, தனியா சந்திச்சு ‘கடைசி வரைக்கும் நீ என் கூடவே இருப்பியா?’ன்னு கேட்டேன். ‘இருப்பேன்’ன்னு சொன்னாங்க. ‘கல்யாணத்துக்கப்புறம் எப்படி முடியும்’னு கேட்டேன். ‘அது கஷ்டமாச்சே...’ன்னாங்க. ‘என்னோட ஐடியாவைக் கேட்டா நாம ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் ஒண்ணாவே இருக்கலாம்’னேன். ‘எப்படி?’ன்னு ஆச்சரியமா கேட்டாங்க ஹேமா! பட்டுனு கையைப்பிடிச்சு ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா’ன்னு கேட்டுட்டேன். அவங்க ஆடிப்போயிட்டாங்க. இப்போ எங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு!’’ என ‘சட்’டென பொறுப்பான குடும்பத்தலைவராக மாறினார் பால சரவணன்.

 rajini
‘‘இப்போ என்னென்ன படம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?’’

‘‘ஏற்கெனவே பண்ணையாரும் பத்மினியும், நெருங்கி வா முத்தமிடாதே, திருடன் போலீஸ், ‘ஆ’ன்னு இந்த வருஷத்துலேயே நாலு படம் ரிலீஸ் ஆகிடுச்சு. ஜி.வி.பிரகாஷ் சார்கூட நான் நடிச்சிருக்கிற ‘டார்லிங்’ படம் சீக்கிரமே ரிலீஸாகவிருக்கு. மறுபடியும் விஜய்சேதுபதி அண்ணன் நடிக்கிற ‘இடம் பொருள் ஏவல்’ படத்துல ஒரு கேரக்டர் பண்றேன். ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் சார் இயக்கத்துல ஜெய்கூட ‘வலியவன்’ படத்துல நடிக்கிறேன். அப்புறம் ‘நகர்ப்புறம்’, ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’, திருடன் போலீஸ் டீம்கூட சேர்ந்து மறுபடியும் ஒரு படம்னு ‘லைஃப்’ நல்லபடியா போய்க்கிட்டிருக்குங்க.
ஆனாலும் எனக்கு ஒரு பெரிய வருத்தம் என்னன்னா, தனுஷ் சார்கூட நடிக்க வந்த வாய்ப்பு எனக்கு மிஸ்ஸாகிப் போச்சுங்கிறதுதான். ‘மாரி’ படத்துல ஒரு கேரக்டர்ல நடிக்க கேட்டிருந்தாங்க. ஆனா, அவங்க கேட்ட தேதியில வேற படம் இருந்ததாலே என்னால பண்ண முடியல. தனுஷ் சார் நடிப்பைப் பார்த்து நான் வியந்து போயிருக்கேன். ஆனா, அவர்கூட நடிக்க முடியாம போச்சேன்னு... மூணு நாள் எனக்கு தூக்கமே வரல!’’ என ’ஃபீலிங்’ பாடல் பாட,

’‘விடுங்க பாஸ்... சீக்கிரமே அந்த வாய்ப்பு உங்களுக்கு வரும்!’’ என ஆறுதல்படுத்தி வழியனுப்பி வைத்தோம் ‘நாளைய இயக்குனர்’ பால சரவணனை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

8 தோட்டாக்கள் - நீ இல்லை என்றால்


;