ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - விமர்சனம்

சிரிக்கவும் சிந்திக்கவும்!

விமர்சனம் 8-Nov-2014 10:15 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்
இயக்கம் : ஆர்.கண்ணன்
நடிப்பு :விமல், சூரி, ப்ரியா ஆனந்த், விசாகா சிங், நாசர், தம்பி ராமையா
ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா
இசை : டி.இமான்
எடிட்டிங் : சூர்யா

‘சேட்டை’ படத்தைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கியிருக்கும் இந்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படம் என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

டாக்டரான ப்ரியா ஆனந்த் தூத்துக்குடியில் ஒரு மருத்துவ முகாமுக்குச் செல்கிறார். அங்கு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் ஒரு ஸ்டீல் ஃபேக்டரியில் வேலை செய்பவர்கள் என்பதை அறிகிறார். தொழிலாளர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பான முறையில் அந்த ஃபேக்டரி செயல்படுவதைத் தெரிந்துகொள்ளும் ப்ரியா ஆனந்த், தக்க ஆதாரங்களை திரட்டி அந்த கம்பெனிக்கு எதிராக வழக்கு தொடர சென்னைக்கு ரயிலில் பயணமாக, அவரை தீர்த்துக்கட்ட வரும் ஆசாமிகளிடமிருந்து பாதுகாக்கிறார்கள் அதே ரயிலில் பயணம் செய்யும் விமலும், சூரியும்! நடந்த விஷயங்களை விமல், சூரியிடம் சொல்ல, ப்ரியா ஆனந்துக்கு உதவும் முடிவோடு மூவரின் பயணம் தொடர, அவர்களை அடியாட்களும் துரத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து நிகழும் பரபர சம்பவங்கள்தான் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’.

படம் பற்றிய அலசல்

நாட்டில் பாதுகாப்பற்ற முறையிலும், சட்டத்திற்கு புறம்பான முறையிலும் செயல்படும் சில கம்பெனிகளால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், பணத்தை விட மனித உயிர்களே முக்கியம், அலட்சியத்தால் ஒரு உயிர் கூட போய் விடக்கூடாது என்று நினைக்கும் டாக்டர்களும் இருக்கிறார்கள் என்பதையும் இப்படத்தின் மூலம் வலியுறுத்தியிருக்கிறார் இயக்குனர் கண்ணன். அதை ஒரு டிராவல் ஸ்டோரி மாதிரி துரத்தல், காதல், காமெடி, அதிரடி ஆக்ஷன் என கலந்து தந்திருக்கிறார். ஆனால் திரைக்கதையில் இருக்கும் சில லாஜிக் மீறல்களும், படத்தின் கதை ப்ரியா ஆனந்த் கேரக்டரை மையப்படுத்தியே நகர்வதால் ஏற்படும் தொய்வுகளையும் பொருட்படுத்தாமல் பார்த்தால் ‘ஒரு ஊரல் ரெண்டு ராஜா’ வரவேற்க வேண்டிய படமே!

நடிகர்களின் பங்களிப்பு

விமலுக்கு இணையாக படம் முழுக்க சூரியும் வருவதால் படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி படத்தில் ரெண்டு ராஜாக்கள் தான். விமல் தனது வழக்கமான நடிப்பால் கவர்கிறார் என்றால், சூரியின் காமெடி படத்திற்கு படம் மெருகேறிக் கொண்டே போகிறது. சூரி போதாதென்று காமெடிக்கு தம்பி ராமையா, சிங்கமுத்து கூட்டணி வேறு! ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றதும் ‘சரக்கை’ வாங்க ஓடும் விமல், ப்ரியா ஆனந்த் இருவரும் முதலில் சந்திக்கும் காட்சி கவிதை ரகம்! இரக்க குண்ம் மற்றும் மனித நேயம் கொண்ட டாக்டர் கேரக்டருக்கு சரியாக பொருந்தியிருக்கிறார் ப்ரியா ஆனந்த். கிளாமரில் மட்டுமல்லாமல், நடிப்பிலும் பளிச்சிடுகிறார் ப்ரியா! கண்களுக்கு குளிர்ச்சியாக அறிமுகமாகி, கடைசியில் கண்கலங்க வைக்கிறார் விசாகா சிங். ஸ்டீல் கம்பெனியின் முதலாளியாக, தூத்துக்குடி வட்டார மொழி பேசிக் கொண்டு வில்லத்தனம் செய்யும் நாசர் அந்த கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறார். ஒரு பாடலைப் பாடியுள்ள லக்ஷ்மி மேனனும் அதற்கு குத்தாட்டம் போட்ட இனியாவும் மனதில் நிற்கிறார்கள்.

பலம்

1. சொல்லப்பட்டுள்ள கதையும், அதை அழகான லொகேஷன்களில் படமாக்கிய விதமும்.
2. டி.இமான் இசையில் அமைந்துள்ள பாடல்களும், முத்தையாவின் ரம்மியமான ஒளிப்பதிவும்.
3. சூரி, சிங்கமுத்து, தம்பி ராமையாவின் காமெடி காட்சிகள்.

பலவீனம்

1. திரைக்கதையில் இருக்கும் சில லாஜிக் மீறல்கள்.
2. சரியாக சொல்லப்படாத நீதிமன்ற காட்சிகள்.

மொத்தத்தில்...

நல்ல பொழுதுபோக்கு விஷயங்களுடன் சில நல்ல கருத்துக்களையும் வலியுறுத்தியுள்ள இப்படத்தின் திரைக்கதையில் இன்னமும் கொஞ்சம் விறுவிறுப்பு சேர்த்திருந்தால் இப்படம் ‘சபாஷ்’ என்று சொல்ல வைத்திருக்கும்.

ஒருவரி பஞ்ச்: சிரிக்கவும் சிந்திக்கவும்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மன்னர் வகையறா - தட்டான போல ப்ரோமோ


;