கயல் - இசை விமர்சனம்

கயல் - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 13-Nov-2014 4:20 PM IST Chandru கருத்துக்கள்

‘மைனா’, ‘கும்கி’ படங்களைத் தொடர்ந்து பிரபுசாலமன் - டி.இமான் கூட்டணி ‘கயல்’ மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. ‘மைனா’, ‘கும்கி’ படங்களின் வெற்றிக்கு அதன் பாடல்களும் மிக முக்கியக் காரணம். இந்த வெற்றி வரலாறு ‘கயல்’ படத்திலும் தொடர்ந்திருக்கிறதா?

பறவையா பறக்குறோம்...
பாடியவர் : ஹரிச்சரண்
பாடலாசிரியர் : யுகபாரதி


ஹரிச்சரணின் ‘ஹம்மிங்’குடன் தொடங்கும் இந்தப் பாடல் ‘கயல்’ நாயகன் பயணத்தின்போது உற்சாகம் தெறிக்கும் வகையில் பாடப்படுவதுபோல் உருவாக்கப்பட்டிருக்கலாம். ‘ஹைபிட்ச்’சில் இப்பாடலைப் பாடியிருக்கும் ஹரிச்சரணின் குரலில் எனர்ஜி எகிருகிறது. டிரம்ஸ், கடம், வயலின் என கலவையான இசைக்கருவிகளை இப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் டி.இமான். ‘பூமி பந்து மேல ஒத்தையடிப் பாதை போடுவோம்... மேகம் ஏறி வெரசா நடப்போம்...’ என்ற கவிஞர் யுகபாரதியின் வரிகள் நச். ஏற்கெனவே கேட்ட தொனியில் இருந்தாலும் காட்சிகளோடு பார்க்கும்போது பெரியளவில் கவனம் ஈர்க்கலாம் இந்த ‘பறவையா பறக்குறோம்...’.

எங்கிருந்து வந்தாயோ...
பாடியவர் : ஷ்ரேயா கோஷல்
பாடலாசிரியர் : யுகபாரதி


மென்சோக மெலடி.... அதிலும் ஷ்ரேயா கோஷலின் உணர்ச்சி ததும்பும் குரலில் உருவாகியிருக்கிறதென்றால் இந்த ‘எங்கிருந்து வந்தாயோ...’ பாடல் கேட்பதற்கு எப்படியிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை.... உருக்கியிருக்கிறது! தன் மனதைக் கவர்ந்த நாயகனின் பிரிவை எண்ணி ஏங்கும் நாயகியின் ஏக்கங்களை வரிகளில் வடித்திருக்கிறார் யுகபாரதி. ரொம்பவும் எளிமையான வார்த்தைகளும், அதை தொந்தரவு செய்யாத பின்னணி இசையும் இப்பாடலின் பலம். இரவு நேர சாய்ஸ்!

கூடவே வரமாதிரி...
பாடியவர் : அல்போன்ஸ் ஜோசப்
பாடலாசிரியர் : யுகபாரதி


இது நாயகனுக்கான சோகப்பாடல். 2 நிமிடங்கள் மட்டுமே ஒலிக்கும் இந்தப் பாடலில் மொத்தமே 20க்கும் குறைவான வார்த்தைகளையே பயன்படுத்தியிருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு வார்த்தைகளையும் நீட்டி இழுத்து... ‘ஹைபிட்ச்’சில் எக்கோ ஒலிக்க பாடி... கேட்பவர்களின் நெஞ்சை உருக வைத்திருக்கிறார் அல்போன்ஸ் ஜோசப்.

என் ஆள பாக்கப்போறேன்...
பாடியவர்கள் : கே.ஜி.ரஞ்சித், ஷ்ரேயா கோஷல்
பாடலாசிரியர் : யுகபாரதி


‘எங்கிருந்து வந்தாயோ...’ பாடலில் நாயகனைப் பிரிந்த சோகத்திலிருக்கும் நாயகியின் தவிப்பை குரலில் கொண்டு வந்த ஷ்ரேயா... நாயகனைப் பார்க்கச் செல்லும் நாயகியின் உற்சாகத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ‘என் ஆள பாக்கப்போறேன்...’ பாடலில் குதூகலமாகப் பாடியிருக்கிறார். பின்னணியில் ஒலிக்கும் இமானின் ‘கடம்’ கேட்பவர்களின் நெஞ்சில் தடதடக்கிறது. பல்லவியில் வரும் ரஞ்சித்தின் குரல் ஸ்வீட் சர்ப்ரைஸ்!

உன்ன இப்ப பாக்கணும்...
பாடியவர்கள் : ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீனிவாசன்
பாடலாசிரியர் : யுகபாரதி


கேட்டவுடன் பட்டென்று பிடிக்கிறது இந்த ‘ஃபாஸ்ட் பீட் மெலடி’. இமானின் வழக்கமான மெட்டாக இருந்தாலும், ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீனிவாசனின் குரல்கள் பாடலுக்கு புது ரசனையைத் தருகின்றன. கிடாரில் ஆரம்பித்து இடையிடையே டிரம்ஸையும் ஒலிக்கவிட்டிருக்கிறார் இமான்.

டியாலோ டியாலோ...
பாடியவர் : கோபு
பாடலாசிரியர் : யுகபாரதி


‘மைனா’வுக்கு ‘ஜிங்கி... ஜிங்கி’... ‘கும்கி’க்கு ‘சொய்ங்... சொய்ங்...’ வரிசையில் இந்த ‘கயல்’ படத்துக்கு இந்த ‘டியாலோ டியாலோ’வை வழங்கியிருக்கிறார் டி.இமான். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது ஒலிக்கும் க்ளைமேக்ஸ் பாடலாக படத்தில் இடம்பெற்றிருக்கலாம். ‘டிரம்ஸ் செட்’டின் அதிரடி இசையையும் மீறி கம்பீரமாக ஒலிக்கிறது கோபுவின் குரல்.

எங்க புள்ள இருக்க...
பாடியவர் : பல்ராம்
பாடலாசிரியர் : யுகபாரதி


இந்தப் பாடலைக் கேட்கும்போது ‘கயல்’ படத்தின் சுனாமி பின்னணியை மனதில் நினைத்துக் கொண்டால், படத்தின் உணர்ச்சிமிகு க்ளைமேக்ஸ் மனதிற்குள் நிழலாடும். நீண்ட நாள் தேடுதலுக்குப் பின் நாயகனும், நாயகியும் ஒன்று சேரும் சேரத்தில் ஏற்பட்ட சுனாமியால் காணாமல் போகும் நாயகியை நினைத்து நாயகன் பாடுவதுபோல் இருக்கிறது. பியானோ வழியே பாடலின் வலியை வெளிப்படுத்தியிருக்கிறார் இமான். காட்சிகளோடு பார்க்கும்போது கண்களில் நிச்சயம் நீர் வரலாம்!

‘மைனா’, ‘கும்கி’ வரிசையில் இந்த ‘கயல்’ படத்தின் பாடல்களிலும் காதல் வலி நிரம்பி வழிகிறது. அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே கேட்டதைப் போன்ற உணர்வைக் கொடுக்கின்றன. ஆனால் அதையும் தாண்டி ‘கயல்’ படத்தின் பாடல்களைக் கேட்டதும் தன்னிச்சையாக மனது முணுமுணுப்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ‘கும்கி’யின் பாடல்கள் ஆல்பமாகவே மிகப்பெரிய ஹிட். இந்த ‘கயல்’ ஆல்பத்தைப் பொறுத்தவரை காட்சிகள்தான் பாடலுக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று தோன்றுகிறது.

மொத்தத்தில்... எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை இந்த ‘கயல்’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;