11 புதுமுகங்கள், 17 பாடல்கள் - ஜேம்ஸ் வசந்தனின் கனவு படம்!

11 புதுமுகங்கள், 17 பாடல்கள் - ஜேம்ஸ் வசந்தனின் கனவு படம்!

செய்திகள் 6-Dec-2014 9:45 AM IST VRC கருத்துக்கள்

இசை அமைப்பாளராக இருந்து, பிறகு படங்களை இயக்கி இயக்குனராகவும் புரொமோஷன் பெற்ற கங்கை அமரன், எஸ்.எஸ்.குமரன் முதலானோர் வரிசையில் இப்போது இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக புரொமோஷன் பெற்றுள்ளார். ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். இப்படத்தை தொடர்ந்து ‘பசங்க’, ‘ஈசன்’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்த ஜேம்ஸ் வசந்தன் பாடல்கள் எழுதி, இசை அமைத்து, இயக்கியுள்ள படம் ‘வானவில் வாழ்க்கை’.

‘‘நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எதிர்காலத்தில் ஒரு இசைப் படம் இயக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதைத்தான் இப்போது நனவாக்கியிருக்கிறேன்’’ என்று கூறும் ஜேம்ஸ் வசந்தன், இப்படத்தில் 11 புதுமுகங்களை நடிக்க வைத்திருக்கிறார். அவர்கள் அத்தனை பேரும் வெவ்வேறு கல்லூரிகளில், வெவ்வேறு துறைகளில் படித்து வருபவர்கள்! இசை சம்பந்தமான படம் என்பதால இப்படத்தில் நடிக்கும் அத்தனை பேருக்கும் நடிப்புடன் பாடும் திறனும் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படிப்பட்டவர்களையே தேர்வு செய்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன். மேற்குறிப்பிட 11 பேருக்கும் நடிப்புடன், பாடும் திறமை, நடனம் ஆடும் திறமை இருக்கிறதாம்.

இப்படத்தில் ஒரு நிமிட பாடல், இரண்டு நிமிட பாடல், நான்கு நிமிட பாடல் என மொத்தம் 17 பாடல்களை வைத்து இப்படத்தை இயக்கியிருக்கியிருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். அத்துடன் படத்தில் நடித்துள்ளவர்களையே அப்பாடல்களை பாடவும் வைத்துள்ளார். ‘‘இந்த நவீன சினிமா காலகட்டத்தில் படத்தில் நடிப்பவர்களே பாடி நடிப்பது என்பது அனேகமாக இப்படத்தில் தான் இருக்கும்’’ என்றும் கூறும் ஜேம்ஸ் வசந்தனின் கனவு படமாம் இது! படத்திலுள்ள மொத்தம் 17 பாடல்களில் 9 பாடல்களை அவரே எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இளம் உள்ளங்களை கவரும் விதமாக இப்படத்தை உருவாக்கியிருப்பதாக கூறும் ஜேம்ஸ் வசந்தன் இப்படத்தை காதலர் தினத்தை (ஃபிப்ரவரி-14) முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக அதாவது, ஃபிப்ரவரி 13 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வானவில் வாழ்க்கை - டிரைலர் 2


;