‘லிங்கா’ - டிரைலர் விமர்சனம்

‘லிங்கா’ - டிரைலர் விமர்சனம்

கட்டுரை 17-Nov-2014 10:39 AM IST Chandru கருத்துக்கள்

நேற்று (16-11-2014) ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ‘லிங்கா’ படத்தின் டிரைலரும் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. வந்திருந்த வி.ஐ.பி.களும், திரையுலகைச் சார்ந்தவர்களும் இந்த டிரைலரை வெகுவாக ரசித்து கைதட்டினர். ‘லிங்கா’ டிரைலருக்கு விழாவில் கிடைத்த வரவேற்பு சாதாரண ரசிகர்களிடத்திலும் கிடைத்திருக்கிறதா?

‘வாவ்...’ என்னவொரு எனர்ஜி... அதான் சூப்பர்ஸ்டார். ஒரு ரஜினி என்றாலே தியேட்டர் அதிரும். ‘லிங்கா’வில் இரண்டு ரஜினி... அதுவும் வெவ்வேறு காலகட்டத்தில்... வெவ்வேறு ஸ்டைலில்... என்றால் திரையரங்குகளில் இடி இடிக்கப்போவது நிச்சயம். லிங்கேஸ்வரன் ரஜினிக்கும், மாடர்ன் ரஜினிக்கும் உடை, மேக்அப் விஷயங்களில் அதிகமாக மெனக்கெட்டிருக்கிறார்கள். அனேகமாக மாடர்ன் ரஜினியை, லிங்கேஸ்வரன் ஓவர்டேக் செய்துவிடுவார் என்றுதான் இந்த டிரைலரைப் பார்க்கும்போது தெரிகிறது. வழக்கமாக ரஜினி படம் என்றாலே அதில் அவர் மட்டும்தான் ஹைலைட்டாக இருப்பார். ஆனால் ரஜினியையும் தாண்டி, ‘லிங்கா’வில் ஏகப்பட்ட ஆச்சரியங்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது என்பதற்கு ‘லிங்கா’ டிரைலர் உத்திரவாதம் தருகிறது.

அதில் முதலும், முக்கியமானதும் ‘லிங்கா’வின் ஒளிப்பதிவு. இரண்டு காலகட்டங்களையும் தெளிவாகவும், கலர்ஃபுல்லாகவும் படம்பிடித்திருக்கிறது ரத்னவேலுவின் கேமரா! ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் ஏமாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான், இந்த டிரைலரில் வட்டியும், முதலுமாக சேர்த்துக் கொடுத்திருக்கிறார். கண்மூடிக் கொண்டு இசையைக்கேட்டே ரஜினியின் இரண்டு காலகட்டங்களில்... எது எந்த காலகட்டம் என்பதைச் சொல்லிவிடலாம். அந்தளவுக்கு இரண்டுக்குமான பின்னணி இசையில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் ரஹ்மான்.

அதேபோல் சம்ஜித்தின் எடிட்டிங்கையும் பாராட்டியே ஆக வேண்டும். ‘லிங்கேஸ்வரன்’ காலகட்டம், தற்போதைய காலகட்டம் என அடுத்தடுத்து ஒவ்வொரு ஷாட்டையும் மாற்றி மாற்றிக் காட்டி இந்த ‘லிங்கா’ டிரைலரை உருவாக்கியிருக்கிறார். எந்த இடத்திலும் பிசிறு தட்டாத சூப்பர் எடிட்டிங்! அதேபோல் ‘லிங்கா’ பிரம்மாண்டத்திற்கு மேலும் பிரம்மாண்டம் சேர்த்திருக்கிறது சாபுசிரிலின் கலை இயக்கம்!

ரஜினி படம் என்றாலே அதில் ‘பஞ்ச்’ டயலாக்தான் ரொம்பவும் பாப்புலர். இந்த 2.05 நிமிடங்கள் ஓடும் டிரைலரிலும் சில ‘பஞ்ச்’கள் பறந்திருக்கின்றன. ‘‘நான் எந்த வேலையா இருந்தாலும் என் மனசுக்குப் பிடிச்சாதான் செய்வேன்!’’, ‘‘வாழ்க்கைல எதுவும் ஈஸியில்ல... முயற்சி பண்ணா எதுவும் கஷ்டமில்ல...’’ போன்ற ‘பஞ்ச்’ வசனங்களோடு, ‘‘இதுதான் உங்களோட வாழ்க்கை. இதுதான் உங்க பிள்ளைங்களோட முன்னேற்றம். இதுதான் நாளைக்கு உங்களோட பொழைப்பு, தொழிலு, சோறு, இடம், உடை. சந்தோஷம் எல்லாம்!’’, ‘‘கொஞ்சமாவது பொறந்த நாட்டுக்கு நல்லது செய்யணும்ங்கிறதுக்காக அதிகமா பேசுறேன்’’ என லிங்கேஸ்வரன் பேசும் உணர்ச்சிப்பூர்வமான வசனங்களும் ‘லிங்கா’வின் ஹைலைட்ஸ்.

‘லட்சுமி’யாக இந்த டிரைலரில் அறிமுகமாகியிருக்கிறார் அனுஷ்கா. அனேகமாக அனுஷ்கா ஏதோவொரு சேனலின் ரிப்போர்ட்டராக இருக்கலாம். கிராமத்துப் பெண்ணாக அதிரடியாக வந்திருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. அவரின் உடையில் மீண்டும் ஒரு ‘முதல் மரியாதை’. அதேபோல் காமெடியன்கள் சந்தானமும், கருணாகரனும் இந்த டிரைலரில் இடம்பிடித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கவில்லை. ஜெகபதி பாபுவும், வில்லன் தேவ்கில்லும் விநாடிக்கும் குறைவான நேரத்திலேயே இந்த டிரைலரில் தலைகாட்டியிருக்கிறார்கள். சஸ்பென்ஸை தொடர்ந்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.

மொத்தத்தில்... ‘லிங்கா’ டிரைலர் எல்லா கமர்ஷியல் விஷயங்களும் கலந்த ஒரு சூப்பரான கலவை. இதுபோன்ற ஒரு மாஸ் படத்திற்காகதான் ரஜினி ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். டிசம்பர் 12 வரை ஒவ்வொரு நாளையும் எண்ணிப் பார்க்க வைத்துவிட்டார் சூப்பர்ஸ்டார். ‘‘ஸீ யூ... சூன் தலைவா!’’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;