நெருங்கி வா முத்தமிடாதே - விமர்சனம்

பிரேக் டவுன்!

விமர்சனம் 31-Oct-2014 4:30 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஏவிஏ புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
நடிப்பு : ஷபீர், பியா, விஜி சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், ஏ.எல்.அழகப்பன்
ஒளிப்பதிவு : வினோத் பாரதி
இசை : மேட்லி ப்ளூஸ்
எடிட்டிங் : சபு ஜோசப்

‘ஆரோகணம்’ படத்தைத் தொடர்ந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது ‘நெருங்கி வா முத்தமிடாதே’.

கதைக்களம்

பெட்ரோல் பங்க் ஓனர் ஒய்.ஜி.மகேந்திரன் மகன் ஷபீர் படிப்பில் நாட்டமில்லாததால் சிறு வயதிலிருந்து ஏ.எல்.அழகப்பனின் ஒர்க் க்ஷாப்பில் வேலை செய்து பெரியவனாக வளர்கிறார். ஒரு கட்டத்தில் நாடு முழுவதும் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அந்த நேரத்தில் தன் முதலாளிக்காக அப்பாவின் பெட்ரோல் பங்க்கில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 2000 லிட்டர் டீசலைத் திருடி வந்து, ஏ.எல்.அழகப்பன் சொல்லும் இடத்தில் கொடுப்பதற்காக வெங்காய லோடு லாரியில் ஏற்றிக் கொண்டு புறப்படுகிறார் ஷபீர். நாடே டீசல், பெட்ரோல் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிக்கும் நேரத்தில் 2000 லி டீசலை எதற்காக சபீர் எடுத்துக் கொண்டு செல்கிறார்? யாரிடம் அந்த டீசல் போய்ச் சேரவிருக்கிறது என்பதை சஸ்பென்ஸாக சொல்லியிருப்பதே ‘நெருங்கி வா முத்தமிடாதே’.

படம் பற்றிய அலசல்

ஒரு படத்தில் ஃப்ளாஷ்பேக் என்பது ஒரு முறையோ, இரண்டு முறையோ வருவதுதான் தமிழ் சினிமாவில் வழக்கம். இல்லையென்றால் ஒரே ஒரு ஃப்ளாஷ்பேக்கை படம் முழுவதும் காட்டுவார்கள். ஆனால், இப்படத்தில் நிகழ்காலத்தில் நடப்பதுபோல் ஒரு காட்சி, அதற்கடுத்த காட்சியே ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். ஆனால் சுவாரஸ்யமே இல்லாத இப்படத்தின் திரைக்கதையால், இயக்குனரின் அந்த ‘டெக்னிக்’ ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது. படத்தின் கதைக்கும், டீசல் தட்டுப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

ஒரு சின்ன லாரிப் பயணத்தின் ஊடே சாதிப் பிரச்சனையால் பாதிக்கப்படும் காதல் ஜோடி, கற்பழிக்கப்பட பெண்ணிற்கு பிறந்த மகளின் மன வேதனை, நாட்டையே அச்சுறுத்தும் தீவிரவாதப் பிரச்சனை என பல விஷயங்களை சொல்ல முயன்றதற்காக வேண்டுமானால் இயக்குனரைப் பாராட்டலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

பெரிதாக நடிப்பில் கவரவில்லை என்றாலும் தனக்குக் கிடைத்த கதாபாத்திரத்தை ஓரளவுக்கு சரியாகச் செய்திருக்கிறார் ஷபீர். நாயகி பியாவின் கதாபாத்திரம் எடுபடவில்லை. ஏ.எல்.அழகப்பனின் நடிப்பில் செயற்கைத்தனமே மேலோங்கியிருக்கிறது. ஒய்.ஜி.மகேந்திரனின் நடிப்பு மட்டுமே படத்தில் சொல்லிக் கொள்ளும்படி இருக்கிறது. தம்பி ராமையா, பால சரவணன் ஆகியோரின் காமெடிக்கு தியேட்டரே மௌனமாக திரையை வெறித்துக் கொண்டிருக்கிறது. பெட்ரோலியத்துறை அமைச்சராக ரெண்டு காட்சியில் தலை காட்டியிருக்கிறார் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

பலம்

கதையும், அதை 2 மணி நேரத்திற்குள் சொல்லி முடித்திருப்பதும்!

பலவீனம்

படத்தின் பெரும்பாலான விஷயங்கள்!

மொத்தத்தில்...

டைட்டிலில் இருக்கும் சுவாரஸ்யத்தை படம் முழுவதும் ஏற்படுத்தியிருந்தால் ரசிகர்கள் கூட்டம் தியேட்டரை நெருங்கியிருக்கும்.

ஒருவரி பஞ்ச்: பிரேக் டவுன்!

ரேட்டிங் : 2.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிபுணன் - டிரைலர்


;