இயக்குனர் சந்தானம், ஆக்ஷன் ஹீரோ உதயநிதி!

இயக்குனர் சந்தானம், ஆக்ஷன் ஹீரோ உதயநிதி!

செய்திகள் 5-Dec-2014 1:13 PM IST Chandru கருத்துக்கள்

தற்போது ‘நண்பேன்டா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. இப்படத்தை அவரின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆரம்பத்தில் நிறைய வெளிப்படங்களைத் தயாரித்த இந்நிறுவனம் சமீபமாக உதயநிதியின் படங்களை மட்டுமே தயாரித்து வந்தது. மற்ற படங்களை வாங்கி வெளியிட மட்டும் செய்தது. இந்நிலையில் மீண்டும் மற்றவர்களின் படங்களை தயாரிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறதாம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம். ‘கயல்’ படத்தைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கவிருக்கும் புதிய படமொன்றை தயாரிக்கவிருக்கிறதாம் ரெட் ஜெயன்ட்.

தனது முதல் 3 படங்களை காமெடி கதைகளாக தேர்வு செய்த உதயநிதி, தற்போது நடிக்கும் ‘இதயம் முரளி’ படத்தை காமெடிக்கு முக்கியத்துவம் இல்லாத கதைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக்கவிருக்கிறார்களாம். இப்படத்தில் சந்தானம் நடிக்கவில்லை. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் உதய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். ஹிந்திப் படம்போல் கொண்டாட்டமாக உருவாக்கப்படவிருக்கும் இப்படத்தின் சில முக்கிய படப்பிடிப்பு காட்சிகள் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது.

‘இதயம் முரளி’யைத் தொடர்ந்து ‘என்றென்றும் புன்னகை’ அஹமது இயக்கும் ‘கெத்து’ படத்தில் நடிக்கிறார் உதயநிதி. இதில் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார். உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். அப்பா & மகன் சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 3 சண்டைக் காட்சிகள் கொண்ட ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கிறது இந்த ‘கெத்து’.

இது ஒருபுறமிருக்க உதயநிதிக்காக சந்தானமும் ஒரு கதையை உருவாக்கி வைத்திருக்கிறாராம். மேற்படி படங்கள் முடிவடைந்ததும் சந்தானத்தின் கதையை கேட்கவிருக்கிறார் உதயநிதி. எல்லாம் ஓ.கே.யானால் விரைவில் சந்தானத்தின் இயக்குனர் அவதாரத்தை தரிசிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;