சாத்தியமா... ஐ VS என்னை அறிந்தால் VS ஆம்பள?

சாத்தியமா... ஐ VS என்னை அறிந்தால் VS ஆம்பள?

கட்டுரை 24-Nov-2014 11:07 AM IST Chandru கருத்துக்கள்

250 நாட்கள், 25 வாரம், 100 நாட்கள் என்பது அரிதாகிப்போய் தற்போது 2, 3 வாரத்திற்குள் குறிப்பிட்ட வசூலை ஈட்டிவிட்டு 4வது வாரத்தில் தியேட்டரைவிட்டு படங்கள் வெளியேற வேண்டிய அளவுக்குதான் இன்றைய தமிழ்சினிமாவின் சூழ்நிலை இருக்கிறது. எந்த பெரிய படமாக இருந்தாலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு முடிந்தளவு வசூலைக் குவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில், வரும் பொங்கலுக்கு 3 படங்கள் ஒரே நேரத்தில் மோதவிருக்கின்றன. இது சாத்தியமா...? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

தீபாவளிக்கே வெளியாக வேண்டிய ஷங்கரின் ‘ஐ’ படம் பின்னணி இசை சேர்ப்பு, கிராஃபிக்ஸ் வேலைகள், விக்ரமின் ‘டப்பிங்’ பணிகள் என இழுத்துக் கொண்டே போய் ஒருவழியாக வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என உறுதி செய்துவிட்டார்கள். ஆனால், இதே பொங்கலுக்கு கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்...’ படமும் ரிலீஸ் என கடந்த சனிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பே விஷாலின் ‘ஆம்பள’ படமும் பொங்கல் ரிலீஸ் என உறுதியளித்திருக்கிறது. மூன்றுமே முன்னணி நடிகர்கள் நடித்த படம், மூன்றுமே முன்னணி இயக்குனர்கள் இயக்கிய படம், ‘ஆம்பள’யைத் தவிர்த்த மற்ற இரண்டும் மெகா பட்ஜெட் படம்... இப்படியிருக்க இந்த மூன்று படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் வசூல் பாதிக்கப்படாதா? மூன்று படங்களுக்கும் வசூல் ரீதியிலான வெற்றி சாத்தியமாகுமா? என பல கேள்விகள் எழுகின்றன.

இதேபோன்றதொரு சூழ்நிலைதான் இந்த வருடப் பொங்கலுக்கும் ஏற்பட்டது. விஜய்யின் ‘ஜில்லா’வும், அஜித்தின் ‘வீரம்’ படமும் ஒரே நேரத்தில் வெளியாகி, இரண்டுமே அதிக வசூலைக் குவித்தாலும், இரண்டும் எதிர்பார்க்கப்பட்ட இலாபத்தை எட்டவில்லை என்ற நிலைமை உருவானது. ஒரு சில தியேட்டர்களில் நஷ்டமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘ஜில்லா’ படத்திற்கு விமர்சனரீதியாக எதிர்மறையான கருத்துக்கள் இருந்தாலும், அது வசூலை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அதற்கு காரணம் விஜய்யின் மார்க்கெட். அதேபோல் ‘வீரம்’ படம் அஜித் என்ற ‘மாஸ் ஓபனிங் ஹீரோ’ நடித்திருந்தாலும், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தாலும், ‘ஜில்லா’ படத்தின் சமபலப் போட்டியால் ‘வீரம்’ படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதையும் மறுக்க முடியாது. அப்போதையை சூழ்நிலையில் இந்த இரண்டு படங்களுமே தனித்தனியாக வெளிவந்திருந்தால் இன்னும் அதிக லாபம் சம்பாதித்திருக்கும் என்ற கருத்து எழுந்தது. குறிப்பாக ‘வீரம்’ பெரிய அளவில் லாபத்தை ஈட்டியிருக்கும் என பல தியேட்டர் அதிபர்கள் வெளிப்படையாகவே கூறினார்கள்.

தற்போது 2015 பொங்கலுக்கு 3 படங்கள் வெளியாக ஆயத்தமாகிக் கொண்டிருந்தாலும், அஜித் படம் ஜனவரி 8ஆம் தேதியே வெளியாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கின்றன. ஆனால், ‘ஐ’யும், ‘ஆம்பள’யும் தெலுங்கு சங்ராந்தியையும் மனதில் வைத்து ஜனவரி 15ஆம் தேதிதான் திரைக்கு வரவிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும், 3 படங்களின் ரிலீஸுக்கும் இடையில் ஒரு வார காலம் இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியை மனதில் வைத்தே மூன்று படங்களும் பொங்கலை முன்னிட்டு களமிறக்கப்படுகின்றன.

ஜனவரி 8ஆம் தேதி ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும் பட்சத்தில் நிச்சயம் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தியேட்டர்களை இப்படம் ஆக்ரமித்துக் கொள்ளும். படமும் நன்றாக இருக்குமேயானால், ஒரு வார காலத்திற்குள் மிகப்பெரிய வசூலை இப்படம் குவிக்கும். இதனால் எதிர்பார்க்கும் லாபத்தை இந்த ஒரு வாரத்திற்குள் எட்டுவதற்கும் சாத்தியம் இருக்கிறது. அதேநேரம் பொங்கல் விடுமுறையான 15, 16, 17 தேதிகளில் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கான தியேட்டர்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, அந்த இடங்களை ‘ஐ’யும், ‘ஆம்பள’யும் ஆக்ரமித்துக் கொள்ளும். ஏனென்றால் ‘ஐ’ படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதோடு, இப்படத்தை விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் பெரிய விலை கொடுத்து வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, பெரிய எண்ணிக்கையில் ரிலீஸ் செய்தால் மட்டுமே திட்டமிட்ட வசூலை ‘ஐ’ படம் எட்டும்.

ஆனால், இந்த இரண்டு படங்களும் இப்படி குறுகிய இடைவெளியில் வெளியாவதால், இன்னும் ஒரு சிக்கலும் இருக்கிறது. இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தால், இரண்டும் தனியாக ரிலீஸ் செய்து சந்திக்கும் வசூல் அளவுக்கு இணைந்து வெளியிடும்போது கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல், ஏதாவது ஒரு படத்திற்கான வரவேற்பு குறையும் பட்சத்தில் அந்தப் படம் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

என்றாலும் ‘ஐ’ படத்தைப் பொறுத்தவரை, தயாரிப்பாளர்கள் தமிழக வசூலை நம்பி மட்டுமே களமிறங்கவில்லை. மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஷங்கரின் படத்திற்கென தனி மார்க்கெட் உள்ளது. எனவே, தமிழகத்தைத் தவிர்த்த மற்ற பகுதிகளிலேயே, குறிப்பாக வெளிநாடுகளிலேயே ‘ஐ’ படம் அதிகம் வசூல் செய்யும் என்ற தயாரிப்பாளர்களின் நம்பிக்கையும் பொங்கல் ரிலீஸிற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. தவிர, ஏற்கெனவே தீபாவளி வெளியீடும் தள்ளிப்போய் இந்த பொங்கலுக்கும் ‘ஐ’ படம் ரிலீஸாகவில்லை என்றால், அதற்கடுத்த பெரிய விடுமுறை தினம் என்பது ‘கோடை விடுமுறை’ காலத்தில் மட்டுமே இருக்கிறது. ஏப்ரல் வரை ‘ஐ’ படத்தை தள்ளிப்போட்டால், ஏற்கெனவே இருக்கும் எதிர்பார்ப்பு வெகுவாகக் குறைந்துபோகும் அபாயமும் இருப்பதால், ‘ஐ’ படம் கண்டிப்பாக பொங்கல் பண்டிகையை ‘மிஸ்’ செய்யாது என்கிறார்கள் அதன் வட்டாரத்திலிருப்போர்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் சுந்தர்.சியின் இயக்கத்தில் விஷால் தயாரித்து, நடிக்கும் ‘ஆம்பள’ படமும் பொங்கல் ரிலீஸ் என்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். ‘சொன்னால் சொன்னபடி ரிலீஸ் செய்வார் விஷால்’ என்ற நம்பிக்கை ஒன்று கோடம்பாக்கத்தில் ஏற்பட்டுவிட்டதால், பொங்கல் வெளியீட்டு முடிவை மாற்றிக் கொள்வதற்கு விஷால் முன்வருவாரா என்பது சந்தேகமா? அதுபோக, சுந்தர்.சியின் படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளிவந்து விமர்சனரீதியாக எதிர்மறை கருத்துக்களை சந்தித்தபோதும், வசூலில் சக்கைபோடு போட்ட சுந்தர்.சியின் ‘அரண்மனை’யைச் சொல்லலாம். நீண்ட நாட்கள் கழித்து குடும்பம் குடும்பமாக தியேட்டர்களை ஆக்ரமித்தது இப்படத்திற்குதான். எனவே, 15, 16, 17 என 3 நாட்களில் தியேட்டருக்குப் படையெடுக்கவிருக்கும் பெண்கள், குழந்தைகள் கூட்டத்தை ‘ஆம்பள’ படம் எப்படி தவறவிடும்?

ஆனால், எப்படியோ இந்த 3 படங்களுமே பொங்கலுக்கு வெளியாகுமேயானால், தியேட்டர்கள் பிரித்துக் கொடுப்பதில்தான் பெரிய சிக்கலே ஏற்படும். ‘என்னை அறிந்தால்’ படம் ஒரு வாரத்திற்கு முன்பே ரிலீஸ் ஆனாலும், பொங்கல் பண்டிகைக்கும் அந்தப் படத்திற்காக குறிப்பிட்ட அளவிலாவது தியேட்டர்கள் ஒதுக்கித்தான் ஆக வேண்டும். அதேபோல் ‘ஐ’ படத்தின் பட்ஜெட்டை மனதில் வைத்து அதற்கும் பெரிய எண்ணிக்கையில் தியேட்டர் ஒதுக்கியாக வேண்டும். இன்னொருபுறம் விஷாலுக்கு தியேட்டர் அதிபர்கள் மத்தியிலும், விநியோகஸ்தர்கள் மத்தியிலும் நல்ல பெயர் இருப்பதால் அவரையும் புறக்கணிக்க அவர்கள் யோசிக்கவே செய்வார்கள். இந்த 3 படங்களில் ‘என்னை அறிந்தால்’ மட்டுமே தன் ரிலீஸ் தேதியை மாற்றிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், அதையும் கௌரவப் பிரச்சனையாக ஆக்கினால், 3 படங்களும் ஒரே நேரத்தில் மோதிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. இதனால் பாதிக்கப்படப்போவது தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும்தான்.

விட்டுக்கொடுத்தல் என்பது வாழ்க்கைக்கு மட்டுமல்ல வியாபாரத்திற்கும் நல்லது என்ற புரிதல் வரும் பட்சத்திலேயே இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வாக அமையும். என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள பொங்கல் வரை பொறுத்திருப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;