தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் தனஞ்செயன்!

தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் தனஞ்செயன்!

கட்டுரை 18-Nov-2014 12:45 PM IST VRC கருத்துக்கள்

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ‘யுடிவி’. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ள, இன்னமும் தயாரித்து வருகின்ற இந்நிறுவனத்தின் தென்னிந்திய நிர்வாக தலைவராக இருப்பவர் தனஞ்செயன். திரைப்பட தயாரிப்பாளர் என்று மட்டும் இல்லாமல் சிறந்த ஒரு எழுத்தாளர், விமர்சகர் என்ற முறையிலும் தனஞ்செயன் அனைவரிடத்திலும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டை சேர்ந்த தனஞ்செயன் ஏற்கெனவே தமிழ் சினிமா குறித்த சில புத்தகங்களை எழுதியுள்ள நிலையில் இப்போது ‘PRIDE OF TAMIL CINEMA’ என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தை இந்த மாதம் 21-ஆம் தேதி முதல் கோவாவில் நடைபெறவிருக்கிற உலக திரைப்பட விழாவில், இவ்விழா இயக்குனரால் வெளியிடப்படவிருக்கிறது. 1931-ஆம் ஆண்டிலிருந்து துவங்கி 2013-ஆம் ஆண்டு வரையிலான தமிழ் சினிமா குறித்த அனைத்து தகவல்களும் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளதாம். இந்திய சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல், உலக சினிமா பிரபலங்களும் தமிழ் சினிமா குறித்த விஷயங்களை அறிந்துகொள்ளும் விதத்தில் இப்புத்தகம் ஆங்கில மொழியில், சம்பந்தப்பட்ட புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது இப்புத்தகத்தின் சிறப்பு அம்சமாகும். சினிமா சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா குறித்து அறிய விரும்பும், தமிழ் சினிமா குறித்த ஆராய்ச்சிகள் நடத்தும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இப்புத்தகம் மிக்க பயனுள்ளதாக இருக்கும் வகையில் இதனை உருவாக்கியுள்ளதாக கூறுகிறார் தனஞ்செயன்.

இதற்கு முன் தனஞ்செயன் ‘THE BEST OF TAMIL CINEMA’ என்ற பெயரில் எழுதிய புத்தகத்தில் 1931-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படைப்புகள் குறித்தும், கலைஞர்கள் குறித்தும் எழுதியிருந்தார். சினிமாவிலுள்ள பல பிரபலங்களின் பாராட்டுக்கள் பெற்ற இந்த புத்தகத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து ஒரு சிறப்பு விருது கூட பெற்றிருக்கிறார் தனஞ்செயன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனஞ்செயன் எழுதியுள்ள ‘PRIDE OF TAMIL CINEMA’ என்ற புத்தகம் A4 சைஸ் அளவில் 612 பக்கங்களை கொண்டது. தமிழ் சினிமா குறித்து அறியக் கூடிய பல தகவல்கள் அடங்கிய இந்த வண்ண புத்தகத்தில் ஏராளமான அரிய புகைப்படங்களும், தகவல்களும் அடங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார் தனஞ்செயன். கோவாவில் நடைபெறவிருக்கிற உலக திரைப்பட விழாவில் ரிலீசாகவிருக்கும் இப்புத்தகத்தின் விலை 1500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறுதிச்சுற்று - டிரைலர் 2


;