‘லிங்கா’ - ஃபர்ஸ்ட் லுக் டீஸர் விமர்சனம்

‘லிங்கா’ - ஃபர்ஸ்ட் லுக் டீஸர் விமர்சனம்

கட்டுரை 1-Nov-2014 4:25 PM IST Chandru கருத்துக்கள்

தங்கள் தலைவன் சூப்பர்ஸ்டாரின் தரிசனத்திற்காக கிட்டத்தட்ட 4 வருடங்களாக தவம் கிடக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இடையில் ‘ரா ஒன்’ ஹிந்தி படத்தில் ஒரு காட்சியிலும், ‘கோச்சடையான்’ படத்தில் அனிமேஷன் ரூபத்திலும் ரஜினி காட்சியளித்திருந்தாலும், பழைய ‘மாஸ்’ ரஜினியைப் பார்க்க வேண்டும் என்பதே கோடானு கோடி ரஜினி ரசிகர்களின் ஏக்கம். அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் வெளிவந்திருக்கிறது ‘லிங்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர்.

‘வாட் எ மேன்...’ என டீஸரைப் பார்த்ததும் வாய் பிளக்க வைக்கிறார் 64 வயது ரஜினி என்ற இளைஞர். டீஸரின் முதல் காட்சியே அணைக்கட்டின் மேல் நிற்கும் ரஜினியின் கால்களை மட்டும் காட்டுகிறார்கள். அந்த கால்களுக்கிடையே பயணித்து கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், அணைக்கட்டின் வரலாற்று கல்வெட்டு ஒன்று கண்ணில் படுகிறது. ஒரு நொடியிலேயே மறைந்துபோகும் இந்தக் காட்சியில் ‘லிங்கா’ படத்தில் சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த ரஜினி கேரக்டரின் பெயர் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த பெயர் ராஜ லிங்கேஸ்வரன். அனேகமாக அந்த அணையைக் கட்டியதும் அவராகவே இருக்கும். ராஜ லிங்கேஸ்வரனின் மகன் ரஜினிதான் அணை மீது நிற்பவராக இருக்க வேண்டும்.

பழைய ரஜினியின் ரயில் சண்டைக்காட்சி ஒன்றை கிராபிக்ஸ் யுக்தியுடன் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். அதோடு பழைய ரஜினி கலெக்டராகவோ அல்லது வேறு ஏதோ ஒரு உயர் பதவியிலோ இருப்பதைப் போன்றே ரஜினியின் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டுள்ளது. ராஜ லிங்கேஸ்வரனின் உதவியாளராக இளவரசு நடித்திருக்கிறார். அப்பா ரஜினியுடன் சோனாக்ஷி சின்ஹா டூயட் ஆடுகிறார். அதேபோல் மகன் ரஜினியுடன் அனுஷ்காவும் டூயட் பாடுகிறார். இரண்டு ரஜினிக்குமான உடை, சிகை அலங்காரங்கள் வேறுபட்டாலும், ஸ்டைலைப் பொறுத்தவரை இரண்டு பேருமே ‘தூள்’ கிளப்புவார்கள் என்று தெரிகிறது.

டீஸரின் முடிவில் கோட் சூட் போட்ட ராஜ லிங்கேஸ்வரன் கம்பீரமாக நடந்து வர டிசம்பரில் படம் ரிலீஸ் என்ற வாசகமும் இடம் பெறுகிறது. டீஸரின் பின்னணி இசை உருவாக்கத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போதிய நேரம் ஒதுக்கப்படவில்லையா என்பது தெரியவில்லை. இருந்தாலும் டீஸரின் முடிவில் வரும் இசை கதையின் காலகட்டத்திற்கேற்ப ஒலிக்கிறது. எப்படியும் படத்தில் ரஹ்மான் மிரட்டுவார் என்பதை நாம் சொல்லவும் வேண்டுமா என்ன?

காமெடியர்களின் காட்சி எதுவும் இந்த டீஸரில் இடம்பெறவில்லை. அதேபோல், கதையையும் பெரிதாக வெளிப்படுத்திவிடக்கூடாது என்பதிலும் ‘லிங்கா’ டீம் உஷாராகவே இருந்திருக்கிறது. ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் தந்திருக்கிறது இந்த ‘லிங்கா’ டீஸர். இந்த முறை தலைவர் பிறந்தநாளுக்கு திரையில் தோன்றும் சூப்பர்ஸ்டாருக்கு ரசிகர்கள் கேக் ஊட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;