கிரண்பேடியின் ஆதங்கத்தை நிறைவேற்றிய பார்த்திபன்!

கிரண்பேடியின் ஆதங்கத்தை நிறைவேற்றிய பார்த்திபன்!

செய்திகள் 27-Nov-2014 10:13 AM IST VRC கருத்துக்கள்

வழக்கமான ஆடியோ விழாக்கள் போல் இல்லாமல் அர்த்தமுள்ள, வித்தியாசமான ஒரு ஆடியோ விழாவாக அமைந்திருந்தது நேற்று மாலை சென்னையில் நடந்த பேரரசுவின் ‘திகார்’ பட ஆடியோ விழா! இப்படத்தின் ஆடியோவை வெளியிட டெல்லியிருந்து சென்னை வந்திருந்தார் ‘இந்தியாவின் இரும்பு மங்கை’ என்று அழைக்கப்படும் முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடி! ஆடியோவை பெற்றுக்கொள்ள, இந்திய சுதந்திரத்திற்காக சிறை சென்ற தியாகச் செம்மல் வா.உ.சிதம்பரம் பிள்ளையின் பேரன் சி.வா.சிதம்பரம் வந்திருந்தார். இவர்களுடன் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உட்பட பலர் விழாவில் கலந்துகொள்ள ‘திகார்’ ஆடியோ வெளியீட்டு விழா களை கட்டியது.

‘திகார்’ ஜெயிலில் பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டும், அங்குள்ள கைதிகளிடத்தில் மனித நேயத்தை காட்டியும், திகார் ஜெயிலை ஒரு ஆசிரமத்தின் அமைதிக்கு கொண்டு சென்ற பெருமைக்குரிய போலீஸ் அதிகாரி கிரண்பேடி. அவர், ‘திகார்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்து பேசும்போது, ‘‘திகார்’ படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக உணருகிறேன். ஆனால இங்கு பேசியவர்கள் எல்லோரும் திகார் ஜெயில் என்றாலே ‘திக் திக்’ என்று இருக்கும் என்று பொருள்படும் படி பேசினார்கள். ஆனால் திகார் ஜெயில் அமைதியான இடம். திரைப் படங்களில் சித்தரிப்பது போன்ற வன்முறைகள் எல்லாம் அங்கு இல்லை. (அரங்கத்தில் கைத்தட்டல்களுடன் கூடிய பலத்த சிரிப்பு...) வன்முறை ஒரு போதும் வாழ்க்கைக்கு கை கொடுக்காது. நான் திகார் ஜெயில் அனுபவங்கள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளேன். அந்த புத்தகம் இத்தாலி பல்கலைகழகத்தில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புத்தகத்தை தமிழில் மொழிமற்றம் செய்து வெளியிட யாரும் முன் வந்ததிலை. அந்த புத்தகத்தில் உள்ள விஷயங்களை அப்படியே திரைப்படமாக்கினால் அந்த படத்திற்கு ஆஸ்கார் விருது உட்பட பல விருதுகள் கூட கிடைக்கலாம். அவ்வளவு விஷயங்கள் அந்த புத்தகத்தில் இருக்கிறது. திரைப்படங்களில் வன்முறையை காட்டுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். கல்வி அறிவை ஊட்ட வேண்டும். அனைவரிடத்திலும் கல்வி இருந்தால் வன்முறை, குற்றங்கள் நிகழாது. திகார் ஜெயிலில் நான் பணியாற்றும்போது நிறைய பெண் கைதிகளை தன் குழந்தைகளுடன் பார்த்திருக்கிறேன். அந்த குழந்தைகளை படிக்க வைக்க ஜெயிலில் கைதிகளாக இருக்கும் படித்தவர்களை பயன்படுத்தி, அந்த குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஊட்டியுள்ளேன். இங்கு பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தான் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தபோது அங்குள்ள கிட்டத்தட்ட 1500 போலீசார் தனக்கு ரசிகர்களாகி விட்டார்கள் என்று பேசியுள்ளார். ஆனால் திகார் போலீஸ் அதிகாரிகள் அப்படியொன்றும் அவருக்கு ரசிகர்களாகியிருக்க மாட்டார்கள். படித்தவர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போகிறார்கள். அப்படி போகிறவர்கள் எல்லோரும் ஜெயிலில் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்’’ என்று கிரண்பேடி பேசியதும் அரங்கத்தில் மீண்டும் அப்படியொரு கைத்தட்டல்... சிரிப்பு!

கிரண்பேடி பேசி முடித்ததும், அவர் எழுதிய புத்தகத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடும் பொறுப்பினை தான் ஏற்றுக் கொள்வதாகவும், 2015-ல் அதை செய்து முடிப்பேன் என்றும், அதற்கான விழாவிலும் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் நடிகர் பார்த்திபன் கிரண்பேடியிடம் வேண்டுகோள் வைக்க, அவரும் அதை ஏற்றுக்கொண்டார். இயக்குனர் பேரரசுவும் தான் இனி இயக்கும் படங்களில் வன்முறை காட்சிகளை குறைத்துக் கொள்வேன் என்றும், கல்வி, மனித நேயம் முதலிய சமூக விஷயங்களை வலியுறுத்தும் படங்களை தான் எடுப்பேன் என்று கூறியதோடு, கிரண் பேடி அவர்களின் புத்தகத்தை பார்த்திபன் தமிழில் மொழிமற்றம் செய்ததும் அதை படமாக்க இருக்கிறேன் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக - டிரைலர்


;