அரசியலுக்கு அழைத்த பிரபலங்கள்! – ரஜினியின் பதில்

அரசியலுக்கு அழைத்த பிரபலங்கள்! – ரஜினியின் பதில்

செய்திகள் 17-Nov-2014 10:36 AM IST VRC கருத்துக்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா, ஜெகபதிபாபு, விஜயகுமார் மற்றும் பலர் நடித்து, ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள படம் 'லிங்கா'. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்துது. இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து (வெளிநாட்டில் இருப்பதால்..) அனைத்து படக்குழுவினரும் பங்கேற்றார்கள். விழாவில் பேசிய இயக்குனர்கள் அமீர், சேரன், நடிகர் விஜய்குமார், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதோடு அரசியலுக்கும் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பொருள்படும் படி பேசினார்கள். அதற்கெல்லாம் பதிலளித்து ரஜினிகாந்த் பேசிய விவரம் வருமாறு:

‘‘எனக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, நான் பழைய மாதிரி மீண்டும் நடிக்க முடியுமா என்று ஏங்கியதுண்டு. அது முடியாது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு பிறகு இரண்டரை வருடக் கால ஓய்வுக்கு பிறகு தான் 'கோச்சடையான்' படத்தில் நடித்தேன். அது முற்றிலுமே வேறு மாதிரியான படம். அந்த ஜானர் யாருக்குமே தெரியாது. அப்படத்தின் முழுச் சுமையையும் செளந்தர்யா மீது வந்தது. பாவம், அந்த பெண் மீது அவ்வளவு பெரிய சுமையை வைத்து, கஷ்டப்படுத்தியது நான் தான். ஈராஸ் நிறுவனமும், முரளி மனோகர் மாதிரியான ஆட்களும் இருந்ததால் மட்டுமே அந்த படம் வெளியானது.

'கோச்சடையான்' படம் மூலமாக கொஞ்சம் பணத்தை இழந்தாலும், அந்த படத்தின் மூலம் செளந்தர்யாவிற்கு நிறைய அனுபவம் கிடைத்தது. இனிமேல் வந்து அவங்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சம்பாதித்த பணத்தை வேஸ்ட் செய்யாமல் இருந்தாலே போதும். (அரங்கத்தில் பலத்த சிரிப்பு....) 'கோச்சடையான்' நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது. அந்தப் படத்தை ரிலீஸ் பண்ணாமல், மற்றொரு படத்தை பண்ண எனக்கு மனசு வரவில்லை. நிறைய கதைகளை கேட்டாலும் எதுவும் மூளைக்குள் போகவில்லை. முதலில் 'கோச்சடையான்' வெளியாக வேண்டும் என்று தான் மனதில் இருந்தது. ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் உடனே அதை தீர்த்துவிட வேண்டும். இல்லையென்றால் அந்த பிரச்சனை பெரியதாகி விடும். 'கோச்சடையான்' வெளியான பிறகு படத்தை பார்த்த 20 பேர்களில் பத்து பேராவது என்கிட்ட ‘என்ன சார், கடைசியிலாவது ஒரு சீன் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்" என்று சொன்னார்கள். ஆரம்பித்திலாவது ஒரு ஃப்ரேமிலாவது வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்’ இப்படியெல்லாம் சொன்னார்கள். நீங்க இப்போது எப்படி இருக்கீங்கன்னு பார்க்க ஆசைப்பட்டோம் என்றெல்லாம் சொல்ல, உடனே ஒரு படம் ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணி விட்டேன்.

அப்போது தான் கே.எஸ்.ரவிக்குமார், "சார்.. ஒரு கதை இருக்கு. என்னுடைய உதவி இயக்குனர் பொன்குமரன் ஒரு கதையை வைத்திருக்கிறார். அதை கேளுங்கள், உங்களுக்கு சரியாக இருக்கும்’’ என்றார். சரி என்றேன். நான் கதை சொல்ல மாட்டேன், பொன்குமரனே சொல்லுவார் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ரவிகுமார். கதையை கேட்டேன், பிடித்திருந்தது. நான் நடித்த படம் வந்து வெகு நாட்கள் ஆகி விட்ட்து. உடனே, அதாவது ஒரு ஆறு மாத்த்திற்குள் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்றால் அதை செய்யக் கூடிய ஒரே ஒருவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தான். அவரிடம் இந்த கதையை நானே பண்றேன். ஆனால் உடனே ஆரம்பித்து 6 மாதங்களில் முடித்து, தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண முடியுமா? என்று கேட்டேன். எனக்கு ஒரு ரெண்டு நாள் அவகாசம் கொடுங்க, என்றார். அப்போது அவர் சுதீப்பை வைத்து படம் பண்ணுவதாக இருந்த நேரம். அந்த நேரத்தில் சுதீபிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டு வந்தார்.

உடனே யார் தயாரிப்பாளர் என்று யோசித்தோம். அப்போது என் மனதில் வந்தவர் ‘ராக்லைன்’ வெங்கடேஷ். கர்நாடகாவில் அவர் ஆபத்பாந்தவன் மாதிரி. எதையுமே எதிர்பார்க்காமல் என்ன பிரச்சினை என்றாலும் போய் நிற்பவர். எதையும் எதிர்பார்க்காமல் எனக்கும் அவர் நிறைய உதவிகள் செய்திருக்கிறார். நான் என்றைக்குமே நன்றியை மறக்க மாட்டேன். அவரை கூப்பிட்டு இந்த படத்தை நீங்க தயாரிக்க முடியுமா, ஆறு மாதம் தான் டைம் என்றேன். நீங்கள் தேதிகள் கொடுத்தால் போதும் சார், நான் பண்றேன் என்றார் அவர்.

அப்போது கே.எஸ்.ரவிக்குமார், "சார் நீங்க எனக்கு ஒரு கண்டிஷன் போட்டீங்க. எனக்கும் ஒரு கண்டிஷன் இருக்கு. இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்களுக்கு வைரமுத்து, ஒளிப்பதிவுக்கு ரத்னவேலு, கலை, செட் போன்றவற்றுக்கு சாபுசிரில் என்றார். அதெல்லாம் உங்க டிபார்ட்மெண்ட், அதில் எல்லாம் நான் தலையிட மாட்டேன் என்றேன். அப்படி ஆரம்பித்த்து தான் ‘லிங்கா’.

படப்பிடிப்பின்போது கே.எஸ்.ரவிக்குமாரும் படக்குழுவினரும் என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டார்கள். அவர்கள எல்லோரும் காட்டிய அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை’’ என்ற ரஜினி ‘‘இங்கு நிறைய பேர் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்பது பற்றி பேசினார்கள். அதற்கு நான் பதிலளித்தாக வேண்டும் என்றவாறு தன் பேச்சை தொடர்ந்தார்.

‘அமீர், சேரன், விஜயகுமார், வைரமுத்து எல்லாம் அரசியல் பற்றி பேசினார்கள். என் உள்மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று வைரமுத்து சொன்னார். உண்மை என்னவென்றால் என்னைப் பற்றி எனக்கே தெரியாது. (அரங்கத்தில் பலத்த சிரிப்பு...) என்னை பொறுத்தவரை சூழ்நிலைதான் முடிவுகளை எடுக்க வைக்கும். அரசியல் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அரசியல் என்பது ஆழமானது, ஆபத்தானது. எவர் தோளையாவது மிதித்துதான் அரசியலில் பயணம் செய்ய வேண்டும். அப்படி செய்ய வேண்டும் என்று நான் நினைப்பதில்லை. அரசியலுக்கு வர நான் பயப்படவில்லை. தயங்குகிறேன். அவ்வளவு தான். இவ்வளவு பேர் அரசியல் என்று பேசியதால், நான் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. பேசாமல் போய் இருந்தால் திமிராகி விடும். எது இருந்தாலும் கடவுள் தீர்மானிப்பார். அது என்ன என்பது எனக்கு தெரியாது. என்னவாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்" என்றார் ரஜினிகாந்த்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;