திருடன் போலீஸ் - விமர்சனம்

சிரிப்பு வில்லன்... சீரியஸ் போலீஸ்!

விமர்சனம் 14-Nov-2014 4:30 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : கேபிடல் ஃபிலிம் ஒர்க்ஸ்
இயக்கம் : கார்த்திக் ராஜு
நடிப்பு : தினேஷ், ஐஸ்வர்யா, ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், நரேன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு : சித்தார்த்
எடிட்டிங் : பிரவீன் & ஸ்ரீகாந்த்

‘அட்டகத்தி’, ‘குக்கூ’ படங்களைத் தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் ‘திருடன் போலீஸ்’ மூலம் போலீஸ் அவதாரம் எடுத்திருக்கிறார் தினேஷ். இந்த ‘திருடன் போலீஸ்’ ஆட்டம் எப்படி?

கதைக்களம்

ஹெட் கான்ஸ்டபிளாக இருக்கும் தன் அப்பா ராஜேஷை மதிக்காமல் ஊதாரியாக சுற்றித் திரிகிறார் தினேஷ். ஒரு என்கவுன்ட்டர் சம்பவத்தின்போது ராஜேஷ் திட்டமிட்டு பலியாக்கப்பட, அப்பாவின் நேர்மையான குணத்தால் மகன் தினேஷுக்கு கான்ஸ்டபிள் பதவி கிடைக்கிறது. போலீஸ் வேலை எப்படியிருக்கும் என்பதே தெரியாத தினேஷ், வேலைக்குச் சேர்ந்ததும் அதிலுள்ள கஷ்ட, நஷ்டங்களைப் புரிந்துகொள்கிறார். ஒரு சில நாட்களுக்கே இவ்வளவு கஷ்டங்கள் என்றால், 25 வருடங்களாக அப்பா எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பார் என்பதை உணர்ந்து கண்கலங்குகிறார் தினேஷ். அதன்பிறகு தன் அப்பாவைக் கொன்றவர்களை தேடிக் கண்டுபிடித்து பலி வாங்குவதே ‘திருடன் போலீஸ்’.

படம் பற்றிய அலசல்

வழக்கமான போலீஸ் படம்தான். ஆனாலும், போலீஸ் வேலையின் நிதர்சனம் எப்படியிருக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜு. முதல் பாதியை சுவாரஸ்யமாகயும், விறுவிறுப்பாகவும் கொண்டு சென்ற இயக்குனருக்கு, இரண்டாம் பாதியை எப்படிக் கொண்டுபோவது என்று தெரியாமல் பாசத்தையும், காமெடியையும் போட்டுக் குழப்பி எடுத்திருக்கிறார். அவ்வப்போது ரசிகர்களை சிரிக்க வைக்கும் பாலசரவணனும், படம் முழுக்க அதகளம் பண்ணியிருக்கும் ராஜேந்திரனுமே மொத்த படத்தையும் காப்பாற்றுகிறார்கள்.

இப்படத்தின் கதைக்கு சம்பந்தமேயில்லாமல் கதாநாயகியையும் நுழைத்து, அவருக்கு ரெண்டு டூயட்டையும் கொடுத்து, சிறப்புத் தோற்றமாக விஜய்சேதுபதியையும் உள்ளே சேர்த்து, அவருக்கும் ஒரு குத்துப்பாட்டைக் கொடுத்து இப்படி திரைக்கதையில் ரொம்பவும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கிறார் இயக்குனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அப்பாவை நினைத்து பாடப்படும் ‘தெய்வம்...’ பாடல் மனதை உருக்குகிறது. மற்ற பாடல்கள் பெரிதாக கவனத்தையும் ஈர்க்கவில்லை, கதைக்கும் தேவைப்படவில்லை. ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட சமாச்சாரங்கள் படத்திற்கு தேவையான அளவு ஒத்துழைப்பு கொடுத்திருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

‘அட்டகத்தி’, ‘குக்கூ’ படங்களின் பாதிப்பு இன்னும் தினேஷை விட்டுப்போகவில்லை போல... அதே பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு... சீக்கிரம் மீண்டு வாங்க பாஸ். ஆனாலும் இப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் ‘விஷ்வா’ கேரக்டருக்குப் பொருத்தமாகதான் இருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கு இதில் ‘ஹீரோயின்’ என்ற அந்தஸ்தைத் தவிர சொல்வதற்கு வேறு எதுவுமே இல்லை.

பால சரவணனுக்கு படம் முழுவதும் நாயகனுடன் சுற்றித் திரியும் வேலை. ரசிகர்களை சிரிக்கவும் வைத்திருக்கிறார். சீரியஸ் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் ‘மொட்டத்தலை’ ராஜேந்திரன். அதிலும் அந்த பெண் வேடத்தில் தோன்றும் காட்சி... தியேட்டர் குலுங்குகிறது. ராஜேந்திரனுடன் இணைந்து ஜான் விஜய்யும் சிரிப்புமூட்டுகிறார். போலீஸ் உயரதிகாரியாக ஒவ்வொரு காட்சியிலும் கர்ஜித்துக் கொண்டேயிருக்கிறார் ‘ஆடுகளம்’ நரேன். ஒரு காட்சியில் மட்டுமே தோன்றியிருக்கும் எஸ்.பி.பி. அப்ளாஸ் அள்ளுகிறார். விஜய் சேதுபதியின் குத்தாட்டம், ரசிகர்களுக்கு உற்சாகம்!

பலம்

1. முன்பாதி திரைக்கதை
2. பால சரவணன், ராஜேந்திரன், ஜான் விஜய் ஆகியோர் சம்பந்தப்பட்ட காமெடிக் காட்சிகள்
3. ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங்

பலவீனம்

1. பின்பாதி திரைக்கதையும், லாஜிக் மீறல்களும்
2. கதாநாயகியின் கதாபாத்திர வடிவமைப்பு
3. ‘தெய்வம்’ பாடலைத் தவிர்த்த மற்றவை

மொத்தத்தில்...

படத்தின் ‘என்ட் கார்டி’ல் ‘அப்பாக்களுக்கு சமர்ப்பணம்’ என்று வாசகம் போடும் அளவுக்கு அப்பாவின் உன்னதம் பற்றி பேசுகிறது ‘திருடன் போலீஸ்’. ஆனால், சென்டிமென்ட்டாக சொன்னால் ரசிகர்களுக்குப் போரடிக்கும் என நினைத்து அதை காமெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். இதனால் படத்தோடு ரசிகனால் ஒற்ற முடியாமல் போகிறது. முழுக்க முழுக்க இப்படத்தை காமெடியாக எடுத்திருந்தால், இன்னும் அதிக கவனம் பெற்றிருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : சிரிப்பு வில்லன்... சீரியஸ் போலீஸ்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;