‘லிங்கா’ - இசை விமர்சனம்

‘லிங்கா’ - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 17-Nov-2014 12:27 PM IST Chandru கருத்துக்கள்

ரஜினி - ரஹ்மான் காம்பினேஷன் என்றாலே பாடல்கள் பட்டையைக் கிளப்பும்... கூடவே ‘முத்து’, ‘படையப்பா’வைத் தொடர்ந்து ‘லிங்கா’ மூலம் கே.எஸ்.ரவிகுமாரும் கூட்டணி அமைத்திருக்கிறார். அப்படியென்றால் அந்த ஆல்பத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்... மொத்தம் 5 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் ‘லிங்கா’ ஆல்பத்தின் முழுமையான விமர்சனம் இதோ...

1. ஓ நண்பா...
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆர்யன் தினேஷ் கனகரத்னம்
பாடலாசிரியர் : வைரமுத்து


வழக்கம்போல் ரஜினியின் அறிமுகப்பாடலுக்கு இந்த முறையும் குரல் கொடுத்திருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஆனால், இந்த ‘ஓ நண்பா...’ முந்தைய அறிமுகப் பாடல்களிலிருந்து நிறைய வித்தியாசப்பட்டிருக்கிறது. 80களில் இடம்பெறும் ‘க்ளப்’ வகையறாவைப்போல் இப்பாடலை உருவாக்கியிருக்கிறார் ரஹ்மான். ஆனாலும் வைரமுத்துவின் வரிகள் ரஜினிக்கே உரிய ஸ்டைலில் ரசிகர்களுக்கு அறிவுரையை அள்ளித் தெளித்திருக்கிறது. ரஹ்மானின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு கொஞ்சம் காலதாமதமாகவே பலன் கிடைக்கும்.

2. என் மன்னவா...
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், அதிதி பால்
பாடலாசிரியர் : வைரமுத்து


‘லிங்கேஸ்வரன்’ காலகட்டத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட்டில் ரஜினியும், சோனாக்ஷி சின்ஹாவும் இடம்பெறும் பாடலாக இந்த ‘என் மன்னவா...’ ‘லிங்கா’வில் இடம்பெற்றிருக்கிறது. அதிதி பாலின் அற்புதமான குரலோடு ஆரம்பிக்கிறது இந்த மெலடி டூயட். கர்நாடிக்கையும், இந்துஸ்தானியையும் கலந்து இப்பாடலை உருவாக்கியிருக்கிறார் ரஹ்மான். இப்பாடலைக் கேட்கும்போதே மனக்கண்ணில் பாடலின் பிரம்மாண்டமும் காட்சியாக விரிகிறது. முதல்முறை கேட்கும்போதே பிடித்துவிடுகிறது.

3. இந்தியனே வா...
பாடியவர் : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து


‘ஐ’, ‘காவியத்தலைவன்’ ஆல்பங்களில் குரல் கொடுக்காமல் ரசிகர்களை ஏமாற்றிய ரஹ்மான் ‘லிங்கா’வில் அந்தக் குறையைப் போக்கிவிட்டார். மக்களை ஒன்றிணைப்பதற்காகப் பாடப்படும் இந்தப் பாடலில் உணர்ச்சி ததும்பும் வரிகளைக் கொடுத்திருக்கும் வைரமுத்து பெரிய பலம். ‘‘சேர்வோமா... ஓர் ஜாதி ஆவோமா...!’’ என்ற வரிகளை ரஹ்மானின் வாய்ஸில் கேட்கும்போது புல்லரிக்கிறது. இசையும், ரஹ்மானின் வாய்ஸும் அற்புதம்.

4. மோனோ கேசோலினா
பாடியவர்கள் : மனோ, நீத்து மோகன், தன்வி ஷா
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


இந்த ஆல்பத்தின் மற்ற பாடல்கள் அனைத்தையும் கதையோடு சம்பந்தப்பட்டதாக உருவாக்கியுள்ள ரஹ்மான், இப்பாடலை தன் தனித்துவத்திற்காக உருவாக்கியிருக்கிறார். உற்சாகம் தெறிக்கும் மனோவின் குரலை மீண்டும் கேட்கும்போதே நம் மனதும் துள்ளிக் குதிக்கிறது. ஒருபுறம் பியானோ, எலக்ட்ரிக் கிடார் என வெஸ்டர்ன் இசைக்கருவிகளையும், இன்னொருபுறம் நாதஸ்வரம், மேளம் என நாட்டுப்புறத்தையும் இப்பாடலில் வித்தியாசமாக கலக்கவிட்டிருக்கிறார் ரஹ்மான். ரொம்பவும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே இந்த வித்தியாசம் புரிபடும். ‘யூத்’களுக்கும், குட்டீஸ்களுக்கும் இந்த ‘மோனோ கேசோலினோ’ ரொம்பவே பிடிக்கும். கௌபாய் ஸ்டைலில் ரஜினியும், அனுஷ்காவும் ஆடும் இந்த ரொமான்ஸ் பாடல் கண்களுக்கும் விருந்தளிக்கும்.

5. உண்மை ஒருநாள் வெல்லும்...
பாடியவர் : ஹரிச்சரண்
பாடலாசிரியர் : வைரமுத்து


ரஜினியின் நேர்மையை விளக்கும் சோகப்பாடலாக உருவாக்கப்பட்டிருக்கிறது ‘லிங்கா’ ஆல்பத்தின் கடைசிப்பாடலான ‘உண்மை ஒரு நாள் வெல்லும்’ பாடல். இதன் வரிகளைக் கேட்டாலே புரிந்துவிடும் இப்பாடல் இடம்பெறும் சூழ்நிலை என்னவாக இருக்கும் என்பது. ‘காவியத் தலைவன்’ ஆல்பத்தின் பெரும்பாலான பாடல்களை ஆக்ரமித்திருந்த ஹரிச்சரண் இப்பாடலைப் பாடியிருக்கிறார். சோகம் ததும்பி வழியும் அவரது குரல் பாடலுக்கான உணர்வை ‘நச்’சென வெளிப்படுத்தியிருக்கிறது. வரிகள் தெளிவாகக் கேட்கும்படி ரொம்பவும் மெல்லிய இசையைப் பாடல் முழுவதும் பரவவிட்டிருக்கிறார் ரஹ்மான். காட்சிகளோடு கேட்கும்போது பெரிய கவனம் பெறும்.

இந்த ‘லிங்கா’ ஆல்பத்தைப் பொறுத்தவரை ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்... இந்த கூட்டணியில் உருவான முந்தைய ஆல்பங்களான ‘முத்து’, ‘படையப்பா’ போன்றவற்றை இதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஆனால், கதைக்கேற்ற தன்மையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆல்பம் நிச்சயம் போகப்போக பெரிய வரவேற்பைப் பெறும் என்பது மட்டும் நிச்சயம். குறிப்பாக பாடல்கள் வந்தாலே தியேட்டரை விட்டு எழுந்து செல்லும் இன்றைய சினிமா சூழலில்... ‘லிங்கா’ பாடல்கள் ரசிகனை சீட்டைவிட்டு எழுந்துசெல்ல விடாமல் கட்டிப்போடும்.

‘லிங்கா’... சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கான ஆல்பம் இல்லை... ரஹ்மான் ரசிகர்களுக்கான ஆல்பம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;