நாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்

டாக் ஷோ!

விமர்சனம் 22-Nov-2014 12:44 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி
இயக்குனர் : ஷக்தி சௌந்தர் ராஜன்
நடிப்பு : சிபிராஜ், இடோ (பெல்ஜியம் ஷெப்பர்டு), அருந்ததி, பாலாஜி
இசை : தரண்குமார்
ஒளிப்பதிவு : நிஸார் ஷஃபி
எடிட்டிங் : பிரவீன் கே.எல்.

ஹீரோவுக்கு இணையாக நாயை முன்னிறுத்தி வெளிவந்திருக்கிறது ‘நாய்கள் ஜாக்கிரதை’. பாய்ச்சல் எப்படி?

கதைக்களம்

கோயமுத்தூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிபிராஜ், கடத்தல் கும்பல் ஒன்றை வேட்டையாடும்போது காலில் குண்டடிபடுகிறார். அந்த சம்பவத்தில் போலீஸ் ஒருவரும், சில கடத்தல்காரர்களும் பலியாகிறார்கள். ஆனால், அந்த கும்பலின் தலைவன் மட்டும் சிபிராஜிடமிருந்து தப்பித்துச் செல்கிறான். குண்டடிபட்டதால் ஓய்விலிருக்கும் சிபிராஜிடம், பக்கத்து வீட்டு ‘சுப்பிரமணி’ என்ற நாயை (பெல்ஜியம் ஷெப்பர்டு) பார்த்துக்கொள்ளும் பொறுப்பு வருகிறது. அதோடு நாயின் ஓனரும் மரணமடைந்துவிடுகிறார். இராணுவத்தில் பழக்கப்பட்ட நாய் என்பது தெரியாமல் அந்த நாயை வைத்துக் கொண்டு படாதபாடுபடுகிறார் சிபிராஜ். ஒரு வழியாக சுப்பிரமணியின் திறமை தெரிந்து சிபிராஜ் அதனுடன் நண்பனாக மாறும் நேரத்தில், சிபிராஜின் மனைவியான அருந்ததி கடத்தப்படுகிறார்.

அதன் பிறகு... என்ன நடந்திருக்கும் என்பதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சொல்லவும் வேண்டுமா? அதேதான்... சுபம்!

படம் பற்றிய அலசல்

தமிழ் சினிமா மறந்துபோன ‘நாய் சென்டிமென்ட்’டை மீண்டும் தூசி தட்டியிருக்கிறார் இயக்குனர் ஷக்தி சௌந்தர் ராஜன். தனக்கான வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கும் சிபிராஜ், ஒரு நாய்க்கும் கதைக்கும் முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தை தேர்ந்தெடுத்திருப்பது அவரின் வளர்ச்சிக்கு நிச்சயம் பலமாக அமையும்.

முதல் பாதியில் ‘இடோ’ செய்யும் அட்டகாசங்களை ரசிக்கும்படியாக படமாக்கியிருக்கிறார்கள். ஒரு ‘திடுக்’ திருப்பத்துடன் இடைவேளைபோட, இரண்டாம்பாதி ஆட்டம் களைகட்டப்போகிறது என்று பார்த்தால் வழக்கமான தமிழ்ப்படம் போல் லாஜிக் ஓட்டைகளோடு படம் தட்டுத் தடுமாறுகிறது. க்ளைமேக்ஸில் அழுத்தம் குறைவாக இருந்தாலும், கொஞ்சம் சுவாரஸ்யமாகவே படமாக்கியிருக்கிறார்கள். பின்னணி இசையிலும், பாடல்களிலும் தரண்குமார் வசீகரிக்கிறார். ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட விஷயங்களும் பலமே. தவிர படத்தின் நீளத்தையும் அளவாக வைத்திருப்பது கூடுதல் பலம்.

ஆனால்... வில்லன் யார்? அவன் பின்னணி என்ன? எதற்காக அவன் பல பெண்களை கடத்துகிறான்? இவ்வளவு பெரிய கடத்தல் வேலைகளை பற்றி தன் மேலதிகாரியிடம்கூட தெரிவிக்காமல், ஓய்விலிருக்கும் சிபிராஜே போலீஸ் படையுடன் களமிறங்கி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் என்ன? என பல கேள்விகள் தொக்கி நிற்கிறது. இதற்கான விடையை படத்தில் கொஞ்சம் டீடெயிலாகக் காட்டியிருந்தால் இன்னும் வசீகரித்திருக்கும் இந்த ‘நாய்கள் ஜாக்கிரதை’.

நடிகர்களின் பங்களிப்பு

தான் வில்லனாக நடித்த ‘நாணயம்’ படத்தை கம்பேர் செய்தால், இப்படத்தில் சிபிராஜின் பங்களிப்பு குறைவுதான். என்றாலும், ஆறடி உயர சிபிராஜுக்கு அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டர் கச்சிதம். படத்தின் இரண்டாவது ஹீரோ ‘இடோ’ (பெல்ஜியம் ஷெப்பர்டு) பல இடங்களில் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்குகிறது. ஆனாலும் ‘இடோ’விடமிருந்து இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தோம்.

நாயகி அருந்ததிக்கு ஒரு சவப்பெட்டிக்குள் படுத்துக் கொண்டேயிருக்கும் வேலையைக் கொடுத்திருக்கிறார்கள். ‘6X3’ என கிடைத்த இடத்தில் ‘ஸ்கோர்’ செய்திருக்கிறார் அருந்ததி. ‘சுட்டகதை’ பாலாஜி சீரியஸ் வில்லனாக இருந்தாலும், அவர் செய்யும் வேலைகள் சிரிப்பையே வரவழைக்கின்றன.

பலம்

1. இடோ (பெல்ஜியம் ஷெப்பர்டு)
2. கதையின் தன்மைக்கேற்ற பின்னணி இசை
3. நாயின் ஓட்டத்தை கச்சிதமாக படம் பிடித்த ஒளிப்பதிவும், பிசிறு தட்டாத எடிட்டிங்கும்.
4. சொல்ல வந்த விஷயத்தை 2 மணி நேரத்திற்குள் சொல்லியிருக்கும் விதம்.

பலவீனம்

1. ‘அட்டாச்மென்ட்’ இல்லாத திரைக்கதை அமைப்பு
2. லாஜிக் ஓட்டைகள்
3. வில்லனின் கதாபாத்திர வடிவமைப்பு

மொத்தத்தில்...

நாயின் கேரக்டரை தவிர்த்துவிட்டு இப்படத்தைப் பார்த்தால் இதன் கதை ஏற்கெனவே நாம் பலமுறை பார்த்துச் சலித்த கதைதான். தவிர, இராமநாராயணன் படங்களில் இருக்கும் ‘சென்டிமென்ட் அட்டாச்மென்ட்’டை இப்படத்தின் சுப்பிரமணி நாய் மீது ரசிகர்களுக்கு ஏற்படுத்தத் தவறிவிட்டார்கள். என்றாலும், ‘சுப்பிரமணி’ செய்யும் அட்டகாசங்களுக்காக குழந்தைகளுடன் சென்று ஒரு முறை ரசித்துவிட்டு வரலாம்.

ஒரு வரி பஞ்ச் : டாக் ஷோ!

ரேட்டிங் : 4 /10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;