கல்கண்டு - விமர்சனம்

இனிக்கவில்லை!

விமர்சனம் 31-Oct-2014 10:43 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ராஜரத்னம் ஃபிலிம்ஸ்
நடிப்பு : கஜேஷ், டிம்பிள் சாப்தே, கஞ்சா கருப்பு, மயில்சாமி
இயக்கம் : ஏ.எம்.நந்தகுமார்
ஒளிப்பதிவு : கே.வி.சுரேஷ்
இசை : கண்ணன்
எடிட்டிங் : சுரேஷ் அர்ஷ்

மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ‘கல்கண்டு’ படத்தின் சுவை எப்படி?

கதைக்களம்

படிப்பில் சுமாரான இளைஞன் கஜேஷ். இவரது அண்ணன் அகில். கஜேஷும் அகிலை போன்று டாக்டருக்கு படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று விரும்புகின்றனர் அவர்களது குடும்பத்தினர். இந்நிலையில் பரீட்சையில் ஃபெயிலாகும் கஜேஷ், அதை பெற்றோர்களிடம் மறைத்து அண்ணன் அகில் உதவியுடன் மந்திரிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து மருத்துவ கல்லூரியில் சேர முயற்சிக்கிறார். சிபாரிசுக்காக மந்திரியிடம் கஜேஷ் கொடுக்கும் விண்ணப்ப எண் தவறாக போக, கஜேஷுக்கு கிடைக்க வேண்டிய சீட் வேறொருவருக்கு கிடைத்து விடுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களும், விறுவிறுப்பான சம்பவங்களுமே ‘கல்கண்டு’.

படம் பற்றிய அலசல்

‘‘படிப்பு, திறமை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும்... அதை ஊக்கபடுத்த வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது’’ என்ற கருத்தை வலியுறுத்துகிறது ‘கல்கண்டு’ படத்தின் திரைக்கதை. அதை காமெடி, காதல், கலாட்டா என கமர்ஷியல் முலாம் பூசி தந்திருக்கிறார் இயக்குனர் நந்தகுமார் (ஜாம்பவான் பட இயக்குனர்).

ஆனால் திரைக்கதையில் போதுமான விறுவிறுப்பும், வேகமும் இல்லாததால் படம் மெதுவாகவே பயணிக்கிறது. இருந்தாலும், படத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன ட்விஸ்ட்களை வைத்து ரசிகர்களுக்கு போராடிக்காமல் பார்த்துக் கொள்கிறது இந்த ‘கல்கண்டு’.

நடிகர்களின் பங்களிப்பு

தன் தாத்தா மற்றும் தந்தையின் பெயரை காப்பாற்றும் விதமாக சிறப்பாக நடித்திருக்கிறார் கஜேஷ். அப்பாவித்தனமான நடிப்பிலும், நடனத்திலும் ஸ்கோர் செய்திருக்கும் கஜேஷ், எமோஷன் காட்சிகளில் இன்னும் அதிக கவனம் செலுத்தி நடித்திருக்கலாம். அமைதியான, அடக்கமான மருத்துவ கல்லூரி மாணவியாக வரும் நாயகி டிம்பிள் சாப்தே, தன் காதலுக்காக போராடும் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். அகிலுக்கு சின்ன வேடம் என்றாலும் மனதில் நிற்கிறார். கஞ்சா கருப்பு, மயில் சாமி, சாமிநாதன், டி.பி.கஜேந்திரன் ஆகியோர் ரசிகர்களை சிரிக்க வைக்க படாதபாடு பட்டிருக்கிறார்கள்.

பலம்

1. படத்தை தொய்வடையவிடாமல் காப்பாற்றும் ட்விஸ்ட் காட்சிகள்
2. கண்ணனின் பின்னணி இசையும், பாடல்களும்
3. கே.வி.சுரேஷின் ஒளிப்பதிவு

பலவீனம்

1. மெதுவாக பயணிக்கும் திரைக்கதை
2. லாஜிக் பற்றி எந்த அக்கறையுமில்லாத காட்சியமைப்புகள்
3. பார்த்து சலித்துப்போன காமெடி காட்சிகள்

மொத்தத்தில்...

படம் பார்க்க வருபவர்களை சிந்திக்க வைக்க வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்படத்தை இயக்கியிருக்கும் நந்தகுமார் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பும், புதுமையும் சேர்த்து இயக்கியிருந்தால், ரசிகர்களின் நாவில் தித்திப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ‘கல்கண்டு’.

ஒருவரி பஞ்ச்: இனிக்கவில்லை!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கல்கண்டு - ட்ரைலர்


;