‘‘நாய்கள் ஜாக்கிரதை ஜெயிக்கும்’’ - சத்யராஜ் நம்பிக்கை

‘‘நாய்கள் ஜாக்கிரதை ஜெயிக்கும்’’ - சத்யராஜ் நம்பிக்கை

செய்திகள் 11-Nov-2014 3:20 PM IST VRC கருத்துக்கள்

‘‘இப்போது பணம் கையில் இருந்தால் போதும் ஒரு படத்தை எளிதில் எடுத்து விட முடியும். ஆனால் அப்படத்தை வெளியிட தியேட்டர்கள் கிடைப்பதுதான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அப்போதெல்லாம் பெரிய ஹீரோ நடித்த படம் என்றால் கூட ஒரு ஊரில் ஒரு தியேட்டரில்தான் ரிலீசாகும். ஆனால் இப்போது நிலைமை தலை கீழாக மாறியுள்ளது! இப்போது பெரிய ஒரு ஹீரோ நடித்த படம் என்றால் ஒரு ஊரில் இருக்கிற பெரும்பாலான தியேட்டர்களிலும் வெளியிடுகிறார்கள். இதற்கிடையில் சின்ன பட்ஜெட்டில், அதிக மார்க்கெட் வேல்யூ இல்லாத ஹீரோ நடிக்கும் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

இன்றைய நிலையில் சிபிராஜை பிரபலமான ஒரு ஹீரோ என்று சொல்ல முடியாது. அவருக்கு இன்னும் அந்த அங்கீகாரம் வரவில்லை. ஆனால் சினிமாவில் அவருக்கு பெரிய ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அவர் இப்போது நடித்துள்ள ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் அமைந்துள்ளது. இந்த படத்தை தயாரித்து முடித்ததும் படத்தை எப்படி ரிலீஸ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் ‘நண்பன்’, ‘கத்தி’ உட்பட பல படங்களை விநியோகம் செய்துள்ள ‘காஸ்மோ வில்லேஜ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தினர் இப்படத்தை பார்த்தார்கள். அவர்கள் படத்தை பார்த்ததும், ‘இப்படத்தை நாங்கள் தமிழகம் முழுக்க ரிலீஸ் பண்றோம்’ என்றார்கள். அவர்களிடம் நாங்கள், ‘100 தியேட்டர்களிலாவது இப்படத்தை ரிலீஸ் பண்ணுங்கள்னு தாழ்மையோடு கேட்டேன். அப்போது அவர்கள், ‘‘படம் சூப்பரா வந்திருக்கு சார், இப்படத்தை பெரிய அளவில், 200 தியேட்டர்களுக்கும் மேலாக ரிலீஸ் பண்ணுவோம், எங்களுக்கு படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருக்கு’’ என்றார்கள்.

வழக்கமாக விநியோகஸ்தர்கள் படம் நன்றாக இருந்தாலும், ‘படம் நல்லா இருக்கு’ என்று சொல்ல மாட்டார்கள். காரணம் விலையை குறைத்து கேட்பதற்குதான்! ஆனால் ‘காஸ்மோ’ நிறுவனத்தினர் படம் நன்றாக இருக்கு என்று சொல்லி நல்ல ஒரு விலையை பேசியபோதே இப்படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துவிட்டது. அதன்படி ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் வருகிற 21-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது’’ என்றார் இன்று காலையில் சென்னையில் நடந்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகரும், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சிபிராஜின் தந்தையுமான சத்யராஜ்.

மேலும் சத்யராஜ் பேசும்போது, ‘‘இப்படத்தின் முதல் காப்பி ரெடியாகி படத்தை பார்த்தபோது எனக்கு நான் நடித்த ‘நூறவது நாள்’ படத்திற்கு ராஜா சார் அமைத்திருந்த பின்னணி இசைதான் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு படத்திற்கு பின்னணி இசை ரொம்பவும் முக்கியம். அந்த வகையில் இப்படத்திற்கு தரண்குமார் மிரட்டலான இசையை தந்துள்ளார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் காலகட்ட படங்களில் கதை 90 சதவிகிதம் மற்றவை 10 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. நான், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் நடித்த காலகட்டத்தில் 50 சதவிகிதம் கதையும், தொழில்நுட்ப விஷயங்கள் 50 விகிதம் என்று இருந்தது. ஆனால் இப்போது கதை 25 சதவிகிதம், தொழில்நுட்ப விஷயங்கள் 75 சதவிகிதம் என்ற நிலையாகி விட்டது. அந்த வகையில் இப்படத்திலும் தொழில்நுட்பம் விளையாடியிருக்கிறது’’ என்றார்.

‘நாதம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் சத்யராஜ் தயாரித்துள்ள இப்படத்தில் சிபிராஜுடன் கதையில் இன்னொரு நாயகனாக ‘ஈத்தோ’ என்ற நாயும் நடித்திருக்கிறது. சிபிராஜுக்கு ஜோடியாக அருந்ததி நடித்திருக்கிறார். இவர்களுடன் மயில்சாமி, பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் இப்படத்தையும் இயக்கியுள்ளார். தரண்குமார் இசை அமைத்துள்ளார். நிஸார் ஷஃபி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;