‘அனேகன்’ - இசை விமர்சனம்

‘அனேகன்’ - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 11-Nov-2014 3:16 PM IST Top 10 கருத்துக்கள்

தனுஷ் படப் பாடல்களுக்கு எப்போதுமே தனி எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம். அதிலும் இந்த முறை ‘அனேகன்’ படத்தின் மூலம் முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜுடனும், கே.வி.ஆனந்துடனும் இணைந்திருக்கிறார் அவர். இந்த மூவர் கூட்டணியில் வெளிவந்திருக்கும் ‘அனேகன்’ ஆல்பம் அனைவரையும் கவர்ந்துள்ளதா?

தங்கா மாரி... ஊதாரி...
பாடியவர்கள் : தனுஷ், ‘மரண கானா’ விஜி, நவீன் மாதவ்
பாடலாசிரியர் : ராகேஷ்


‘தொட்டி ஜெயா’வின் ‘தொட்டா பவருடா...’ பாடலை ஞாபகப்படுத்துகிறது இப்பாடலின் ஆரம்ப பீட். ஆனால்... அடுத்தடுத்த வினாடிகளில் பாடல் வேறொரு தளத்திற்கு பயணித்துவிடுகிறது. லோக்கல் சென்னை பாஷையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு ‘மரண கானா’ விஜியின் குரலும், தனுஷின் குரலும் ஏகப் பொருத்தம். டிரம்ஸின் பீட்டும், ராகேஷின் வரிகளும் ‘தங்கா மாரி’க்கு கூடுதல் பலம்!

ரோஜா கடலே...
பாடியவர்கள் : சின்மயி, சங்கர் மகாதேவன், சுனிதி சௌகான்
பாடலாசிரியர் : வைரமுத்து


சின்மயி, சங்கர் மகாதேவனின் குரலில் உருவாகியிருக்கும் இந்த டூயட் பாடலைக் கேட்கும்போது ‘எந்திரன்’ படத்தின் ‘கிளிமாஞ்சாரோ...’வின் ஞாபகம் வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை. வைரமுத்துவின் வரிகள் பாடலுக்கு பெரிய ப்ளஸ். காட்சிகளோடு கேட்கும்போது கூடுதல் கவனம் பெறலாம்.

ஆத்தாடி... ஆத்தாடி...
பாடியவர்கள் : பவதாரிணி, திப்பு, தனுஷ், அபய் ஜோத்புர்கர்
பாடலாசிரியர் : வைரமுத்து


பவதாரியின் மனதை மயக்கும் மெல்லிய குரலில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ‘ஆத்தாடி.... ஆத்தாடி...’. ரொம்பவும் நிதானமாக, அழகாக ஒலிக்கிறது பாடல் முழுவதும் பின்னணியில் இடம்பெற்றிருக்கும் ‘கடம்’ இசை. கூடவே ஆங்காங்கே ஹாரிஸின் கிடாரும் பாடலை மேலும் ரசிக்க வைத்திருக்கிறது. ‘ஆத்துல விழுந்தாக்கூட நிழல் நனையாது...’ இந்த ஒரு வரி போதும்... வைரமுத்துவின் பேனாதான் இதை எழுதியிருக்கும் என்பதற்கு!

யோலோ...
பாடியவர்கள் : ரம்யா என்.எஸ்.கே., ரிச்சர்டு, ஷெய்ல் ஹடா, விக்கி, ஈடன்
பாடலாசிரியர் : சி.எஸ்.அமுதன்


வெஸ்டர்ன் ஆல்பம் ஸ்டைலில் இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறார் ஹாரிஸ். வாழ்க்கையை ஜாலியாக வாழ நினைக்கும் இளைஞர்களுக்கான பாடலாக இதை எழுதியிருக்கிறார் ‘தமிழ்ப்படம்’ இயக்குனர் சி.எஸ்.அமுதன். பாடலின் நடுவேயும், முடிவிலும் விக்கியும், ஈடனும் இணைந்து ‘ராப்’ பிட் ஒன்றைப் பாடிவிட்டு மறைகிறார்கள். இதுவும் கண்களுக்கு விருந்தளிக்கும் பாடலாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

தொடு வானம்...
பாடியவர்கள் : ஹரிஹரண், சக்திஸ்ரீ கோபாலன்
பாடலாசிரியர் : வைரமுத்து


ஹாரிஸ் ஸ்டைல் மெலடி ரகம் இந்த ‘தொடு வானம்...’. ஹரிஹரன், சக்திஸ்ரீயின் குரல்கள் வைரமுத்துவின் வரிகளுக்கு முழுமையான உணர்வைக் கொடுத்திருக்கின்றன. பின்னணியில் இசைக்கப்படும் சின்ன சின்ன ஒலிகள் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார் ஹாரிஸ்.

தெய்வங்கள் இங்கே...
பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
பாடலாசிரியர் : கபிலன் வைரமுத்து


முதல்முறை கேட்கும்போதே மனதோடு தங்கிவிடுகிறது இந்த மென்சோக மெலடி. ‘தெய்வங்கள் இங்கே...’ என ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரல் ஆரம்பமாகும்போதே மனதும் கரைகிறது. கபிலன் வைரமுத்துவின் வரிகளிலும் ஆழம்! எலக்ட்ரிக் கிடார் மூலம் வரிகளுக்கு தொந்தரவு தராத ஒலியை பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் ஹாரிஸ். அனைவருக்கும் பிடிக்கும் ரகம் இது!

ஹாரிஸ் ஜெயராஜின் ஆல்பங்களை முதல் முறையாக கேட்கும்போது ‘இது ஏற்கெனவே அவர் இசையமைப்பில் கேட்ட பாடல்களாயிற்றே’ என்ற உணர்வு தோன்றும். பின்னர் கேட்க கேட்க ஒரு ஆல்பத்திற்கும் மற்ற ஆல்பத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் கொஞ்சம் கொஞ்சமாக புரிபடத்துவங்கும். கடைசியில் அவரின் பழைய ஆல்பம் மறந்து புதிய ஆல்பம் மனதிற்குள் ஒலிக்கத் துவங்கிவிடும். இந்த ‘அனேகன்’ ஆல்பமும் அதற்கு விதிவிலக்கல்ல.

மொத்தத்தில்... ‘அனேகன்’ ஆச்சரியமில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;