'காளி'யின் கம்பீர வெற்றி!

'காளி'யின் கம்பீர வெற்றி!

செய்திகள் 14-Nov-2014 9:22 AM IST Chandru கருத்துக்கள்

இந்த வருடத்தில் வெளிவந்த சிறந்த 10 படங்களின் பட்டியலை எடுக்கத் தொடங்கினால் அதில் ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ படம் கண்டிப்பாக முன் வரிசையில் இடம் பிடிக்கும். ‘சகுனி’, ‘அலெக்ஸ்பாண்டியன்’, ‘அழகுராஜா’, ‘பிரியாணி’ என மாஸ் ஹீரோ கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்த கார்த்தி, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுத்த ‘மெட்ராஸ்’ படத்திற்கு விமர்சகர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் ஏகோபித்த ஆதரவைக் கொடுத்தார்கள்.

நல்ல கதையை படமாக்க முன்வந்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ரஞ்சித்தின் அட்டகாசமான இயக்கம், நடிகர்களின் பங்களிப்பு, சந்தோஷ் நாராயணின் இசை, ஜி.முரளியின் ஒளிப்பதிவு என எல்லாமே ‘மெட்ராஸ்’ படத்திற்கு கிடைத்த வரம். அன்பு, மேரி, ஜானி, கலையரசி, ஒரு பெரிய மதில் சுவர் என இப்படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் பேசப்பட்டது.

குறிப்பாக இப்படத்தில் கார்த்தி ஏற்றிருந்த ‘காளி’ வேடம், அவரின் கேரியரில் எப்போதும் பேசப்படும் ஒரு கேரக்டராக அமைந்துவிட்டது. ஓபனிங் பில்டப், பஞ்ச் டயலாக், ஹீரோயிசம் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு வெறும் ‘காளி’யாகவே ‘மெட்ராஸ்’ படத்தில் வலம் வந்தார் கார்த்தி. பா.ரஞ்சித்தின் கதை மேல் அவர் வைத்த நம்பிக்கையும், ‘காளி’க்கு அவர்பட்ட மெனக்கெடல்களும் வீண்போகவில்லை. இதோ... இன்று 50வது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது ‘மெட்ராஸ்’.

காளியின் இந்த வெற்றி... இனி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை முன்னணி ஹீரோக்கள் தேர்நதெடுப்பதற்கு ஒரு முன்னோடியாக விளங்கட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;