‘தூய்மை கீதம்’ இயற்றும் கவிஞர் வைரமுத்து!

‘தூய்மை கீதம்’ இயற்றும் கவிஞர் வைரமுத்து!

செய்திகள் 3-Dec-2014 9:05 AM IST Chandru கருத்துக்கள்

சமீபகாலமாக படங்களுக்கு தன்னுடைய பங்களிப்பைத் தருவதைவிட, சமூகப் பணிகளிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார் 6 முறை தேசிய விருதை வென்ற கவிப்பேரரசு வைரமுத்து. பல இலக்கியங்களையும், கவிதைத் தொகுப்புகளையும் படைத்து தமிழ் மொழியின் பெருமையை உலகமெங்கும் சென்று சேர்ப்பதில் வைரமுத்துவின் பேனாவிற்கு பெரும் பங்குண்டு.

சமீபத்தில் பாராட்டு விழா ஒன்றில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. தருண் விஜய்யிடம், ‘‘காளிதாசனையும், வால்மீகியையும், தாகூரையும் நாங்கள் கொண்டாடுகிறோம். இளங்கோவடிகளையும், கம்பரையும், திருவள்ளுவரையும் நீங்கள் கொண்டாடலாமே!’’ என்று கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்களுக்கு முன்பு டெல்லி மேல் சபையில் பேசிய எம்.பி. தருண் விஜய், ‘‘திருவள்ளுவரின் பிறந்தநாளை வடஇந்திய பள்ளிகளில் கொண்டாடுவதற்கும், திருக்குறளின் சிறப்புகளை பள்ளி குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார். அவரது கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு (2015) முதல் இந்தியாவின் அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய மந்திரி ஸ்ம்ருதி இரானி தெரிவித்தார். வைரமுத்து பற்ற வைத்த ஒரு சிறு தீப்பொறி இன்று இந்தியாவெங்கும் திருவள்ளுவரின் புகழைப் பரப்ப ஒரு பெரும் தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி அவர்களின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘தூய்மை கீதம்’ ஒன்றை இயற்றும் பணியில் வைரமுத்து ஈடுபட்டிருக்கிறார். கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் 1) பா.ஜ.க.வைச் சேர்ந்த வானதி ஸ்ரீனிவாஸன் வைரமுத்துவின் வீட்டிற்குச் சென்று, ‘‘தூய்மை இந்தியா திட்டத்திற்கு சிறப்பானதொரு பாடலை நீங்கள் உருவாக்க வேண்டும்’’ என்ற கோரிக்கையை வைக்க, வைரமுத்துவும் உடனடியாக அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

விரைவில் வைரமுத்துவின் ‘தூய்மை கீதம்’ இந்தியாவெங்கும் ஒலிக்கும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;