ஹேப்பி பர்த்டே டயானா மரியம் குரியன்!

ஹேப்பி பர்த்டே டயானா மரியம் குரியன்!

செய்திகள் 18-Nov-2014 9:02 AM IST Chandru கருத்துக்கள்

இன்று தமிழ் சினிமாவின் ‘மோஸ்ட் வான்டட் ஹீரோயின்’ நயன்தாராவுக்குப் பிறந்தநாள். 1984ஆம் ஆண்டு, நவம்பர் 18ஆம் தேதி கேரளாவில் பிறந்த டயானா மரியம் குரியன், 2003ஆம் ஆண்டு ‘மனசினக்கரை’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் ‘நயன்தாரா’வாக காலடி எடுத்து வைத்தார்.

அதன் பிறகு 2005ஆம் ஆண்டு ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் நுழைந்த இந்த கேரளத்து மாடப்புறா, தனது அடுத்த படமான ‘சந்திரமுகி’ மூலம் சூப்பர்ஸ்டாருக்கே ஜோடியானார். அதன் பிறகு சூர்யாவுடன் ‘கஜினி’, சிம்புவுடன் ‘வல்லவன்’, ஜீவாவுடன் ‘ஈ ’, அஜித்துடன் ‘பில்லா’, விஜய்யுடன் ‘வில்லு’, தனுஷுடன் ‘யாரடி நீ மோகினி’ விஷாலுடன் ‘சத்யம்’, ஆர்யாவுடன் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் ஜோடியாக நடித்தார்.

இடையில் சில சொந்த பிரச்சினைகள் காரணமாக தமிழ் சினிமாவை விட்டு விலகியிருந்த நயன், 2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘ராஜா ராணி’ படம் மூலம் தனது இரண்டாவது ஆட்டத்தைத் துவங்கினார். சினிமாவை விட்டு விலகி திரும்பவும் சினிமாவுக்குள் வந்த கதாநாயகிகளில் நயன்தாராவுக்கு கிடைத்த அளவுக்கு வரவேற்பு வேறெந்த நடிகைக்கும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு நயன்தாரா விட்டுச் சென்ற இடத்தை அவருக்காக காலியாக வைத்திருந்தார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். நயன்தாராவும் தனது ரீஎன்ட்ரி மூலம் தான் எப்போதுமே சிறந்த நடிகைதான் என்பதை நிரூபித்தார். ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’, ‘இது கதிர்வேலன் காதல்’ என தனது இரண்டாவது இன்னிங்ஸில் வரிசையாக சென்சுரிகளாக அடித்துத் தள்ளினார்.

இதோ... இப்போது சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, உதயநிதியுடன் ‘நண்பேன்டா’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’, சூர்யாவுடன் ‘மாஸ்’, இன்னும் பெயரிடப்படாத ‘திகில்’ படம் ஒன்று என இன்றைய கோலிவுட்டில் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகியாக நயன்தாராவே நிகழ்கிறார்.

நயனின் இத்தனை வெற்றிகளுக்கும் காரணம், சினிமாவுக்கு அவர் கொடுக்கும் மரியாதை. சூப்பர்ஸ்டாரோ, அறிமுக ஹீரோவோ யாருடன் வேண்டுமானாலும் ஜோடியாக நடிப்பார். எல்லா ஹீரோக்களுக்கும் ஒரேபோல் மரியாதை கொடுப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரந்தவறாமல் வந்துவிடுவார். எந்தவித பந்தாவும் காட்டமாட்டார்.இவைதான் அவரின் வெற்றி ரகசியம்!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை உலகநாயகனுடன் மட்டுமே அவர் இன்னும் ஜோடி சேரவில்லை. பிறந்திருக்கும் இந்த புத்தாண்டில் நயனுக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் பியூட்டி குயின்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;