காடு - விமர்சனம்

பொழுதுபோக்குவதற்கு அல்ல!

விமர்சனம் 22-Nov-2014 12:59 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : சக்கரவர்த்தி ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் : ஸ்டாலின் ராமலிங்கம்
நடிப்பு : விதார்த், சமஸ்க்ருதி, சமுத்திரக்கனி, தம்பி ராமையா
இசை : கே.
ஒளிப்பதிவு : மகேந்திரன் ஜெயராஜு
எடிட்டிங்: மு.காசிவிஸ்வநாதன்

கதைக்களம்

காரப்பாடி மலைவாழ் கிராமத்தில் வசிப்பவர் விதார்த். காட்டை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் அந்த கிராமத்து மக்களில் சிலர், செழிப்பான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பொருள் ஈட்ட, சந்தன மரம் கடத்தும் ஆசாமிகளுடனும், சில வன காவலர்களுடனும் கூட்டு சேர்ந்து காட்டிலுள்ள மரங்களை அழிக்க நினைக்கிறார்கள். இதனை விதார்த்தும், அந்த கிராமத்து மக்களும் எப்படி எதிர்த்து போராடி காட்டை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை.

படம் பற்றிய அலசல்

‘இயற்கையை சீண்டினால் அது நம்மை அழித்து விடும், காட்டை பாதுகாக்கும் பொறுப்பை காட்டை நேசிப்பவர்களிடமே கொடுத்து விட வேண்டும்’ என்ற சமூகக் கருத்தை ‘காடு’ படத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார் அறிமுக இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம். முதல் பாதியில் விதார்த், சமஸ்க்ருதியின் காதல் காட்சிகள், தம்பி ராமையா - சிங்கம்புலி வகையறாக்களின் காமெடி காட்சிகள் என மெதுவாக கதையை நகர்த்தியிருக்கும் இயக்குனர் இரண்டாம் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பைச் சேர்த்திருக்கிறார்.

காட்டை காக்கும் அரசாங்க அதிகாரி வேலையில் சேரத் துடிக்கும் தன் நண்பர் முத்துக்குமாருக்காக ஜெயிலுக்கு போகும் விதார்த், அங்கு ‘போராளி’ சமுத்திரகனியை சந்தித்ததும் கதையில் திருப்பம் ஏற்படுகிறது. ‘‘காட்டிலுள்ள ஒவ்வொரு மரமும் உன் அப்பா, அம்மா, அண்ணன், சகோதரி, மூதாதையர், அவர்களை அழிக்க வருபவர்களை நீயும் அழிக்க வேண்டும்’’ என்று ஆவேசமாக வசனம் பேசும் சமுத்திரகனி எதற்காக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதை ரசிகர்களுக்கு விளக்கத் தவறியுள்ளார் இயக்குனர்.

நடிகர்களின் பங்களிப்பு

மலைவாழ் கிராமத்து இளைஞன் வேலுவாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் விதார்த். கதாநாயகியாக வரும் புதுமுகம் சமஸ்க்ருதி, பால் வடியும் முகத்துடன் வந்து காதல், குறும்பு என தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நேர்த்தியாக செய்துள்ளார். ஹோட்டல் நடத்தும் தம்பி ரமையா, அவரிடம் சாப்பிட வரும் சிங்கம்புலி சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் வேறு சில படங்களின் காமெடி காட்சிகளை நினைவுபடுத்தினாலும் சிரிப்புக்கு பஞ்சமில்லை. போராளியாக வரும் சமுத்திரகனியின் நடிப்பில் கம்பீரம்! ஃபாரஸ்ட் அதிகாரிகளாக வரும் ‘ஆடுகளம்’ நரேன், ‘பூ’ ராம் வில்லனாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் முதலானோரும் தங்களது பங்கை உணர்ந்து நடித்துள்ளனர்.

பலம்

1. சமூக அக்கறை கொண்ட படத்தின் கதையும், வசனங்களும்
2. ஒளிப்பதிவும், பின்னணி இசையும்

பலவீனம்

1. டாகுமென்டரி படம் பார்ப்பதைப் போன்று உணர்வைத் தரும் காட்சி அமைப்புகள்
2. கதைக்கு சம்பந்தமில்லாத பாடல் காட்சிகளும், லாஜிக் மீறல்களும்
3. எடிட்டிங்

மொத்தத்தில்

இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தியிருப்பதற்காக இப்படதை இயக்கியிருக்கும் ஸ்டாலின் ராமலிங்கம் மற்றும் இதனை தயாரித்திருக்கும் நேரு நகர் நந்துவை பாரட்டலாம்!

ஒரு வரி பஞ்ச்: ‘காடு’ - பொழுதுபோக்குவதற்கு அல்ல!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;