காவியத்தலைவன் - விமர்சனம்

ரஹ்மான் ராஜ்ஜியம்!

விமர்சனம் 28-Nov-2014 2:59 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஒய்நாட் ஸ்டுடியோஸ், ரேடியன்ஸ் மீடியா
இயக்கம் : வசந்த பாலன்
நடிப்பு : சித்தார்த், ப்ரித்விராஜ், வேதிகா, அனைகா, நாசர், தம்பி ராமையா
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
எடிட்டிங் : பிரவீன் கே.எல்.

‘அரவான்’ படத்தைத் தொடர்ந்து மேடை நாடகங்களை தியேட்டருக்குள் அமைத்திருக்கிறார் வசந்த பாலன். கவர்ந்திருக்கிறதா ‘காவியத்தலைவன்’?

கதைக்களம்

புகழ் வெறியும், பொறாமை குணமும் கொண்ட ஒரு திறமையான நாடகக் கலைஞனால் ஒரு பெரிய நாடகக் கம்பெனி எப்படி அழிகிறது என்பதுதான் ‘காவியத்தலைவன்’ படத்தின் மையக்கரு.

புகழ்பெற்ற மேடை நாடகக் கலைஞரான சங்கரதாஸ் ஸ்வாமிகளிடம் (நாசர்) நடிப்பு பயில சிறுவயதிலேயே வந்து சேர்கிறார் கோமதி நாயகம் (ப்ரித்விராஜ்). பின்னர் ரயில் பயணம் ஒன்றில் பிச்சையெடுக்கும் சிறுவன் காளியப்பாவின் (சித்தார்த்) பாடல்களைக் கேட்டு, அவனையும் தன் நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொள்கிறார். இருவரும் திறமையான நடிகர்களாக வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். பஞ்சம் பிழைக்க வழியில்லாத வடிவாம்பாளும் (வேதிகா) அவர்களோடு வந்திணைகிறார்.

இவர்களுடைக்கிடையே நடக்கும் உணர்ச்சிமிகுந்த காவியம்தான் ‘காவியத்தலைவன்’.

படம் பற்றிய அலசல்

இப்படியொரு படத்தை எடுக்கத் துணிந்த இயக்குனர் வசந்தபாலனுக்கும், வசூல் எந்தளவுக்கு இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதை உருவாக்க பணம் போட்ட தயாரிப்பாளர்களையும் முதலில் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

படம் முழுக்க நாடக மேடையைத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனாலும் இரண்டரை மணி நேரம் நம்மால் உட்கார்ந்து அந்த காவியத்தை ரசிக்க முடிந்திருக்கிறது என்றால், அதற்கு முதல் காரணம் ரஹ்மான்தான். பின்னணி இசையிலும், பாடல்களிலும் தன் திறமையை முழுவதுமாக காட்டியிருக்கிறார் ரஹ்மான். இப்படத்திற்காக அவருக்கு பல விருதுகள் நிச்சயம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

படத்தின் கதை ரொம்பவும் சாதாரணமானதுதான். ஆனால், அதை உணர்ச்சிபூர்வமாகவும், நாம் இதுவரை பார்த்திராத அந்தக்கால நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையோடும் சொல்லியிருப்பதுதான் ‘காவியத்தலைவனி’ல் புதுமை. முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவும், அதிக பாடல்களுடனும் நகர்ந்தாலும் இடைவேளைக்கு முன்பு நாசருக்கும், சித்தார்த்துக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிபூர்வமான காட்சிக்குப் பிறகு வேகமெடுக்கிறது. இரண்டாம்பாதி விறுவிறுப்பாகவும், பல சுவாரஸ்யமான காட்சிகளுடனும் நகர்ந்து க்ளைமேக்ஸில் கண் கலங்க வைத்திருக்கிறது.

படத்தின் பலவீனம் என்று பார்த்தால் முதல்பாதி 1 மணி 25 நிமிடங்கள் ஓடுவதும், கதைக்கு கொஞ்சமும் பொருந்தாத அனைகாவின் பாத்திரப்படைப்பையும்தான் சொல்ல வேண்டும். இந்த விஷயங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி ஒரு புதுவிதமான அனுபவத்தைத் தந்திருக்கிறது வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’. செட், ஆடை ஆலங்காரங்கள், ஒப்பனை ஆகியவை சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

இப்படத்தில் நடிகர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. சித்தார்த்தின் கேரியரில் இப்படம் கண்டிப்பாக பெரிய அளவில் இடம்பிடிக்கும். காளியப்பாவாக பின்னி எடுத்திருக்கிறார். நடிப்பதற்கு வாய்ப்புள்ள அருமையான கேரக்டர். அதை கச்சிதமாகவும் செய்திருக்கிறார். வில்லனாக இருந்தாலும், நடிப்பில் ஹீரோ ப்ரித்விராஜ்தான். பொறாமை உள்ள ஒரு கலைஞனாகவே வாழ்ந்திருக்கிறார். அர்ஜுனனாக, கர்ணனாக, நரகாசூரனாக, முருகனாக, கிருஷ்ணாக படம் முழுக்க மிரட்டியிருக்கிறார்கள் சித்தார்த்தும், ப்ரித்வியும்.

கதாநாயகிகள் அனைகா, வேதிகாவுக்கு சின்ன வேடங்கள்தான். அனைகாவைவிட வேதிகா சிறப்பாக செய்திருக்கிறார். நாசர், பொன்வண்ணன் போன்றவர்களெல்லாம் பிறவிலேயே கூத்துக்கலைஞர்கள். அவர்களின் நடிப்பு எப்படியிருக்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. தம்பி ராமையா, சிங்கம்புலி கொஞ்சம் சிரிக்க வைத்ததோடு, சீரியஸ் முகமும் காட்டியிருக்கிறார்கள்.

பலம்

1. ரஹ்மானின் பாடல்களும், அற்புதமான பின்னணி இசையும்.
2. படத்தின் இரண்டாம்பாதியும், உணர்ச்சிபூர்வமான க்ளைமேக்ஸும்
3. நடிகர்களின் பங்களிப்பு

பலவீனம்

1. முதல்பாதியின் போரடிக்கும் ஒரு சில காட்சிகள்.
2. கதைக்களத்திற்குப் பொருந்தாத அனைகாவின் பங்களிப்பு.
3. நாடகக்கலையில் பக்க வாத்தியங்களுக்கும் முக்கிய இடமுண்டு. ஆனால், ஒன்றிரண்டு முறை மட்டுமே பக்கவாத்தியம் இசைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதற்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

மொத்தத்தில்...

ஆண்டிப்பட்டியில் இருக்கும் ரசிகன்கூட ‘அவதார்’ படத்தை வாய்பிளந்து பார்க்கும் அளவிற்கு டெக்னாலஜி சம்பந்தப்பட்ட சினிமாக்களாக வந்து கொண்டிருக்கும் இப்போதைய சூழ்நிலையில், இரண்டரை மணி நேரத்திற்கு மேடை நாடகம் போட்டுக் காட்டியிருக்கிறது ‘காவியத்தலைவன்’. படைப்பாக பாராட்டுவதற்கு நிறைய சிறப்பம்சங்கள் இப்படத்தில் நிச்சயம் இருக்கின்றன. ஆனால், கமர்ஷியலாக இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவைப் பொருத்தே ‘காவியத்தலைவனி’ன் வெற்றியும், நல்ல சினிமாக்கள் அவ்வப்போது வெளிவருவதற்கான பாதையும் உருவாகும்.

ஒரு வரி பஞ்ச்: ரஹ்மான் ராஜ்ஜியம்!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செய் - டீசர்


;