வன்மம் - விமர்சனம்

3/10

செய்திகள் 21-Nov-2014 4:53 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ்
இயக்குனர் : ஜெய் கிருஷ்ணா
நடிப்பு : விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா, மதுசூதன் ராவ்
இசை : தமன்.எஸ்.எஸ்
ஒளிப்பதிவு : பால பரணி
எடிட்டிங் : சுரேஷ் அர்ஸ்

உலகநாயகனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ஜெய் கிருஷ்ணா, ‘வன்மம்’ படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.

கதைக்களம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் வசிக்கும் விஜய் சேதுபதியும், கிருஷ்ணாவும் இணைபிரியாத நண்பர்கள். அதே ஊரில் இருக்கும் சுனைனாவை காதலிக்கிறார் கிருஷ்ணா. இந்த விஷயம் சுனைனாவின் அண்ணனான மதுசூதனனுக்குத் தெரிய வர, கிருஷ்ணாவை எச்சரித்து அனுப்புகிறார். ஆனால், அதன் பின்பும் சுனைனா சந்திப்பதை கிருஷ்ணா தவிர்க்காததால், ஆத்திரத்தில் கிருஷ்ணாவை அரிவாளை எடுத்து வெட்ட வருகிறார் மதுசூதன். நண்பனை வெட்ட வரும் மதுசூதனைத் தடுத்து அவருடன் மல்லுக்கு நிற்கிறார் விஜய்சேதுபதி. சண்டையின் முடிவில் எதிர்பாராதவிதமாக விஜய்சேதுபதி கையால் மதுசூதன் கழுத்து அறுபட்டு இறந்துபோகிறார். அதன் பிறகு நடக்கும் களேபரங்களே ‘வன்மம்’.

படம் பற்றிய அலசல்

அரதப் பழசான நண்பர்கள் பற்றிய கதையை கையிலெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெய் கிருஷ்ணா. விஜய் சேதுபதி, கிருஷ்ணா என வளர்ந்துவரும் இரண்டு ஹீரோக்களை கையில் வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் திரைக்கதை அமைத்திருக்கலாம். ஆனால் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் ‘தேமே’ என நகர்கிறது இப்படம்.

எதற்கெடுத்தாலும் யாரையாவது வெட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், போலீஸ் எதையும் கண்டுகொள்ளாமல் காமெடியாக சுற்றிக் கொண்டேயிருக்கிறது. இதுபோன்ற ‘வன்முறை’ சம்பந்தப்பட்ட கதைகளில் ஆங்காங்கே காமெடிகளை வைத்து ரசிகர்களை ஆசுவாசப்படுத்த வேண்டியது அவசியம். ஆனால், அதையும் கோட்டைவிட்டிருக்கிறார்கள்.

முதல் பாதியைவிட இரண்டாம் பாதி கொஞ்சம் ஆறுதல். ஆனாலும் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பது முன்பே தெரிந்துவிடுகிறது. பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே ரொம்பவும் சுமார் ரகம். ஒளிப்பதிவு மட்டும் ஓகே ரகம். அதேபோல் படத்தில் நிறைய இடங்களில் ‘கத்திரி’ போட்டிருக்கலாம் சுரேஷ் அர்ஸ். ‘வன்மம்’ படத்தைப் பொறுத்தவரை விஜய்சேதுபதியின் பங்களிப்பு மட்டுமே ‘ப்ளஸ்’.

நடிகர்களின் பங்களிப்பு

‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’, ‘சூது கவ்வும்’ படங்களில் நடித்த விஜய்சேதுபதியா இதுபோன்ற கதைகளையும் தேர்ந்தெடுக்கிறார் என ரசிகர்கள் அதிர்க்குள்ளாக்கும் வகையில் இருக்கிறது இப்படத்தில் அவரின் கதாபாத்திர வடிவமைப்பு. ஆனாலும் இப்படத்தின் ‘ராதா’ கேரக்டரை தன்னால் முடிந்த அளவுக்கு காப்பாற்றியிருக்கிறார் மனிதர். படத்தின் ஒரே ஆறுதலும் விஜய்சேதுபதி மட்டுமே.

கிருஷ்ணாவிற்கு பொருத்தமான கேரக்டர்தான் என்றாலும், திரைக்கதையின் சுவாரஸ்யமின்மையால் அவரின் பங்களிப்பு எடுபடாமல் போகிறது. சுனைனா ரொம்பவே பாவம். படம் முழுக்க அழுதுகொண்டே இருக்கிறார். ‘கோலி சோடா’ படத்தை ஒற்றை ஆளாக சமாளித்த மதுசூதனை இப்படி ஒரே வெட்டில் சாவடித்துவிட்டார்களே...? மற்ற கதாபாத்திரங்களைப் பற்றியெல்லாம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை!

பலம்

1. விஜய் சேதுபதி
2. படம் முழுக்க தொடர்ந்திருக்கும் கன்னியாகுமரி பாஷை

பலவீனம்

1. அரதப் பழசான கதையும், சுவாரஸ்யமில்லாத திரைக்கதையும்
2. பாடல்கள், பின்னணி இசை, எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்
3. எந்தவித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாததும், படத்தின் நீளமும்.

மொத்தத்தில்...

கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர்!

ஒரு வரி பஞ்ச்: ‘வன்மம்’ - வருத்தம்!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;