ரசிகர்களை நெகிழவைத்த விஜய்யின் அறிக்கை!

ரசிகர்களை நெகிழவைத்த விஜய்யின் அறிக்கை!

செய்திகள் 5-Dec-2014 9:06 AM IST Chandru கருத்துக்கள்

விஜய் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் வெளியானது 1992ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி. நேற்றோடு தமிழ்த் திரையுலகில் விஜய் கால்பதித்து 22 வருடங்கள் கடந்திருக்கின்றன. சாதாரண நடிகனாக அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கிறார் இந்த இளையதளபதி. வசூலில் பல சாதனைகள் படைத்திருக்கும் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தரப்பினரும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

தன்னுடைய இந்த நீண்ட நெடும்பயணத்தில் தன் வளர்ச்சிக்கு கைகொடுத்தவர்களுக்கு ஒரு நீண்ட பெரிய நன்றி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் விஜய். ‘நன்றி’ என ஒற்றை வார்த்தையில் அனைவருக்கும் பொதுவாக சொல்லாமல், ஒவ்வொருவரின் பெயரையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு அவர் நன்றி தெரிவித்திருப்பது அவரின் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது.

‘செந்தூரப்பாண்டி’ படத்தைத் தயாரித்த பி.வி.கம்பைன்ஸ் நிறுவனர் விமல் முதல் ‘ஜில்லா’ படத்தைத் தயாரித்த ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன் நிறுவனர் சந்திரபிரகாஷ் ஜெயின் வரை தன் படங்களைத் தயாரித்த ஒவ்வொரு தயாரிப்பாளரின் பெயரையும் தனித்தனியாக அந்த நன்றி அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு தன்னை இவ்வளவு உயரத்திற்கு கொண்டுவந்தவர்களில் முக்கியப் பங்கு வகித்த தன் படங்களின் இயக்குனர்களான ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின் இயக்குனர் ஜானகி சௌந்தர் முதல் ‘கத்தி’யின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வரை அத்தனை இயக்குனர்களுக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்திருக்கிறார். அதோடு தன்னோடு பணியாற்றிய அத்தனை நடிகர்கள், நடிகைகள், துணை நடிகர்கள், காமெடியன்கள், டெக்னீஷியன்கள், யூனிட் ஆட்கள் என ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

கடைசியாக, அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்த வாசகங்கள்தான் ரசிகர்களை ஆனந்தக்கண்ணீர் விட வைத்திருக்கிறது. அதில்... ‘‘இத்தனை வருடங்களாக என்னோட இணைந்திருக்கும் ரசிகர்களாகிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே எனக்கு சத்தியமாகத் தெரியவில்லை. வெற்றி, தோல்வி என்று பார்க்காமல் எப்போதுமே நீங்கள் என்னுடன் இருந்து வருகிறீர்கள். நீங்கள் எனக்காக செய்துகொண்டிருப்பதற்கு நிகராக நான் நன்றி தெரிவிக்கும் அளவுக்கு ஒரு வார்த்தை இந்த உலகத்தில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இன்றைக்கு நான் அடைந்திருக்கும் இந்த வளர்ச்சிக்கு நீங்கள் என்மேல் காட்டிய அன்புதான் காரணம். எப்போதும் நான் சொல்வதுபோல, என் நெஞ்சில் குடியிருப்பது நீங்கள்தான்!’’ என நெகழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய்யின் இந்த அறிக்கை வெளிவந்தபிறகு பல ரசிகர்களும் அவரைப் பாராட்டியும், புகழ்ந்தும், அவரை நினைத்து பெருமைப்பட்டும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவிலிருந்து இப்போது வரை #VIJAY_22YearsOfGloriousJourney என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் டிரென்டில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;