''பல கோடி கேட்டு மிரட்டுகிறார்கள்!'' - விஜய்சேதுபதி

''பல கோடி கேட்டு மிரட்டுகிறார்கள்!'' - விஜய்சேதுபதி

செய்திகள் 13-Nov-2014 1:34 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த ஒருசில வாரங்களுக்கு முன்பு, ‘வசந்தகுமாரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமான விஜய்சேதுபதி கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார் என்றும், வாங்கிய அட்வான்ஸை திருப்பித்தர மறுக்கிறார் என்றும், அதனால் தங்களுடைய நிறுவனத்தின் செயல்பாடுகளுடைய நிறுத்திக் கொள்ளப்போவதாகவும் ‘ஸ்டுடியோ 9’ நிறுவனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து விஜய்சேதுபதியின் தரப்பிலிருந்து அப்போது விளக்கம் எதுவும் தரப்படவில்லை. இந்நிலையில் இன்று தனது பிஆர்ஓ மூலம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. அதில் உள்ள விஷயங்கள் அப்படியே...

‘‘தமிழ் திரையுலக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழ் திரை உலகிற்கும், எனக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக்கம். திரு ஆர்.கே.சுரேஷ் அவர்களின் ஸ்டுடியோ 9 என்ற நிறுவனத்தில் ‘வசந்தகுமாரன்’ என்ற திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மையே. ஆனால், திரு ஆர்.கே.சுரேஷ் அவர்களின் தவறுதலான நடவடிக்கைகளின் காரணமாகவும், அவரின் தகாத வார்த்தைகளின் காரணமாகவும் நான் வசந்தகுமாரன் திரைப்படத்திலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே விலகிக் கொள்வதாகவும், நான் வாங்கிய ஒன்பது லட்ச ரூபாய் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்துத் தருவதாகவும் அன்றே கூறிவிட்டேன்.

ஆனால், திரு ஆர்.கே.சுரேஷ் அவர்கள் என்னிடம் பல கோடி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தார். மேலும், சில மர்ம நபர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்துகொண்டு இருந்தன. இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் திரு சரத்குமார் அவர்களிடம் புகார் அளித்தேன். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தபொழுது என்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து வசந்தகுமாரன் திரைப்படத்திலிருந்து முழுவதுமாக என்னை விடிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

இதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கத்தில் மீண்டும் ஒரு புகார் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளேன். இந்நிலையில் இன்றைய தினம் தமிழ் நாளிதழ் ஒன்றில் நான் நடிப்பதாக வசந்தகுமாரன் திரைப்படத்தின் விளம்பரம் வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற செயல்கள் எனது வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதாக அறிகிறேன்.

நான் தற்பொழுது எஸ்.பி.ஜனநாதன் அவர்கள் இயக்கத்தில் ‘புறம்போக்கு’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். இந்நிலையில் ‘வசந்தகுமாரன்’ திரைப்படம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வந்துள்ள செய்தியைக் கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதுபோன்ற செயல்களில் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளர் திரு ஆர்.கே.சுரேஷ் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவாரேயானால் அவர் மீது சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சனையில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன். நன்றி!’’

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் விஜய்சேதுபதி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - டீசர்


;