‘கயல்’ - டிரைலர் விமர்சனம்

‘கயல்’ - டிரைலர் விமர்சனம்

செய்திகள் 9-Dec-2014 11:13 AM IST Chandru கருத்துக்கள்

‘மைனா’, ‘கும்கி’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதையோடு களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் பிரபுசாலமான். ‘கயல்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. எப்படியிருக்கிறது ‘கயலி’ன் முன்னோட்டம்?

தமிழில் வந்த மிகப்பெரிய டிரைலரில் நிச்சயம் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும். மொத்தம் 3.15 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரில் படத்தில் இடம்பெறும் 6 பாடல்களையுமே காட்டிவிட்டார்கள். நாயகனும், அவனின் நண்பனும் எதையோ நோக்கி காடு, மலை, பாலைவனம் என மிகப்பெரிய பயணத்தில் ஈடுபடுகிறார்கள். ஏதோ ஒரு இடத்தில் நாயகன் சந்திரனும், நாயகி ஆனந்தியும் சந்திக்கிறார்கள். சந்தித்ததும் காதல். பின் பிரிவு. நாயகனைத் தேடிப் பயணம் செய்கிறார் நாயகி. இருவரும் சந்திக்கும் நேரத்தில் அவர்களைப் பிரிக்கிறது சுனாமி. கடைசியில் சேர்ந்தார்களா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்... இப்படி இந்த டிரைலரைப் பார்க்கும் ஒரு சாதாரண ரசிகன்கூட முழுப்படத்தையும் யூகித்துவிடும்படி படத்தின் மொத்தக் கதையையும் டிரைலரிலேயே காட்டிவிட்டார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது இந்த டிரைலர்!

ஆனால், இதையெல்லாம் தாண்டி இந்தப் படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவு, இசை, லொக்கேஷன்கள், கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள். டிரைலரில் வரும் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி அவ்வளவு பசுமையாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. குறிப்பாக அந்த ‘டாப் ஆங்கிள்’ அருவி காட்சியும்... இயற்கையாகவே மரத்தால் உருவான பாலங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளும்! இமானின் பின்னணி இசையும், பாடல்களும் நிச்சயம் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். அதேபோல் க்ளைமேக்ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் சுனாமி காட்சி ரசிகர்களுக்கு புதிய விருந்து படைக்கும்.

இப்படத்தில் நடித்திருப்பவர்கள் கதைக்கேற்ற யதார்த்தமான நடிப்பை வழங்கியிருப்பார்கள் என்ற நம்பிக்கையை இந்த டிரைலர் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக நாயகன், நாயகியின் நடிப்பு. நாயகனுடன் வலம் வரும் நண்பன் கவனிக்க வைத்திருக்கிறார். ‘‘எத்தனையோ பேர் காதலிக்காமலேயே செத்துப் போயிருப்பாங்கள்ல’’ என நாயகன் கேட்டதும், ‘‘பல பேர் காதலியாலேயே செத்துப் போயிருப்பாங்கள்ல’’ என அவரின் நண்பன் சொல்லுமிடம் ‘கைதட்டல்’களை அள்ளுவதற்காக சேர்க்கப்பட்டிருக்கிறது. ‘‘காதல் வர்ற வரைக்கும்தான் கண்ணு பேசும். வந்துருச்சுனா மனசு ரெண்டும் பேச ஆரம்பிச்சுரும்’’ என்ற வசனமும் ‘நச்’ ரகம்!

மொத்தத்தில்... முழுக்க முழுக்க டெக்னிக்கல் விஷயங்களை நம்பி மட்டுமே இந்த ‘கயல்’ படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் களமிறங்கியிருப்பாரோ என்ற நினைப்பை இந்த டிரைலர் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், கண்டிப்பாக படத்தை அகன்ற திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருப்பதையும் மறுக்க முடியாது.

‘கயல்’ - தொழில்நுட்பத்தில் பலம்... உணர்வுபூர்வத்தில்...?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;