ஜெய்ஹிந்த்-2 - விமர்சனம்

ஆக்‌ஷன் அடிதடி மசாலா

விமர்சனம் 10-Nov-2014 12:05 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஸ்ரீராம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் : அர்ஜுன்
நடிப்பு : அர்ஜுன், சுர்வின் சாவ்லா, சிம்ரன் கபூர், ராகுல்தேவ், பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாத்தூர், மனோபாலா.
ஒளிப்பதிவு : எச்.சி.வேணுகோபால்
இசை : அர்ஜுன் ஜெனியா
எடிட்டிங் : கே.கே.

தேசப்பற்றை வலியுறுத்தி ஏற்கெனவே பல படங்களை இயக்கி, தயாரித்து, நடித்துள்ள அர்ஜுன் ஒரு இடைவெளிக்கு பின் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள இப்படத்தில் என்ன கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்?

கதைக்களம்

கராத்தே பள்ளி நடத்தி வரும் அர்ஜுன், பணம் கொடுத்து வேலையில் சேர விருப்பமில்லாமல் நேர்மையான முறையில் வாழ வேண்டும் என்று நினைப்பவர். அவர் வசிக்கும் ஏரியாவிலுள்ள ஏழை தொழிலாளி ஒருவரது மகளுக்கு பெரிய பள்ளி ஒன்றில் படிக்க இடம் கிடைக்கிறது. ஆனால், அந்த பள்ளி நிர்வாகத்தினர் கேட்ட பணத்தை குழந்தையின் பெற்றோர்களால் கட்ட முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்து ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை பார்த்து வெகுண்டு எழும் அர்ஜுன், நாட்டில் உள்ள அத்தனை பள்ளிகளையும் அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும் என்று மீடியாக்களுக்கு பேடி அளிக்க, அதற்கு மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவு கிடைக்கிறது. இதனால் பதறிபோகும் தனியார் பள்ளி அதிபர்கள் ஒன்று சேர்ந்து அர்ஜுனை ஒழித்துக்கட்ட முயற்சிக்கின்றனர். இதிலிருந்து தப்பித்து அர்ஜுன் எப்படி வெற்றி பெறுகிறார் எனபதே ‘ஜெய் ஹிந்த்-2’வின் கதை.

படம் பற்றிய அலசல்

நாட்டில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் தரமான, ஒரே மாதிரியான கல்வி கிடைக்கவேண்டும், அப்போது தான் இந்தியா வல்லரசாக முடியும் என்ற கருத்தை இப்படத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார் அர்ஜுன். அதை சென்டிமென்ட், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக தர முயன்றுள்ளார். ஆனால் படத்தின் நீளம் மற்றும் அதிகபடியான சென்டிமென்ட் காட்சிகள் படத்தை சோர்வடைய வைக்கிறது. அதைப்போல சில இடங்களில் வரும் ‘முதல்வன்’ படத்தை ஞாபகப்படுத்துவது மாதிரியான காட்சி அமைப்புகளையும், பின்னணி இசையையும் தவிர்த்திருக்கலாம்! அதிரடி சண்டை காட்சிகளில் ஹாலிவுட் தரத்தை கொண்டு வந்துள்ள அர்ஜுன், திரைக்கதையிலும் அதே கவனம் செலுத்தியிருந்தால் ‘ஜெய்ஹிந்து’க்கு ஒரு சல்யூட் அடித்திருக்கலாம்!


நடிகர்களின் பங்களிப்பு

அர்ஜுனின் அதே சுறுசுறுப்பு, வேகம், அமைதியான நடிப்பு இப்படத்திலும் தொடர்கிறது. ஒவ்வொரு சண்டை காட்சிக்கும் அவர் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய தனியார் பள்ளி முதலாளிகளின் வாரிசுகளை கடத்தி வந்து பள்ளி நிர்வாகிகளை பணிய வைக்கும் காட்சியில் அர்ஜுனின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது. நல்ல குணம் கொண்ட மற்றும் அமைதியான, அடக்கமான அர்ஜுன் மீது காதல் கொள்ளும் பெண்ணாக சுர்வின் சாவ்லா, நடிப்பில் குறை வைக்கவில்லை. இரண்டாவது நாயகியாக வரும் சிம்ரன் கபூர் கிளாமருக்கு மட்டுமே உதவியிருக்கிறார். காமெடிக்கு பிரம்மானந்தம், மயில் சாமி இருந்தும் காமெடி எடுபடவில்லை. படத்தில் வில்லன்களாக நடித்திருக்கும் அத்தனை பேரும் தங்களது கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1. திரைக்கதையில் இடை இடையே வரும் திருப்பங்களும், ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ள சண்டை காட்சிகளும்
2. எச்.சி.வேணுகோபாலின் நேர்த்தியான ஒளிப்பதிவு
3. பாடல்களும், அதை படமாக்கிய லொகேஷன்களும்

பலவீனம்

1. படத்தின் அதிகபடியான நீளமும், புதுமை இல்லாத திரைக்கதையும்
2. பார்த்து பழகிய காமெடி காட்சிகளும், சென்டிமென்ட் காட்சிகளும்
3. எடிட்டிங்

மொத்தத்தில்

நாட்டில் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையும் வியாபாரமாகி விட்ட கல்விக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்ற கருத்தையும் இப்படத்தில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார் அர்ஜுன். படத்தில் சில குறைகள் இருந்தாலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்காக இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்

ஒரு வரி பஞ்ச் : ஆக்‌ஷன் அடிதடி மசாலா

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;